search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்க்கட்சி தலைவர் போல் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    எதிர்க்கட்சி தலைவர் போல் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்: அண்ணாமலை குற்றச்சாட்டு

    • கடன் வாங்குவதில் 3-வது இடத்தில் இருந்த தமிழகத்தை முதல் இடத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
    • தமிழகத்தில் 18-60 வயதுக்கு உட்பட்ட 19 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர்.

    நாகர்கோவில்:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். குமரி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்களில் 6 சட்டசபை தொகுதிகளில் நடைபயணம் செல்கிறார்.

    முதல் நாளான நேற்று காலை களியக்காவிளையிலிருந்து தனது நடைபயணத்தை தொடங்கி குழித்துறையில் நிறைவு செய்தார். மாலையில் வெட்டுவெந்நியில் இருந்து தொடங்கி இரவிபுதூர்கடையில் முடித்தார். இரவிபுதூர்கடையில் அண்ணாமலை பேசியபோது கூறியதாவது:-

    தமிழகத்தில் கடைசி தொகுதி கிள்ளியூர். ஆனால் அரசியல் மாற்றம் வருவதற்கான முதல் தொகுதியாக இது தெரிகிறது. காமராஜர் விருநகரில் தோற்ற பிறகு அவருக்கு மறுவாழ்வு அளித்த மண். கருணாநிதியின் சூழ்ச்சிகளை தாண்டி அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மண் இது.

    தி.மு.க.வின் திருமங்கலம் பார்முலா, ஈரோடு கிழக்கு பார்முலா, அரவக்குறிச்சி பார்முலா, வாக்குக்கு பணம் இதை எல்லாம் எதிர்த்து நிற்கக்கூடிய மண் கன்னியாகுமரி. இதை இங்கிருந்து தமிழகம் முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும்.

    2014-ல் இந்தியா எப்படி இருந்தது என்று நினைத்து பார்க்க வேண்டும். 2024-ல் முதல் வாக்கு செலுத்த உள்ளவர்கள் பா.ஜனதா பற்றியும், மோடி பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் ஊழல், பணம் கொடுத்தால் தான் மரியாதை என்ற நிலை 2014 வரை இருந்தது. 9 ஆண்டுகளில் சாமானிய மனிதர்களுக்கான ஆட்சியாக மோடி மாற்றி உள்ளார். மோடி மீது மட்டும் அல்ல, மந்திரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கிடையாது.

    மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ10.76 லட்சம் கோடி கொடுத்துள்ளது. தமிழகத்துக்கு மோடி அள்ளி கொடுத்துள்ளார். அவர் எங்கு சொன்றாலும் தமிழ் பற்றி பேசுகிறார். தமிழகத்தின் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்துள்ளார். திருக்குறளை 100 மொழிகளில் மொழி பெயர்க்க கூறியுள்ளார்.

    நீர் இன்றி அமையாது உலகு இது பழமொழி. அதை பீர் இன்றி அமையாது உலகு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். டாஸ்மாக்கை அதிகப்படுத்தியது தான் அவரின் சாதனை. 5 ஆயிரத்துக்கு மேல் டாஸ்மாக் கடைகள் உள்ளன. சாராயம் ஆறாக ஓடுகிறது.

    மதுகுடிப்பவர்களை மதுப்பிரியர்கள் என்று சொல்ல வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். டாஸ்மாக்குக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் அருகே வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நம்பர் ஒன் முதலமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் தன்னை அறிவித்தார். அது மக்களை மது குடிக்க வைப்பதிலும், கடன் வாங்குவதிலும் தான்.

    கடன் வாங்குவதில் 3-வது இடத்தில் இருந்த தமிழகத்தை முதல் இடத்துக்கு கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் 18-60 வயதுக்கு உட்பட்ட 19 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். மதுவிற்று கிடைக்கும் பணம் தொழு நோயாளியின் கையில் இருக்கும் வெண்ணைக்கு சமம் என்று அண்ணா சொன்னார். தமிழகத்தில் பெரும்பாலான மது தி.மு.க.வினர் ஆலையில் இருந்து தான் வருகிறது.

    நாட்டில் 2014 வரை 54 ஆயிரம் மருத்துவ சீட்டுகள் தான் இருந்தன. ஆனால் மோடி வந்த பிறகு 1.6 லட்சம் சீட்டுகளாக உயர்த்தி உள்ளார். தி.மு.க. 6 முறை ஆட்சியில் இருந்து 5 அரசு மருத்துவக்கல்லூரிகளை தான் கொண்டு வந்தார்கள். ஆனால் ஒரே ஆண்டில் 11 கல்லூரிகளை மோடி கொண்டு வந்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி. ஆனால் இப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ளார். குழந்தைகளின் வாழ்க்கையை இவர்களை நம்பி ஒப்படைக்கிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களுக்கு சக்தி இருந்தது. ஆனால் இவர்களுக்கு எதுவும் இல்லை.

    தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் 50-க்கும் மேற்பட்ட படகு கவிழ்ந்து 28 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது ஆமை வேகத்தில் மறுசீரமைப்பு பணி நடக்கிறது. குமரியில் இருந்து 600 லோடு கனிமவளம் கேரளாவுக்கு போகிறது. இங்குள்ள அமைச்சரால் தடுக்க முடியாதா? 2024 தேர்தலில் 400 எம்.பி.களுடன் மோடி ஆட்சி கட்டில் அமருவார்.

    இங்கு ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்தினார். அனைத்து சமுதாயத்தையும் சந்திப்பது தான் பாத யாத்திரை. ஒரு சமுதாயத்தை மட்டும் சந்திப்பது யாத்திரை இல்லை.

    காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த மம்தா எப்படி காங்கிரசுடன் கூட்டணி சேருவார். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிட்டு இவர்கள் எல்லாம் எப்படி கூட்டணி அமைக்க முடியும். இவர்கள் எல்லாம் சேர்ந்து வைத்த கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வேறு.

    கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். முன்னதாக கர்நாடகா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சனை பற்றி பேச செல்லவில்லை என்று கூறினார். இப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.

    அப்போது ஏன் வாயை திறக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் போல் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். கவர்னரின் தேனீர் விருந்தை புறக்கணிக்கிறார். நல்ல வேலை மழை வந்து தேனீர் விருந்து ரத்தாகிவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிரணி தலைவி உமாரதி ராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர்.

    Next Story
    ×