search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாட்ரிக் எடுத்த குல்தீப் யாதவ்
    X
    ஹாட்ரிக் எடுத்த குல்தீப் யாதவ்

    ஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தல் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா தொடரை சமன் செய்தது

    ரோகித், ராகுல் சதமடிக்க, குல்தீப் யாதவ் ஹாட்ரிக் எடுத்து அசத்த வெஸ்ட் இண்டீசை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை சமன் செய்தது இந்தியா அணி.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் ஒன்று, இரண்டு என ரன்களை எடுத்தனர். கிடைத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தவறவில்லை. இருவரும் சிறப்பாக ஆடி சதமடித்தனர். 

    முதல் விக்கெட்டுக்கு ராகுல், ரோகித் சர்மா ஜோடி 227 ரன்கள் எடுத்தது. ராகுல் 102 ரன்னில் அவுட்டானார். கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    ரோகித் சர்மா 138 பந்துகளில் 5 சிக்சர், 17 பவுண்டரி என 159 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்தார். அவர் 53 ரன்னும், ரிஷப் பந்த் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 388 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்து அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 75 ரன்னில் வெளியேறினார். இறுதியில், கீமோ பால் போராடி 46 ரன் எடுத்து அவுட்டானார். 

    ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 280 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். மொகமது ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.

    இரு அணிகளில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
    Next Story
    ×