search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி
    X

    ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி

    12-வது ஐ.பி.எல். போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது. #IPL2019 #CSK #RCB
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 12-வது தொடர் இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

    தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின. 

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட்கோலியும், பர்திவ் பட்டேலும் களம் இறங்கினர். சுழலில் ஹர்பஜன் சிங் கலக்கினார். தடுமாறிக் கொண்டிருந்த கோலி 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த மொயீன் அலியை 9 ரன்னில் திருப்பி அனுப்பினார். 

    தொடர்ந்து மிரட்டிய இவர் அபாயகரமான டிவிலியர்சையம் 9 ரன்னில் அவுட்டாக்கினார். ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 2 ரன்னுக்கு இம்ரான் சுழலில் சிக்கினார். இறுதியில் பெங்களூரு அணி 17.1 ஓவரில் 70 ரன் எடுத்து சுருண்டது. 

    சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், பிராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்

    பின்னர் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சனும், அம்பதி ராயுடும் நிதானமாக விளையாடினர். 10 பந்தை சந்தித்த வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 19 ரன் எடுத்து நடையை கட்டினார். அடுத்ததாக களம் இறங்கிய ஜாதவ், ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் ராயுடு 28 ரன் எடுத்திருந்த நிலையில் போல்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த ஜடேஜா ஜாதவ்வுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17. 4 ஓவரில் 71 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. #IPL2019 #CSK #RCB
    Next Story
    ×