search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக-காங்கிரஸ் கூட்டணியில் 3 தொகுதிகளை குறி வைக்கும் கமல்ஹாசன்
    X

    திமுக-காங்கிரஸ் கூட்டணியில் 3 தொகுதிகளை குறி வைக்கும் கமல்ஹாசன்

    • மக்களிடம் நன்கு பரிச்சயமான தலைவராக கமல் உள்ளார்.
    • இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர் கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

    இதற்கு முன்பு நடை பெற்றுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை தனித்தே சந்தித்த கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளார்.

    கடந்த ஆண்டு நடை பெற்ற ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல்ஹாசன், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளோடு இணக்கமாகவே செயல்பட்டு வருகிறார்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுவது 100 சதவீதம் உறுதியாகி உள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வெளியாக வேண்டியது உள்ளது. இப்படி கூட்டணி உறுதியானாலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் கமல் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மறுக்கிறார்கள்.

    இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேர்ந்து பயணிக்கும்போது கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும். எங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கூட்டணிக்கு நிச்சயம் கைக்கொடுக்கும். இதனை யாரும் மறுக்க மாட்டார்கள். கமல்ஹாசனின் பேச்சை கேட்பதற்கு மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். மக்களிடம் நன்கு பரிச்சயமான தலைவராக கமல் உள்ளார்.

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத் தக்க அளவுக்கு வாக்குகளை வாங்கி எங்களது ஓட்டு வங்கி என்ன? என்பதை நிரூபித்துள்ளோம்.

    எனவே 3 தொகுதிகளை கேட்டு வாங்குவது என்பதில் உறுதியாக உள்ளோம். ஒரு சீட் மட்டும் கொடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் விரைவில் வெளியிட உள்ளார்.

    Next Story
    ×