என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 24வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  லைகா கோவை கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.  

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி, ஜெகதீசன், சுஜய், ராஜகோபால் சதீஷ், ஹரிஷ் குமார், ஜெகனாத் ஸ்ரீனிவாஸ், சசிதேவ், சோனு யாதவ், சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த், அலேக்ஸாண்டர்.

    லைகா  கோவை கிங்ஸ்: கங்கா ஸ்ரீதர், வெங்கட்ராமன், சாய் சுதர்சன், ஷாரூக் கான், முகிலேஷ், கவின், அபிஷேக் தன்வார், அஜித் ராம், செல்வா, திவாகர், வள்ளியப்பன் .
    எம்.எஸ்.டோனி தனது ஓய்வு முடிவைக்கூட தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அவரது ஹேர் ஸ்டைல் இணையதளத்தில் வைரலாகி வந்தது. 

    அந்த ஹேர் ஸ்டைலில் இருந்த போட்டாவை அவரது ரசிகர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிகமாக ஷேர் செய்தனர். 

    இந்நிலையில் தற்போது அவரை பற்றிய ஒரு செய்தி பெரிதும் வைரலாகி வருகிறது. எம்.எஸ்.டோனியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் புளூ டிக்கை நீக்கியது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

    எம்எஸ் டோனி டுவிட்டர் பக்கம்

    நீண்ட நாட்களாக ட்வீட் செய்யப்படாததால் டோனியின் டுவிட்டர் பக்கத்திற்கான புளூ டிக் நீக்கப்பட்டது. புளூ டிக்கை நீக்கியது ஏன்? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. பின்னர் சில மணி நேரங்களில் டோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு  புளூ டிக் வழங்கப்பட்டது.

    ஜனவரி 8ம் தேதிக்கு பிறகு டோனி தனது டுவிட்டர் பக்கத்தில் எந்த பதிவும் போடவில்லை. தனது ஓய்வு முடிவைக்கூட டுவிட்டரில் தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். டுவிட்டரில் டோனியை பலர் ட்ரோல் செய்ததால், டுவிட்டரில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

    ஒலிம்பிக் பயிற்சிக்காக லால்ரெம்சியாமிக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று மிசோரம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
    ஐசால்:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தது. எனினும், ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருப்பதால் பாராட்டுகள் குவிகின்றன.

    இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இடம்பெற்ற மிசோரம் வீராங்கனை லால்ரெம்சியாமிக்கு அரசு வேலை மற்றும் சொந்த ஊரில் வீட்டு மனை வழங்கப்படும் என முதல்வர் ஜோரம்தங்கா அறிவித்துள்ளார். ஒலிம்பிக் பயிற்சிக்காக அவருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
    இந்திய வீரர் பஜ்ரங் புனியா, அரையிறுதியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை விளையாட உள்ளார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பிற்பகல் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் ஹாஜி அலியேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே அஜர்பைஜான் வீரர் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை பெற்றார். அவரது உடும்பு பிடியில் சிக்காமல் கடுமையாக போராடினார் பஜ்ரங் புனியா. எனினும் இறுதியில் 5-12 என்ற புள்ளி கணக்கில் புனியா தோல்வியைத் தழுவினார்.

    அரையிறுதியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் அல்லது செனகல் வீரருடன் நாளை விளையாட உள்ளார் புனியா.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்டாலும் பெண்கள் ஆக்கி அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய மகளிர் ஆக்கி அணியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒலிம்பிக்கில் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டாலும் பெண்கள் ஆக்கி அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணி சிறந்த நிலையை எட்டியுள்ளது.

    அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தனர். தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர். இந்த சிறந்த அணியால் இந்தியா பெருமை அடைகிறது.

    இந்திய மகளிர் ஆக்கி அணி வீராங்கனைகள்

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்ற இந்த வெற்றி இந்தியாவின் இளம் தலைமுறை வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பது முக்கியமானது. இந்திய மகளிர் ஆக்கியை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன்.

    இந்திய அணியின் சிறப்பான செயல்திறனை எப்போதும் நினைவில் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...ஆக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு - பஞ்சாப் அரசு அறிவிப்பு

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. நெல்லை பெற்ற 3-வது வெற்றியாகும். மதுரை 3-வது தோல்வியை தழுவியது.

    19-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 7 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் நெல்லையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சேலம் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் திண்டுக்கல் அணியை 24 ரன் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் மதுரை அணியை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது .

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் கோவையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கோவை அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது.

    பார்சிலோனா கிளப்பிற்கு பல வெற்றிகளை தேடிக்கொடுத்தவரும், ஒரே கிளப்பிற்கான அதிக கோல்கள் அடித்தவரும் என்ற பெருமைக்குரியவர் மெஸ்சி.
    பார்சிலோனா:

    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    சமீபத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக இதுவரை 672 கோல்கள் அடித்து உள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.  

    பார்சிலோனா கிளப்பில் இருந்து  நெய்மர் வெளியேறியதிலிருந்தே, மெஸ்சிக்கும் கிளப்புக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. கடந்த வருடம் மெஸ்சி வெளியேறுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஒப்பந்தம் முடிவடையாத காரணத்தால் மெஸ்சியை வாங்கும் அணி மிகப்பெரிய தொகையை (டிரான்ஸ்பர் பீஸ்) கொடுக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மெஸ்சி பார்சிலோனா கிளப்பிலேயே நீடித்தார்.

    மனக்கசப்பு ஏற்பட்ட போதிலும், அடுத்த சில வருடங்களுக்கு மெஸ்சியை தக்க வைத்து கொள்ள பார்சிலோனா கிளப் தயராக இருந்தது. இதற்கான ஒப்பந்தமும் தயாராகின. ஆனால் பொருளாதாரம்  மற்றும் கட்டமைப்பு காரணமாக ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் மெஸ்சி பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுவதாக அந்த கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக எந்தவித டிராஸ்பர் பீஸ் இல்லாமல் மெஸ்சி வேறு அணிக்கு செல்லலாம்.

    கடந்த 2000-ம் ஆண்டு இளம் வீரராக பார்சிலோனா அணியில் இணைந்த லியோனல் மெஸ்சி 21 ஆண்டுகளுக்களாக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
    20 கிமீ நடைபந்தயத்தில் தங்கம் வெல்வதையே குறிக்கோளாக கொண்டிருந்த போலந்து வீரர், 50 கிமீ நடைபந்தயத்தில் பங்கேற்ற 2-வது போட்டியிலேயே தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஆண்களுக்கான 50கிமீ நடைபந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் குர்ப்ரீத் சிங் பந்தய தூரத்தை முடிக்க முடியாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.

    இந்த போட்டியில் போலந்து வீரர் தாவித் டோமாலா பந்தய தூரத்தை 3 மணி 50 நிமிடம் 8 வினாடிகளில் (3:50:08) கடந்து தங்கப்பதக்கம் வென்றார். ஜெர்மனி வீரர் ஜோனாதன் ஹில்பெர்ட் 3 மணி 50 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். கனடா வீரர் எவன் டன்ஃபீ 3 மணி 50 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இதில் என்ன விஷேசம் என்றால் தங்கப்பதக்கம் வென்ற போலந்து வீரர், அவரது வாழ்நாளிலேயே இதற்கு முன் ஒருமுறைதான் 50கிமீ நடைபந்தயத்தில் கலந்து கொண்டுள்ளாராம். தற்போது 2-வது முறையாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இதுகுறித்து போலந்து வீரர் தாவித் டோமாலா கூறுகையில் ‘‘இது எனக்கு மிகவும் சிறப்பானது. இதை என்னால் நம்பமுடியவில்லை. நான் 15 வயதில் என்னுடைய பயிற்சியை தொடங்கும்போது, ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என விரும்பினேன். இதற்காக கடுமையான  வகையில் பயிற்சி மேற்கொண்டேன்.

    முதலில் நான் 20கிமீ நடைபந்தயத்தில்தான் தங்கப்பதக்கம் வெல்ல விரும்பினேன். ஆனால், இந்த வருடம் எல்லாமே மாறிவிட்டது. டுடின்ஸில் நான் 50கிமீ நடைபந்தயத்தில் கலந்து கொண்டேன்.  எனது வாழ்நாளிலேயே இது 2-வது 50கிமீ நடைபந்தய போட்டியாகும். இதில் தங்கம் வென்றுள்ளேன். இது வேடிக்கையாக உள்ளது. சரிதானே?’’ என்றார்.
    பதக்க எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், சீனாவை விட 4 தங்கப்பதக்கம் குறைவாக பெற்று தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது அமெரிக்கா.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா, சீனாவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பொதுவாக பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்போது சீனா ஆதிக்கம் செலுத்தும்.

    தடகள போட்டிகள் தொடங்கியதும் அமெரிக்கா அதிகமான பதக்கங்களை பெற்று முன்னிலை பெறும். நீச்சல் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும்.

    ஆனால் இந்த முறை தடகள போட்டிகள் தொடங்கி இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. போட்டி முடிவடைய இன்னும் 3 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில்,  சீனாவே தங்கப்பதக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    சீனா இன்று காலை 10.45 மணி நிலவரப்படி 34 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 74 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

    கோப்புப்படம்

    அமெரிக்கா 30 தங்கம், 35 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. பதக்க எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் பெற்றாலும், தங்கத்தில் சீனாவை விட நான்கு குறைவாக உள்ளது. தங்கப்பதக்கத்தில் சீனாவை முந்தினால் மட்டுமே, டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்க முதலிடம் பிடிக்க முடியும்.

    ஜப்பான் 22 தங்கப்பதக்கத்துடன் 3-வது இடத்திலும், 17 தங்கத்துடன் ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும், 16 தங்கத்துடன் ரஷியா மற்றும் இங்கிலாந்து முறையே 5-வது மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளது.
    கிர்கிஸ்தான், ஈரான் வீரர்களை வீழ்த்திய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்திற்கான வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல்  65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா கிர்கிஸ்தானைச் சேர்ந்த எர்னாஸர் அக்மாட்டாலிவை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்ற பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் ஈரானைச் சேர்ந்த மோர்ட்டேசா சியாசி செகாவை எதிர்கொண்டார். 2-1 என முன்னிலைப் பெற்றிருந்த பஜ்ரங் புனியா, 4.56 நிமிடத்தில் ஈரான் வீரரை கீழே சாய்த்து இரண்டு தோள்பட்டையும் தரையில் படும்படி அழுத்திப்பிடித்தார். இதனால் கீழே வீழ்த்திய முறையில் (Victory by Fall) பஜ்ரங் புனியா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

    இதன்மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர் ஹஜி அலியேவ்-ஐ எதிர்கொள்கிறார்.
    பெனால்டி கார்னர் மூலம் இங்கிலாந்து 4-வது கோலை அடித்து முன்னிலை பெற, இந்திய வீராங்கனைகள் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவினர்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஆக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி முதன்முறையாக ஒலிம்பிக்கில் பதக்கத்தை வெல்லும் நோக்கத்தில் இங்கிலாந்தை எதிர்த்து களம் இறங்கியது.

    முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. 16-வது நிமிடத்தில் இங்கிலாந்து 16 மற்றும் 24-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    ஆனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக விளையாடிய இந்தியா அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தது. இந்தியா வீராங்கனை குர்ஜித் கவுர் 25 மற்றும் 26-வது நிமிடத்தில்  கோல் அடித்து அசத்தினார். அதோடு இல்லாமல் 29-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா ஒரு கோல் அடிக்க இந்தியா 3-2 என முன்னிலைப் பெற்றது.

    3-வது கால் பகுதியில் இங்கிலாந்து வீராங்கனைகள் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். அடிக்கடி பந்தை இந்திய கோல் கம்பம் அருகில் கடத்திச் சென்றனர். இங்கிலாந்தின் கோல் அடிக்கும் பல வாய்ப்புகளை இந்திய கோல்கீப்பர் அருமையாக தடுத்தார். இருந்தாலும் 35-வது நிமிடத்தில் இங்கிலாந்து மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 3-3 என சமநிலைப் பெற்றது. 

    3 கால் பகுதியின் கடைசி வினாடியில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக மாற்ற இந்திய வீராங்கனைகள் தவறினர். இதனால் 45 நிமிட  (3-வது கால் பகுதி) ஆட்ட முடிவில் ஸ்கோர் 3-3 என சமநிலைப் பெற்றது.

    இங்கிலாந்து வீராங்கனைகள்

    4-வது கால் பகுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு அடிக்கடி பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்தி கோல் அடித்தனர். இதனால் இங்கிலாந்து 4-3 என முன்னிலைப் பெற்றது.

    கடைசி 12 நிமிடங்களில் இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சித்தனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் இந்திய பெண்கள் அணி 3-4 எனத் தோல்வி அடைந்து, ஆக்கி வரலாற்றில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அரிதான வாய்ப்பை இழந்தனர்.
    இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துனிசியா வீராங்கனையிடம் 1-3 எனத் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
    டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துனிசியாவின் சாரா ஹம்டியை எதிர்கொண்டார்.

    இதில் 1-3 என சீமா பிஸ்லா தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
    ×