search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை- விராட் கோலி பேட்டி

    நான் இந்திய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றபோது, இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்தது. இப்போது நீண்ட காலமாக முதலிடத்தில் இருக்கிறது என கூறினார்.
    கேப் டவுன்:

    இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கேப் டவுனில் நடைபெறவுள்ளது. 

    இதற்கு முன் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா ஒரு போட்டியிலும், தென் ஆப்ரிக்கா ஒரு போட்டியிலும் வென்று 1-1 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. 

    2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை. மேலும் விராட் கோலி 2 வருடங்களாக சதம் அடிக்காதது குறித்தும், சொற்ப ரன்களின் அவுட் ஆவது குறித்தும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

    இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள 3-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ள விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    நான் சரியாக விளையாடவில்லை என பலரும் பேசி வருவது குறித்து எனக்கு கவலை இல்லை. நான் சரியான செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது திறமை குறித்து பலரும் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போதே பலர் நான் விளையாடும் தகுதியை இழந்துவிட்டதாக கூறினர். ஆனால் நான் எனக்கென்று சில தகுதிகளை வைத்துள்ளேன். என் அணிக்கு எது சிறந்ததோ அதை செய்வதில் தான் பெருமைப்படுகிறேன்.

    ஒரு போட்டியில் முக்கியமான கட்டத்தில் அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை தருவதில் தான் ஒரு வீரருக்கான பெருமை இருக்கிறது. எண்களை வைத்து நான் என்னை மதிப்பிட்டுக்கொள்ளவில்லை. நான் இப்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறோனோ அவற்றிலேயே திருப்தியாக இருக்கிறேன். நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

    விராட் கோலி

    நான் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டபோது இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்தது. இப்போது நாம் முதல் இடத்தில் நீண்ட காலமாக இருக்கிறோம். 7-வது இடம் எப்படி இருக்கும் என்பதே பலருக்கு நினைவில் இருக்காது.

    எல்லோரும் தவறு செய்வார்கள். நாம் செய்த ஒரு தவறை, அடுத்த 7,8 மாதங்களுக்கு திரும்பி செய்யாத வரை பிரச்சனை இல்லை என தோனி கூறினார். அந்த பாடம் இன்னும் என் மனதில் இருக்கிறது.

    காயம் காரணமாக முகமது சிராஜ் நாளைய போட்டியில் பங்கேற்க மாட்டார். அவரை போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்.

    இவ்வாறு விராட் கோலி கூறினார்.
    Next Story
    ×