என் மலர்
செய்திகள்

இந்திய வீராங்கனையை சுற்றி வளைக்கும் இங்கிலாந்து வீராங்கனைகள்
ஆக்கி: இந்திய வீராங்கனைகள் போராடி தோல்வி- வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டனர்
பெனால்டி கார்னர் மூலம் இங்கிலாந்து 4-வது கோலை அடித்து முன்னிலை பெற, இந்திய வீராங்கனைகள் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவினர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஆக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி முதன்முறையாக ஒலிம்பிக்கில் பதக்கத்தை வெல்லும் நோக்கத்தில் இங்கிலாந்தை எதிர்த்து களம் இறங்கியது.
முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. 16-வது நிமிடத்தில் இங்கிலாந்து 16 மற்றும் 24-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக விளையாடிய இந்தியா அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தது. இந்தியா வீராங்கனை குர்ஜித் கவுர் 25 மற்றும் 26-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அதோடு இல்லாமல் 29-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா ஒரு கோல் அடிக்க இந்தியா 3-2 என முன்னிலைப் பெற்றது.
3-வது கால் பகுதியில் இங்கிலாந்து வீராங்கனைகள் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். அடிக்கடி பந்தை இந்திய கோல் கம்பம் அருகில் கடத்திச் சென்றனர். இங்கிலாந்தின் கோல் அடிக்கும் பல வாய்ப்புகளை இந்திய கோல்கீப்பர் அருமையாக தடுத்தார். இருந்தாலும் 35-வது நிமிடத்தில் இங்கிலாந்து மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 3-3 என சமநிலைப் பெற்றது.
3 கால் பகுதியின் கடைசி வினாடியில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக மாற்ற இந்திய வீராங்கனைகள் தவறினர். இதனால் 45 நிமிட (3-வது கால் பகுதி) ஆட்ட முடிவில் ஸ்கோர் 3-3 என சமநிலைப் பெற்றது.

4-வது கால் பகுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு அடிக்கடி பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்தி கோல் அடித்தனர். இதனால் இங்கிலாந்து 4-3 என முன்னிலைப் பெற்றது.
கடைசி 12 நிமிடங்களில் இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சித்தனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் இந்திய பெண்கள் அணி 3-4 எனத் தோல்வி அடைந்து, ஆக்கி வரலாற்றில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அரிதான வாய்ப்பை இழந்தனர்.
Next Story






