search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் மீட்ட காட்சி.
    X
    விபத்தில் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் மீட்ட காட்சி.

    நாமக்கல் அருகே கார் சாலை தடுப்பு சுவரில் மோதி தாய்-மகன் பலி

    நாமக்கல் அருகே இன்று காலை கார் சாலை தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பரமத்திவேலூர்:

    மதுரையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் புனேவுக்கு செல்வதற்காக சொகுசு காரில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பைசூதின் சையத் (வயது 58) என்பவர் ஓட்டினார்.

    இன்று காலை 7 மணி அளவில் பரமத்தி பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே கார் வேகமாக சென்றபோது, நாய் ஒன்று திடீரென சாலையில் குறுக்கே புகுந்தது.

    இதனை பார்த்த பைசூதின் சையத், அந்த நாயின் மீது மோதாமல் இருப்பதற்காக காரின் பிரேக்கை பிடித்தார். இந்த திடீர் பிரேக்கினால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் (சென்டர் மீடியன்) டமார் என பயங்கரமாக மோதி மறுபக்கத்தில் உள்ள சாலையில் புகுந்து 3 முறை பல்டி அடித்து சாலையின் பக்கத்தில் உள்ள வீட்டின் முன்பு போய் கார் நின்றது.

    இந்த கோர விபத்தில் காரில் இருந்த பைசூதின் சையத் மனைவி சித்திகா ராணி(55) மற்றும் இவர்களது மூத்த மகன் ஆசீப் சையத்(28) ஆகிய இருவரும் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தனர்.

    பைசூதின் சையத் பலத்த காயம் அடைந்தார். இவரது இளைய மகன்கள் ஜவித் சையத் (23), ரமீஸ் சையத்(20), மகள் ரேஷ்மா சையத் (14) மற்றும் மூத்த மகன் ஆசீப் சையத்தின் மனைவி நசிரின்(27) மற்றும் இவர்களது 2 வயது பெண் குழந்தை ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

    காரில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த அவர்கள் தங்களை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர். அவர்களுடைய மரண ஓலத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் இதனை கண்டு வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு, கீழே இறங்கி அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் அனைவரும் சேர்ந்து காருக்குள் இருந்த எல்லோரையும் மீட்டு வெளியே கொண்டு வந்து சிகிச்சைக்காக வாகனத்தில் ஏற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் பரமத்தி போலீசார், ரோந்து போலீசார் அங்கு வந்து கிரேன் மூலம் சொகுசு காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும், இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பிரேத பரிசோதனைக்காக சித்திகா ராணி, ஆசீப் சையத் ஆகியோர் உடல் நாமக்கல் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. உடலை பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். விபத்தில் சிக்கிய நசிரினின் குழந்தைக்கு நெஞ்சு பகுதியில் உள்காயம் ஏற்பட்டதால், அந்த குழந்தை அழுது கொண்டே இருந்தது.

    விபத்தில் படுகாயம் அடைந்த பைசூதின் சையத்தின் சொந்த ஊர் மதுரை ஆகும். சிறு வயதிலேயே புனேவுக்கு சென்று அங்கு அவர் தொழில் செய்து வந்தார். கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி குடும்பத்துடன் ஒரு சொகுசு காரில் சொந்த ஊரான மதுரைக்கு வந்த பைசூதின் சையத், அங்குள்ள தனது உறவினர் ஒருவருடைய வீட்டில் தங்கினார்.

    பின்னர் மதுரையை சுற்றி பார்த்து விட்டு, உறவினர் வீடுகளுக்கும் சென்று விட்டு குடும்பத்துடன் இன்று அதிகாலை மீண்டும் புனேவுக்கு செல்ல சொகுசு காரில் புறப்பட்டார். நாமக்கல் வழியாக சென்றபோது நாய் காரின் குறுக்கே புகுந்ததால் கோர விபத்து நேர்ந்து காரில் இருந்த தாய், மகன் பலியாகி விட்டனர்.

    விபத்துக்கு காரணமாக இருந்த நாய் காயமின்றி உயிர் தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×