search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி விரைவில் சூறாவளி பிரசாரம்- செல்வப்பெருந்தகை
    X

    தமிழகத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி விரைவில் சூறாவளி பிரசாரம்- செல்வப்பெருந்தகை

    • பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள்.
    • பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்திய மூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும். கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். தம்பியை எதிர்த்து அக்கா தமிழிசை போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.

    பாரதிய ஜனதாவுடன் பா.ம.க. கூட்டணி அமைந்திருப்பதன் மூலம் மூழ்கும் கப்பலில் ஏறி அந்த கட்சி மூழ்கப் போகிறது. தமிழகம் புதுவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பிரசாரம் செய்ய உள்ளார். இவர்களது சுற்றுப்பயண தேதியை விரைவில் அறிவிப்போம்.

    பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பியே நிற்கிறோம். தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் மீண்டும் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பதை வரவேற்கிறோம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களை அவமதித்துள்ளது.

    தேர்தல் பத்திரம் தொடர்பாக பா.ஜனதா ஆதாரங்களை கொடுக்க மறுப்பது ஏன்? பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. பா.ஜனதாவின் முகத்திரை தினம் தினம் கிழிந்து வருகிறது.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, அனந்த சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×