search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓட்டேரியில் மனைவியை கொலை செய்துவிட்டு சாமியாராக சுற்றிய கணவர்- 2 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
    X

    ரமேசின் பழைய தோற்றத்தையும், சாமியாராக மாறிய பிறகு தாடியுடன் இருப்பதையும் படத்தில் காணலாம்.

    ஓட்டேரியில் மனைவியை கொலை செய்துவிட்டு சாமியாராக சுற்றிய கணவர்- 2 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

    • ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.
    • காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது மனைவி வாணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தார். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    காதல் திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த ரமேஷ் மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் தலையில் கல்லை தூக்கி போட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இதனால் ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.

    போலீசார் தீவிரமாக தேடியும் ரமேஷ் சிக்காமல் ஊர் ஊராக சென்று பதுங்கினார். இதன் பின்னர் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு தாடி வளர்க்க தொடங்கினார். பின்னர் காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ரமேஷை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இணை கமிஷனர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சாமியாராக மாறிய ரமேஷை பிடிக்க களத்தில் இறங்கினர்.

    திருவண்ணாமலை, வடலூர், சதுரகிரி உள்பட சாமியார்கள் அதிகமாக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று ரமேஷ் காவி உடையில் அடையாளம் மாறிப்போய் யாசகம் கேட்டு அந்த பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தது தெரிய வந்தது.

    இந்நிலையில் ரமேஷ், தனது நண்பரான இன்னொரு சாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து நண்பரின் செல்போனுக்கு 'கூகுள் பே' மூலமாக பணம் அனுப்பியது தெரிய வந்தது. இந்த பணத்தை தனது மகன்களிடம் கொடுத்து விடுமாறு நண்பரிடம் போன் செய்து ரமேஷ் கூறியதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சாமியாரின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்.

    இந்நிலையில் ரமேஷ் சாமியார் வேடத்தில் சென்னைக்கு வந்திருப்பதும், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆசிரமத்துக்கு செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீசார் கண்காணித்தனர். அப்போது இன்று அதி காலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதிக்கு வந்த ரமேஷை இன்ஸ்பெக் டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    Next Story
    ×