என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இயேசுவுக்கு நன்றி கூறிய ஜெமிமா - மத ரீதியிலான ட்ரோல்களுக்கு முன்னாள் இந்திய வீராங்கனை பதிலடி
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
இந்நிலையில், ஜெமிமா மீதான மத ரீதியான ட்ரோல்களுக்கு முன்னாள் இந்திய வீராங்கனை சிகா பாண்டே பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிகா பாண்டே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆமாம் ஜெமிமா கடவுளுக்குப் பிடித்த குழந்தைதான். நீங்கள் அதற்காக பொறாமைப்பட்டால்... மன்னிக்கவும், யாரும் உங்களுக்கு உதவ முடியாது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.






