என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- சொற்களைச் சூத்திரம்போல் பயன்படுத்த வேண்டும்.
- கவனத்துடன் ஆற்றல் சிதைந்து போகாமல் கையாள வேண்டும்.
சொற்களைச் சூத்திரம்போல் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டுள்ள வாசகப் பெருமக்களே! வணக்கம்.
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! அதைத் தொழுது படித்திடடி பாப்பா!" என்பார் மகாகவி பாரதி. உலகின் எல்லா மொழிகளிலும் சொற்கள் சிறந்த பெருமைக்கு உரியவைதான் என்றாலும், சொற்களின் இனிமை, அருமை, தொன்மை, புதுமை, பெருமை, எளிமை, பொருண்மை போன்ற தன்மைகளின் அடிப்படையில் உயர்வான இடத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியது தமிழ்ச் சொல் என்கிறார் பாரதி.
அதிலும் உயர்ந்த இடத்தில் என்றால், அச்சொற்களைப் பயன்படுத்தும் போதெல்லாம், பயபக்தியோடு வணக்கத்துடன் பயன்படுத்த வேண்டும் என்கிறார். சொல்லுக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறது அதனைக் கவனத்துடன் ஆற்றல் சிதைந்து போகாமல் கையாள வேண்டும்.
"ஒரு சொல் கொல்லும்! ஒரு சொல் வெல்லும்!" என்பது நமது பழந்தமிழ்ப் பழமொழி. கவனக்குறைவாகக் கையாண்டு விட்டால் வெல்லுகிற சொல்கூடக் கொல்லுகிற சொல்லாக மாறிவிடும் என்பதற்கு அன்றாட நடைமுறைதொட்டு அக்கால வரலாறுவரை நிறையச் சான்றுகள் உண்டு.
பாண்டிமாதேவியின் காணாமற்போன காற்சிலம்பு ஒன்றுடன் கள்வன் ஒருவன் பிடிபட்டான் என்கிற தகவலைக் கேட்டவுடன், "கள்வனைக் கொன்றச் சிலம்பு கொணர்க!" எனப் பாண்டியமன்னன் கூறியதாகச் சிலப்பதிகாரத்தில் ஒரு செய்தி உண்டு.
சிலம்பு காணாமற்போன பதற்றத்தில் இருந்த பாண்டியன் செவியில் கள்வனும் சிலம்பும் கிடைத்துவிட்டன என்று விழுந்த செய்தி, மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியதால், 'கள்வனைக் கொண்டு அச்சிலம்பைக் கொணர்க!
அந்த திருடனோடு சிலம்பையும் கொண்டு வாருங்கள்! என்பதற்குப் பதிலாக, நாக்குத் தடுமாறக், "கொன்று" அச்சிலம்பு கொணர்க என்று வந்துவிட்டது. இந்தச் சொல் தடுமாற்றம், விசாரிக்கப் படாமலேயே கோவலனைக் கொலைக்களப்பட வைத்துவிட்டது;

பாண்டிய மன்னனை நீதி தடுமாற வைத்து அவனது உயிரையும் அவனது மனைவியின் உயிரையும் காவு வாங்கி விட்டது.
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!"
என்கிற வள்ளுவம். சொல்லுகிற சொல்லெல்லாம் வெல்லுகிற சொல்லாக இருக்க வேண்டும். வெல்லுகிற சொல்லிலும் பிறிதோர் சொல்லைப் போட்டால், அதனைச் சமப்படுத்தி நிரப்பிவிடும் சொல்லாகவும் இருக்கக் கூடாது.
" மந்திரம்போல் சொல்லின்பம் வேண்டுமடா!" என்பது பாரதி வலியுறுத்தும் சொற்களின் உறுதித்தன்மை. சொற்கள் இனிமை பயப்பதாய் இருக்கவேண்டும்; அதே நேரத்தில் மந்திரம்போலச் சக்தியூட்டப்பெற்ற ஆற்றல்மிக்க சொற்களாகப் பயன் விளைவிப்பவையாக இருக்க வேண்டும்.
சொற்களைக் கல்வியறிவினாலும் சிந்தனை ஊற்றத்தாலும் பெருக்கத் தெரிந்த அறிஞர்களும் ஞானிகளுமே நிறைமொழி மாந்தர்கள் எனப் போற்றப்படுவார்கள். அவர்களின் திருவாயிலிருந்து கிளம்பி வருகிற சொற்களெல்லாம் உடனடிப் பயன் விளைவிக்கிற சொற்களாகத் திகழ்வதால், அவை மந்திரச் சொற்களாகப் போற்றப் படுகின்றன.
நல்ல சிந்தனையாளர்கள், நல்லெண்ணம் கொண்ட பெரியோர் வாயிலிருந்து வருகின்ற எல்லாச் சொற்களுமே மந்திரச் சொற்களாகும். ஏனெனில் அச்சொற்களின் நோக்கம் உலக மக்களின், உலக உயிரினங்களின் நன்மை கருதியதாகவே இருக்கிறது.
நம்மிடமிருந்து அன்றாடம் புறப்பட்டு வருகிற சொற்கள் பலதிரப்பட்டவையாக இருக்கின்றன. பெரும்பாலான சொற்கள் அர்த்தமற்ற சொற்களாக இருக்கின்றன; இவை நம்முடைய அறிவீனத்தை, முட்டாள் தனத்தை வெளிப்படுத்துகின்றவையாகவே அமைந்து விடுகின்றன.
இவற்றைக் கேட்போர் எளிதில் நம்மைப் புத்தியற்றவர்கள் என விலக்கிவிட வாய்ப்பு உண்டு. சில சொற்கள் நம்முடைய கவலைகளை, இயலாமையைச், சோகங்களைச் சுமந்து வருகிற சொற்களாக இருக்கின்றன.
இவற்றைக் கேட்போர் நம்மீது கழிவிரக்கம் கொண்டு நம்மைப் பாவப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்பதற்காகவே சொல்லப்படுவது. சிலருடைய சொற்கள் அவர்களுடைய தற்பெருமையையும் ஆணவத்தையும் பறைசாற்றுபவையாக இருக்கும்.
பல சொற்கள் நமது எரிச்சல்களையும் கோபங்களையும் தீக்கனைகளாகத் தாங்கிகொண்டு வெளி வரும். கோபமும் எரிச்சலும் கொள்பவரையும் நோய்ப்படுத்திவிடும்; கேட்கிறவரையும் காயப்படுத்திவிடும்.
"சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
இனமென்னும்
ஏமப் புனையைச் சுடும்"
நமக்கு வருகிற கோபத்தால் நாம் பாதிக்கப்படுவதோடு, நாம் வெளிப்படுத்துகிற சுடுசொற்கள் நமக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக் கூடிய உறவினர், நட்பினர் யாவரையும் நம்மைவிட்டு நீங்கும்படிச் செய்து விடும் என்கிறார் திருவள்ளுவர்.
கையில், பழுத்த சுவையான கனிகள் இருக்கும்போது, சுவையற்ற, கசக்கின்ற, துவர்க்கின்றை காய்களை யாராவது தேடிச்சென்று பறித்து உண்பார்களா? அதைப்போன்றது தான் நமது அன்னைத் தமிழில் உய்ர்வான அழகிய தமிழ்ச்சொற்கள் எண்ணற்றவை இருக்கத் தீய சொற்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவது.
'இன்சொலால் ஈரம் அளைஇ' என்ற தொடரில் ஒவ்வொரு மனிதனும் இன்பம் விளைவிக்கின்ற ஈரமான சொற்களையே பேசவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
அதனால்தான் நாம் பேசுவதற்குப் பெரிதும் பயன்படுகிற நாக்கை எப்போதும் ஈரப்பதத்திலேயே வைத்திருப்பதற்காக உமிழ்நீரில் அதனை ஊறிக்கொண்டே கிடக்கும் வண்ணம் கடவுள் செய்திருக்கிறார்.
மனத்தில் எண்ணும்போது கோபமாகவும் வேகமாகவும் சொற்கள் கிளம்பி வந்தாலும் நாக்கும் அன்னங்களும் இருக்கின்ற வாய்ப்பகுதியைத் தாண்டும்போது, அவற்றின் சூடு தணித்து இனிமையாக வெளியேற்றப்பட வேண்டும்.
ஒருவரை ஒருவர் இணைத்துக்கொள்ளச் சொற்கள் இணைப்புப் பாலங்களாக இருக்கின்றன. அவற்றைத் தடித்த சொற்களற்ற அன்புப் பாலங்களாக அமைத்துக்கொள்ள வேண்டியது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். ஒன்றை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.
அருகருகே இருவர் நின்று பேசிக்கொண்டிருந்தால், இயல்பான பேச்சு என்றால் அது சத்தமற்ற பேச்சாக இருக்கும்; கோபமாகப் பேசிக்கொண்டிருந்தால் சத்தம் கூடியதாக இருக்கும். ஒலியளவு கோபத்தில் கூடுவதற்குக் காரணம், அவர்கள் உடலளவில் அருகருகே இருந்தாலும், மனத்தளவில் வெகுதொலைவிற்குப் பிரிக்கப்பட்டு விட்டதாக நினைப்பதே காரணம்.
'நான் இயல்பாக இருக்கும்போது நல்ல நல்ல கனிவான சொற்களையே பேசுகிறேன்; ஆனால் கோபம் வந்துவிட்டால், இந்தக் கெட்ட கெட்ட சொற்களெல்லாம் எங்கிருந்துதான் எனக்குள் வருகின்றனவோ தெரியவில்லை.
கோபத்தில் தடித்த சொற்களைத் தாறுமாறாய்ப் பேசிவிட்டுப், பிறகு அதற்காக எவ்வளவு வருத்தப்பட்டாலும், மன்னிப்புக் கேட்டாலும் தீர்வே கிடைப்பதில்லை' என்று வருத்தப்படலாம். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குமுன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது வாழ்க்கையில் மிகமிக முக்கியம்.
`நெல்லைக் கொட்டினால் அள்ளிவிட முடியும்; சொல்லைக் கொட்டினால் அள்ளவே முடியாது' என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் கோபமே படக்கூடாது என்பதில் மிகவும் கட்டுப்பாடோடு இருந்தான். ஒருநாள் கண்மண் தெரியாமல் கோபம் வந்து விட்டது.
வீட்டு வாசலில் உட்கார்ந்து போகிற வருகிறவர்கள் எல்லோரையும் பார்த்து, வாய்க்கு வந்தபடித் திட்டித் தீர்த்துக் கொண்டே இருந்தான். மாலை வந்தது; இரவும் வந்தது. ஒருவாறு கோபம் தணிந்தது.
வீட்டிற்குள் சென்று இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுப் படுக்கையில் படுத்து யோசிக்கத் தொடங்கி னான். காலையில் இருந்து நாம் திட்டிய சொற்களை எப்படித் திரும்பப் பெறுவது?. பதிலொன்றும் பிடிபடவில்லை; உறங்கி விட்டான்.
மறுநாள் காலை எழுந்தவுடன் கிராமத்திற்கு அருகிலிருந்த ஒரு வனத்திற்குள் சென்றான். அடர்ந்த வனத்திற்குள் ஒரு துறவி தவமிருந்து கொண்டி ருந்தார். அவர் முன்னே நின்று வணங்கினான் இளைஞன்.
கண்விழித்துப் பார்த்த துறவி என்ன விஷயம்? என்று கேட்டார். நேற்றுத், தான் கோபமாக இருந்த செய்தியையும், அதனால் தெருவில் போகிற வருகிறவர்களை எல்லாம் திட்டிக்கொண்டே இருந்ததையும் கூறினான்.
கோபம் தீர்ந்தவுடன், திட்டிய சொற்களை எல்லாம் திரும்பப் பெறுவது எப்படி? என யோசித்ததாகவும், வழி தெரியாததால் துறவியிடம் வழிகேட்க வந்திருப்பதாகவும் கூறினான் இளைஞன், துறவி சிரித்துக்கொண்டே, அங்கே கீழே கிடந்த ஒரு கூடையைக் காட்டி, " அதை எடுத்துக்கொள். இந்த வனம் முழுவதும் சென்று ஆங்காங்கே உதிர்ந்து கிடக்கும் பறவைகளின் இறகுகளைப் பொறுக்கிக், கூடையை நிரப்பிக்கொள்.
பிறகு உனது கிராமத்திற்குச் செல். அங்குள்ள முச்சந்தியில் இறகுகள் உள்ள கூடையைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் இங்கே வா!.
திட்டிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதற்கான வழியைச் சொல்லுகிறேன்!" என்றார்.
கூடையோடு வனத்திற்குள் சென்ற இளைஞன், வெகு சிரத்தையோடு, உதிர்ந்து கிடந்த பறவைகளின் இறகுகளைப் பொறுக்கிக் கூடையை நிரப்பினான்.
பிறகு கிராமத்து முச்சந்திக்குச் சென்று கூடையிலுள்ள இறகுகளைக் கொட்டிவிட்டு, வெறும்கூடையோடு திரும்பிப் பார்க்காமல் துறவி இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்; நண்பகல் நேரம் ஆகியிருந்தது.
இளைஞனைப் பார்த்த துறவி, "இப்போது வழி சொல்லுகிறேன்; அதற்குமுன் நீ மீண்டும் கூடையோடு கிராமத்து முச்சந்தி வரை சென்று, அங்கு நீ கொட்டிவிட்ட பறவை இறகுகளை மீண்டும் அள்ளிக்கொண்டு வர வேண்டுமே!" என்றார்.
சலித்துக்கொண்டே இளைஞன் கிராமத்தை நோக்கிச் சென்றான்; சென்ற இளைஞன் மாலை நேரமாகியும் திரும்பாததைக் கண்ட துறவி, அவனைத் தேடிக் கொண்டு கிராமத்து முச்சந்திக்குச் சென்றார்.
அங்கே கொட்டிவிட்டு வந்த இறகுகளைக் காணாது வெறுங்கூடையோடு விழித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான் இளைஞன். சிரித்துக்கொண்டே துறவி சொன்னார், கோபத்தில் உதிர்த்துவிட்ட சொற்களையும், பறந்துவிட்ட பறவைகளின் இறகுகளையும் திரும்பப் பெறவே முடியாது.
நாம்தாம் சொற்களைப் பேசும்போதே கவனமாக இருக்க வேண்டும்!".
சொற்கள் மொழியின் அடையாளங்கள் மட்டுமல்ல; அவை அவற்றைப் பேசுகிற மனிதர்களின் குணங்களை அடையாளப்படுத்துகிற குறியீடுகளும் ஆகும்.
'அவனுடைய பேச்சு வார்த்தைகளும், பழக்க வழக்கங்களும் அவன் சரியில்லாதவன் என்பதைக் காட்டுகின்றனவே!' என்று மனிதர்களை எளிதில் அடையாளம் கண்டு ஒதுக்கிவிடுவார்கள் அறிஞர்கள்.
சொற்களில் பணிவு, அன்பில் கனிந்த கனிவு, உறுதியும் உண்மையும் வெளிப்படும் நேர்மை, கோபமும் எரிச்சலும் கலவாத கருணை, எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மை, எளிமையாய் எல்லார்க்கும் விளங்கும் தன்மை, சொற்களைக் கேட்டவுடனேயே செயல் நிகழ்ந்துவிட்டது போன்ற பலனளிக்கும் நம்பகம்.. இவை எப்போதும் வாய்க்கட்டும்.
சொற்களை வெறும் வாய் சொற்களாக மட்டும் உதிர்க்காமல், மனத்தின் அடியாழத்திலிருந்து புறப்பட்டுவரும் அன்பின் வார்த்தைகளாக மடைமாற்றம் செய்தால் எல்லாச் சொற்களும் நலம் விளைவிக்கும் சொற்களே!. உணர்ச்சிகளுக்குக் கடிவாளம்!; வார்த்தைகளில் கவனம்! ; வாழ்க்கை முழுவதும் வசந்த வரவு.
தொடர்புக்கு 9443190098
- நம் முன்னோர்கள் ஆண்டினை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்துள்ளனர்.
- தமிழரின் உணவுமுறையில் மருத்துவம் சம்பந்தமான பல உண்மைகள் அடங்கியிருப்பதில் வியப்பில்லை.
இவ்வுலகில் உள்ள எல்லா மனிதர்களும் விரும்புவது நோயில்லாமல் நலமாக வாழ வேண்டும் என்பதே ஆகும். நாம் தேடித்தேடி எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் உடல் நலமாக இல்லை எனில் எல்லாமே வீண்தான், ஆனால் இன்றைய காலத்தில் உடல்நலச் சிந்தனை மனிதர்களிடம் குறைந்து வருவதே நோய்ச்சூழலுக்கான முக்கிய காரணமாகும். நோயென்றால் மருத்துவர்களை நாடுவோம். ஆனால் இன்று உடல் நலத்திற்கே கூட மருத்துவர்களை நாடும் கலாசாரம் வந்துவிட்டது.
நம் முன்னோர்கள் 'உணவே மருந்து" என்ற தாரக மந்திரத்தினைக் கடைபிடித்து வாழ்ந்ததால்தான் அவர்களால் நோய் நொடியின்றி நலத்துடன் இன்பமாய் வாழ முடிந்திருக்கின்றது. இதனைத் திருக்குறள், தொல்காப்பியம், சீவகசிந்தாமணி முதற்கொண்ட பல நூல்களும், சொல் வழக்குகளில் உள்ள பல பழமொழிகளும் நமக்குத் தெளிவாய் இன்றளவும் உணர்த்துகின்றன.
உணவின் அவசியம் குறித்து உணர்ந்த நம் தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் நல்லதொரு உணவுக் கலாசாரத்தினை நமக்கு உருவாக்கித் தந்துள்ளனர். அதனை உணர்ந்து கடைபிடித்து வாழ்ந்தால் நாம் நீண்ட ஆயுளைப் பெறமுடியும்.
உணவே மருந்து:
'உடம்பார் அழியின் உயிரார்அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே"
என்று திருமூலர் கூறியுள்ளார்.
உடல் இயக்கத்திற்கு உணவு தேவையானது. நல்ல உணவானது உடம்பிற்கு எந்தவித ஊறும் விளைவிக்காது. நாவிற்காக உண்ணாமல் உடம்பினைப் பேணிக்காக்கவே நாம் உண்ண வேண்டும். அதற்கு நமக்கு உணவினைப் பற்றிய தெளிவும் காலத்திற்கேற்ற வகையில் உணவினை உண்ணும் அறிவும் அவசியமாகும். இதனை உணர்த்தவே 'உணவே மருந்து, மருந்தே உணவு" என்று நம் முன்னோர்கள் சொல் வழக்காக்கி உள்ளனர்.
நம் உடம்பின் நோய்க்கான காரணமாய் அமைகின்ற வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று காரணிகளைச் சம நிலையோடு வைத்திருக்கும்படியான உணவினை நாம் உண்டால் நோயின்றி வாழலாம். நலமான உடம்பே மேலான செல்வம் ஆகும்.
காலங்களுக்கு உகந்த உணவு:
நம் முன்னோர்கள் ஆண்டினை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். ஒரு பருவத்திற்கு இரண்டு மாதங்கள் வீதம் அதன் தன்மையினைக் கருதி இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என வகைப்படுத்தி உள்ளனர். பூமியின் தட்ப வெப்ப நிலைக்கு உட்பட்டு நம் உடலில் ஏற்படும் மாறுதல்களைச் சமப்படுத்தி வாழ்வதற்கேற்ற வகையில்தான் அந்தந்த காலங்களில் சில காய்களும், கனிகளும், தானியங்களும் சிறப்பாக மிகுந்து கிடைக்கின்றன.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் மசாலா உணவுகளையும், மாமிச உணவுகளையும், துரித உணவுகளையும் மற்றும் உலர் உணவு களையும் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதால் நோய்ச் சூழல் மிகுந்து காணப்படுகின்றன.
மழைக்காலங்களில் வயிறு, குடல் போன்ற உறுப்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க அக்காலங்களில் அதிகமாய் கிடைக்கும் நாவல் பழம், மாதுளம் பழம் முதலியவற்றை உண்ணலாம்.
குளிர்காலத்தில் சூரியனின் வெப்பம் குறைவாக இருப்பதால் காற்று அழுத்த மாறுபாடு காரணமாய் சுவாச உறுப்புகள் பாதிக்கப்படும். இந்தக் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம் முதலியவற்றை உண்டால் சுவாச உறுப்புகள் சுகமடையும்.
கோடைக் காலத்தில் கல்லீரலுக்கு உகந்த மாங்காய், வேப்பம் பூ, விளாம்பழம் முதலியவற்றை உண்ணலாம். ஆண்டு முழுவதும் கிடைக்கும் கீரைகளான அகத்தி, முருங்கை மணித்தக்காளி முதலியவற்றை உண்பதால் நோயின்றி நலமாக வாழ இயலும்.
காலை வேளையில்:
பாசிப் பயறு, கடலை, துவரை, உளுந்து, மொச்சை போன்ற பயறு வகைகளும், சுக்கு, இஞ்சி, மிளகு, கடுகு, பெருங்காயம் போன்றவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மதிய வேளையில்:
பகற்காலத்தில் கிழங்கு, பழவகைகள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு பதார்த்தங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவு வேளையில்:
இரவுக் காலங்களில் எளிதில் செரிக்கக்கூடிய அவரைப் பிஞ்சு, துவரம் பருப்பு, பால் போன்றவை பயன்படுத்த வேண்டும். இவ்விதம் காலத்திற்கேற்ற உணவுப் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தானால் தான் அவர்களால் நோயின்றி நீண்ட காலம் வாழ முடிந்தது. மேலும் வீரம், கலை, இலக்கியம் போன்றவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடிந்தது.
இத்தகைய நியதிகளை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்று தான் சமயச் சடங்குகளையும், பண்டிகை காலங்களில் முக்கிய உணவாகவும் மாற்றி நல்லதொரு உணவுக் கலாசாரத்தினை ஏற்படுத்தினர்.
அளவுக்கு மிஞ்சினால்:
நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகமாகவும், மலிவாகவும், கிடைப்பதால் நாம் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடியும் உண்ண நேரிடலாம். அப்படி நாம் அளவுக்கு மீறி உண்பதால் சில உடல் கோளாறுகள் ஏற்படலாம். அதற்கு நாம் எளிய முறையில் வீட்டிலேயே தீர்வு காணலாம். அதற்காக மருத்துவரை நாட வேண்டிய தேவை இருக்காது. அவற்றில் சில உணவுப்பொருள்
1. கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டு உடல் அரிப்பு உண்டானால் - ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிடவும்,
2. கொய்யா பழம் சாப்பிட்டு வயிற்றுச் சிக்கலானால் - பெருஞ்சீரகப் பொடியை மோரில் சாப்பிடவும்,
3. தர்பூசணி அதிகம் சாப்பிட்டு குளிர்ச்சி உண்டானால் - கடுக்காய் பொடி ஒரு தேக்கரண்டி சாப்பிடவும்,
4. வாழைப்பழம் சாப்பிட்டு சீத பேதியானால் - ஒரு தேக்கரண்டி குல்கந்து சாப்பிடவும்,
5. மாம்பழம் சாப்பிட்டு வயிற்றுவலி, பேதியானால் - மாம்பருப்பு (அல்லது)ஏலப்பொடி சாப்பிடவும்,
6. தயிர் சாதம் அதிகம் சாப்பிட்டு தூக்கம், சோம்பல் உண்டானால் - பெருங்காயம் பொரித்துச் சாப்பிடவும்,
7. கோதுமை உணவு சாப்பிட்டு உடம்பு சூடாகி மலக்கட்டானால் -பாதாம் பருப்பு இரண்டு சாப்பிடவும்,
8. வாழை, கொத்தவரை சாப்பிட்டு வயிறு மந்தமாகாமல் இருக்க மிளகு, சீரகம் சேர்த்துச் சமைக்கவும்,
9. பரங்கிக்காய் சாப்பிட்டு வயிறு ஊதினால் - சீனா கற்கண்டு (அ) சர்க்கரை சாப்பிடவும்,
10. பூசணிக்காய் கூட்டு, அல்வா அதிகம் சாப்பிட்டு வயிறு உப்பினால் - சீரகம் ஒரு தேக்கரண்டி + சுக்கு ஒரு துண்டு கலந்து கஷாயமிட்டுச் சாப்பிடவும்,

11. பனை நுங்கு சாப்பிட்டால் ஏற்படும் பேதி, வயிற்று வலிக்கு பெருங்காயம் பொரித்த மோரில் சாப்பிடவும்.
12. ஆட்டிறைச்சியினால் வயிற்றுவலி உண்டானால் - கொத்துமல்லி இலை ஒரு பிடி, இலவங்கப்பட்டை ஒரு துண்டு கஷாயமிட்டுச் சாப்பிடவும்,
13. கோழிக்கறி சாப்பிட்டு தலைவலி, வயிறு வலி உண்டானால் - எலுமிச்சை பழச் சாறினைச் சாப்பிடவும்,
14. கோழிமுட்டை சாப்பிட்டு ஏப்பம், செரியாமை ஏற்பட்டால் - முள்ளங்கியை வேகவைத்துச் சாப்பிடவும்

இயற்கை மருத்துவர் நந்தினி, 9500676684
நோயை வெல்லும் உணவு:
நாவின் சுவைக்கும், வயிற்றுப் பசிக்கும், உடல் வன்மைக்கு மட்டுமல்லாமல் நோயுற்ற உடல் விரைவில் நோய் நீங்க மருந்துகளுக்கு உறுதுணையாகவும், ஊக்குவிப்பாகவும் விளங்கும் உணவுகளைத்தான் உன்னத உணவு எனலாம்.
தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளில் பெரும்பாலானவை உன்னத உணவுகளாகும். 'உணவு" என்பது இயற்கையான நிலவியல் பரப்பில் கிடைக்கின்ற உயிர் வேதியில் பொருளாகும்.
'சரியான உணவு உண்டால் எந்த மருந்தும் தேவைப்படாது, சரியான உணவு உட்கொள்ளாவிடில் எந்த மருந்தும் பயன்படாது" என்ற பழமொழிக்கு ஏற்றாற் போலத்தான் இன்றைய உணவும் இருக்கிறது.
நமது நாட்டில் வாழ்ந்த மக்கள் தேச, காலநிலைகளை அனுசரித்துத் தகுந்த உணவு முறைகளைப் பின்பற்றி நலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்நியர் வருகையால் ஏற்பட்ட கலாசார ஊடுருவல் நமது மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழரின் உணவுமுறையில் மருத்துவம் சம்பந்தமான பல உண்மைகள் அடங்கியிருப்பதில் வியப்பில்லை.
இன்றைய காலகட்டத்தில் மனிதனைப் பல நோய்கள் ஆட்டிப்படைக்கின்றன. அவை மதுமேகம், புற்று நோய், உடல் பருமன், சுவாசத் தொடர்பு நோய்கள், குடல் புண், மூலம், மாதவிடாய்க் கோளாறுகள், மூட்டுத் தேய்வு நோய்கள், ரத்தச் சோகை என பலவற்றைக் கூறலாம். இதில் பெரும்பாலானவை சத்து குறைவினாலும், தவறான உணவுப் பழக்க வழக்கத்தாலும் ஏற்படுவது, இவற்றைச் சரிசெய்தால் நாம் பல நோய்களை வெல்லலாம்.
- ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளைகளுக்காகவே ஓடித் திரிகின்ற கால்கள், பெற்றோரின் கால்கள்.
- பெற்றோரின் வியர்வைத் துளிகளில்தான், பிள்ளைகளின் எதிர்காலம் விளைகின்றது.
'உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்'.
-பைபிள் (நீதிமொழிகள் 23: 22,24,25)
வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. சாலை எங்கும் அனல் பறந்தது. ஒரு முதியவர், சைக்கிள் நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு, மிகுந்த சிரமத்துடன் மெதுவாகச் சென்று கொண்டிருந்தார்.
திடீரென்று மயக்கம் ஏற்பட, தடுமாறிக் கீழே விழுந்துவிட்டார். சிலர் ஓடி வந்து அவரைத் தூக்கி, பக்கத்தில் இருந்த ஒரு சலூனுக்கு வெளியே பெஞ்சில் உட்காரச் செய்தனர். அவரின் கைகால்கள் நடுங்கின. ஒருவர் சோடா வாங்கிக் கொடுத்தார். குடித்ததும் கொஞ்சம் தெளிவு வந்தது.
'இந்த வயசான காலத்துல உங்களுக்கு எதுக்கு இந்த வேலை. பேசாம வீட்ல இருக்க வேண்டியதுதானே'என்றார் பக்கத்துப் பழக்கடைக்காரர்.
அந்த முதியவர் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு, கையிலிருந்த மீதி சோடாவைக் குடித்து முடித்தார்.
'உங்களுக்கு என்ன வயசு?' - சலூன்காரர் கேட்டார்.
'எழுபத்தெட்டு' என்று சொல்லி, வெள்ளந்தியாய்ச் சிரித்தார் அவர்.
'தள்ளாத வயசுல எதுக்கு இப்படி கஷ்டப்படுறீரு?'.
'இந்தப் பொருட்களை நாலஞ்சி கடையில போடணும். அப்பதான் ஓனர்கிட்ட கமிஷன் பணம் வாங்க முடியும்'.
'அதுசரி, நீரு சம்பாதிச்சுதான் ஆகணுமா? புள்ளைங்க யாரும் இல்லையா?'
'எனக்கு ரெண்டு பையன்ங்க. நல்லா படிக்க வச்சி, கல்யாணத்தையும் முடிச்சிட்டேன். உசந்த உத்தியோகம். நெறைய சம்பளம். ரெண்டுபேர் குடும்பங்களும் நல்ல வசதியாதான் இருக்குது'.
'வெளிநாட்டுல இருக்காங்களா?'
'இல்ல, இங்கதான். ஆனா, நானும் என் சம்சாரமும் தனியாதான் இருக்கோம்'.
'ஏன், புள்ளைங்ககூட போக விருப்பமில்லையா?'
'நமக்கு மட்டும் விருப்பம் இருந்தா போதுமா? புள்ளைங்க வாழ்க்கை ஒசந்திடுச்சி. நாம யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது. அதனால எதையும் எதிர்பார்க்கிறதில்ல. அவங்க சந்தோஷமா இருந்தா, அது எனக்கு போதும்யா. ஆனா, இந்த கட்டை எப்பவும் சாஞ்சிடலாம். அதுக்கப்புறம் என் சம்சாரம்...' என்று சொல்லும் போது, அவரின் கண்கள் கலங்கின.
பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரைத் தவிக்கவிட்டுக் கண்கலங்கச் செய்வது, நன்றிகெட்ட நாகரிக மனோபாவமோ என்னவோ. புரியவில்லை!
ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளைகளுக்காகவே ஓடித் திரிகின்ற கால்கள், பெற்றோரின் கால்கள். அவர்கள் கடந்து வந்த பாதைகளில் முட்களும் கூரிய கற்களும் கண்ணாடிச் சிதறல்களும்தானே. அவர்களின் பாதங்களை நாம் பார்த்திருக்கின்றோமா!
பிள்ளைகளின் வயிறு நிறைந்தால், அவர்களின் மனம் நிறையும். பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டாடுவதில், அவர்களின் பாரம் குறையும். குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும், பெற்றோர்க்கு ஒரு கோடி மகிழ்ச்சி.
பிள்ளைகளின் பெருவாழ்வுதான் பெற்றோரின் ஒரே கனவு. தூக்கத்திலும் தூங்காமல் விழித்திருக்கும் விழிகள், பெற்றோரின் விழிகள். அந்த விழிகளில் ஏன் கண்ணீர்!
இன்று எண்ணற்ற பெற்றோர்களின் நிலை அப்படிதான் இருக்கின்றது. தன்னந் தனிமையில் விடப்படும் பரிதாப நிலை.
பெற்றோரின் வியர்வைத் துளிகளில்தான், பிள்ளைகளின் எதிர்காலம் விளைகின்றது. தங்கள் வயதை மறந்து அவர்கள் படுகின்ற பாடுகளில்தான், பிள்ளைகளின் முன்னேற்றம் மலர்கின்றது. பெற்றோரின் அர்ப்பணிப்பில்தான் மனித வாழ்வு நீட்சி பெறுகின்றது.
இன்று பணம்தான் பிரதானம். படிக்கிறார்கள், வளர்கிறார்கள், வேலையில் சேருகிறார்கள், கைநிறைய சம்பாதிக்கிறார்கள். பெற்றோர்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள்.
பெற்றோரின் நிழல் தேவைப்படும் வரை, அவர்களுக்கு மரியாதை. சில குடும்பங்களில் அதுவும் இல்லை. பெற்றோரைத் தங்களின் குடும்பத்திற்கு வேலையாட்களைப்போல் பயன்படுத்திக் கொள்கின்ற ஜென்மங்களும் உண்டு. முதிர்வயதின் சோர்வுகளை, அவர்கள் கண்டு கொள்வதில்லை. உழைத்துக் களைத்த கைகால்களின் நடுக்கங்களை, அவர்கள் கவனிப்பதில்லை. ஈவிரக்கம் கொஞ்சமும் இல்லை. காரணம், சுயநலம்!

அதனால்தான், இன்று ஏராளமான முதியோர் இல்லங்கள். அங்கு எழுகின்ற ஏக்கப் பெருமூச்சுகளையும், தனிமையின் புலம்பல்களையும் பிள்ளைகள் அறிவார்களா! முதிர்வயதின் தேவைகளையும் ஆசைகளையும் கல்நெஞ்சங்கள் உணருமா!
ஓர் அற்புதமான கவிதை. அந்தக் கவிதை இப்படிச் சொல்கிறது:
தாயின் கருவறையில் குழந்தை. அதனிடம் இறைவன் பேசுகின்றான்.
'குழந்தையே, நாளை நீ பூமியில் பிறக்கப் போகின்றாய். மகிழ்ச்சிதானே!'
'வேண்டாம் சாமி. இங்கேயே நான் இருந்து கொள்கிறேன். பூமியில் எனக்கு யாரைத் தெரியும்?'
'அங்கே உனக்காக ஒரு தேவதையை நான் வைத்திருக்கின்றேன்'.
'இங்கே நான் பாதுகாப்பாக இருக்கின்றேன். அங்கே எனக்கு யார் பாதுகாப்பு?'
'உன்னைப் பாதுகாக்க, அங்கே ஒரு தேவதையை நான் வைத்திருக்கின்றேன்'.
'இங்கே எனக்கு வேளா வேளைக்கு உணவு கிடைக்கிறது. அங்கே எனக்கு யார் தருவார்?'
'உன் பசியாற்ற ஒரு தேவதையை வைத்திருக்கின்றேன்'.
'இங்கே சந்தோஷமாக இருக்கிறேன். இந்த சந்தோஷத்தை அங்கே யார் தருவார்?'
'உன்னை சந்தோஷப்படுத்த அங்கே ஒரு தேவதையை வைத்திருக்கின்றேன்'.
குழந்தை பொறுமை இழந்துவிட்டது. இறைவனிடம் சற்று அழுத்தமாகக் கேட்டது:
'நான் கேட்பதற்கெல்லாம் தேவதை தேவதை என்கின்றாயே. யார் அந்தத் தேவதை?'
இறைவன் குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தபடியே, 'அவள்தான் உன் தாய்' என்றான். குழந்தை நிம்மதி கொண்டது.
தாயன்பிற்கு ஈடாக, தந்தையின் தியாகங்களுக்கு நிகராக எதைச் சொல்ல முடியும். பிள்ளைகளின் உயரங்களை அண்ணார்ந்து பார்த்துப் பெருமிதம் கொள்வதற்கு, அவர்களைத் தவிர வேறு யார்!
அவர்கள் தங்களின் காயங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பாத வெடிப்புகளையும், கீறல்களின் வலிக்கசிவுகளையும் பெரிதாகப் பேசுவதில்லை.
பெற்றோரின் இதயத் துடிப்புகள் பிள்ளைகளையே வாழ்த்திக் கொண்டிருக்கின்றன. அவர்களின் ரத்த நாளங்களில் அன்பும் கருணையுமே ஓடிக் கொண்டிருக்கின்றன.
பெற்றோர் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அருட்கொடை. அவர்களின் அரவணைப்பிற்குள் நாம் பெறுகின்ற சுகத்தை மிஞ்சிய சொர்க்கம் வேறொன்று கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆயிரம் கோடி புண்ணியங்களுக்குச் சமம்.
ஆனால், இன்று எத்தனை பெற்றோர்கள் தனிமையின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுக்கக்கூட ஆதரவாய் பிள்ளைகள் இல்லை.
இல்லை என்றால் இல்லை என்பதில்லை. இருக்கிறார்கள்; அருகிலோ, வந்து போகும் தொலைவிலோதான் இருக்கிறார்கள். ஆனால், கவனிப்பதற்கு மனம் இல்லை. அடிமரத்தைத் தாங்க வேண்டிய விழுதுகள், வெவ்வேறு திசைகளில் ஒளிந்து கொள்கின்றன.
அருகில் இருந்தும் பெற்றோரை அனாதைகளாக்குகின்ற பிள்ளைகள் ஒருபுறம். இங்கே பிறந்து வளர்ந்து படித்து முடித்து வெளிநாட்டில் 'செட்டில்'ஆனதும், பெற்றோரையும் பிறந்த மண்ணையும் அறவே மறந்துவிடுகின்ற பிள்ளைகள் இன்னொரு புறம்.
ஆதிசங்கரர் தமது இளவயதிலேயே துறவறம் மேற்கொண்டார். அவர் துறவறம் ஏற்பதற்கு அவரின் தாயார் ஆர்யாம்பாள் முதலில் சம்மதிக்கவில்லை. அதன்பின்னர், ஓர் இக்கட்டான சூழ்நிலையின் போது வேறு வழியின்றிச் சம்மதித்தார்.
ஆதிசங்கரர் துறவறம் பூண்டார். ஆர்யாம்பாள் மனம் கலங்கினார். ஏன் தெரியுமா? துறவிகள் ஈமக் கிரியைகள்கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. தாயின் சோகத்தில் உள்ளம் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர். அந்த சாஸ்திர விதியை மீறித் தன் அன்னையிடம், 'தாயே, உன் அந்திம காலத்தில் ஈமக் கிரியைகளைச் செய்வதற்கு நான் கண்டிப்பாக வந்துவிடுவேன்' என்று வாக்களித்தார்.
ஆண்டுகள் பல கடந்தன. ஆர்யாம்பாள் மரணப் படுக்கையில் கிடந்தார். அன்னையிடம் வாக்களித்திருந்தபடியே, ஆதிசங்கரர் ஓடோடி வந்தார். சாஸ்திரம் படித்த அவரின் உறவினர்கள் அவரைத் தடுத்தனர். ஆனால், தடையை மீறி அவர் தமது கடமையை நிறைவேற்றினார். தாயின் அந்திம காலத்தில், மடியில் அவரைக் கிடத்திக் கொண்டு பாடிய 'மாத்ரு பஞ்சகம்' உள்ளங்களை உருகச் செய்துவிடும்.
'அம்மா! என்னைக் கருவில் தாங்கி, நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலஜலம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன்? அன்றுமுதல் இன்றுவரை நீ எனக்குச் செய்ததற்குக் கைமாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே!' - இப்படித் தமது தாயின் அன்பை இன்னும் சொல்லிச் சொல்லிப் புலம்பி அழுகிறார் ஆதிசங்கரர்.
முற்றும் துறந்த ஞானத் துறவியே, அன்னையின் மரணத்தில் கண்ணீர் சொரிந்தார். தமது கடமையினை நிறைவேற்றி முடித்தார்.
இன்றைய உலகம் பணத்திற்கு அடிமையாகிவிட்டது. இதயங்கள் இயந்திரமாகிவிட்டன. பெற்றோர்குச் செய்வதை 'வீண்செலவு' என்று எண்ணுகின்ற அற்பத்தனம் மேலோங்கிவிட்டது. 'வீடியோ கா'லில் எல்லாவற்றையும் முடித்துவிடுகின்றனர்.
இந்த மனோபாவம் மாற வேண்டும். நமது வாழ்வின் ஆதார வேர்களுக்கு, அன்பின் செயல்களினால் நன்றி பாராட்டுவோம். செத்தபின் கல்லறை கட்டிக் கும்பிடுவதைவிட, வாழ்கின்ற காலத்தில் அவர்களை வாழ்விப்போம்.
காலத்திற்குக் காலம் நாகரிகம் மாறலாம். நம்பிக்கைகள் மாறலாம். ஆனால், பெற்றோரின் தூய்மையான அன்பு ஒருநாளும் மாறாது. அவர்களின் உள்ளங்கள் எப்போதும் காத்துக் கொண்டிருக்கும். பெற்றோரைக் காண்பதே தெய்வ தரிசனம். பெற்றோர்க்குச் செய்வதே இறைத்தொண்டு.
போன்: 9940056332- குரல் மக்கள் மனதில் முத்திரையாகப் பதிந்துவிட்டது.
- “வாராயோ தோழி” பாடலை ஒலிக்கவிடாத திருமணமே இல்லை.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாட்டுப் போட்டிக்கான நிகழ்ச்சிகளில் இறுதிச் சுற்றுக்குக்கூட எடுத்துப் பாடுவதற்கு பயந்து ஓடுகிறப் பாடல் ஒன்று இருக்கிறது! அதுதான் 'சிவந்த மண்' படத்தில் வரும் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குதான் என எண்ண வேண்டும்" என்று கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.வி. இசையமைத்தப் பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார்.
தொடர்ந்து கோரஸ் பாடி வந்த எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வந்தது ஒரு சோதனை.

"மணாளனே மங்கையின் பாக்கியம்" படத்தில். "அழைக்காதே... நினைக்காதே" என்று அஞ்சலிதேவி பாடும் பாடலுக்கு கோரஸ் பாடிக் கொண்டிருந்தார் தன் அம்மாவுடன்.
ஒலிப்பதிவு செய்துக் கொண்டிருந்த ரங்கசாமி, அந்த இரட்டை சடை போட்ட பெண்ணை வெளியே போக சொல்லுங்க. குரல் தனியே கேட்குது என்று கடிந்துக் கொள்கிறார்.
இதையடுத்து எல்.ஆர்.ஈஸ்வரி வெளியே அனுப்பப்படுகிறார். வெளியே வந்தவர் நெஞ்சில் ஒரு வேகம், இவருடைய வாயாலேயே பாராட்ட வைப்பேன், இது எனக்கு ஒரு சவால் என்று மனத்திற்குள் உறுதி எடுக்கிறார்.
அடுத்த ஆண்டே, ஏ.பி. நாகராஜன் இயக்கிய, "நல்ல இடத்து சம்பந்தம்" என்றப் படத்தில் முதன் முதலாக இரண்டுக்கு மேல் தனிப் பாடல்கள் பாட எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாய்ப்புத் தருகிறார். கே.வி. மகாதேவன் இசையமைப்பாளர்.
எல்.ஆர்.ஈஸ்வரி ,ஒலிப்பதிவு செய்யப் போவது யார் என்று கேட்கிறார் கே.வி.எம்மிடம். ஏன் ரங்கசாமிதான் என்கிறார்.
எல்.ஆர்.ஈஸ்வரி உடனே ஏ.பி. நாகராஜனிடம் சென்று, "சார் நான் பாடவில்லை, ஒலிப்பதிவின்போது அவர் என்னை ஏதாவது சொல்லிவிட்டால்..?" என்கிறார்.
ஏ.பி. நாகராஜன், எத்தனை நாளைக்கு கோரஸ்லே பாடுவாய்? அதெல்லாம் அவர் ஒன்னும் சொல்ல மாட்டார் என்று தைரியம் கொடுத்து பாடச் சொல்கிறார்.
முதல் படத்திலேயே பிரமாதமாக பாடிவிடுகிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. பிறகு அேத ரங்கசாமி அவர்களின் வாயால், "இது நம்ம பொண்ணுப்பா நல்லா பாடுது" என்று சொல்ல வைத்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. அவரது சபதம் பலித்த நாள் அது.

1959ல் அமுதவல்லி படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து "கண்கள் ரெண்டும் வண்டு நிறம்" என்றப் பாடலை பாடினார். பெண்கள் ஜோடிக் குரல் என்றாலே, பி.சுசீலா - எல்.ஆர்.ஈஸ்வரிதான் இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக ஆனது.
இந்த இருவர் பாடிய ஜோடிப் பாடல்கள் அத்தனையும் ஒன்று கூட சோடை போனதில்லை. கலக்கல் ஹிட்தான்.
பாசமலர் படத்தில் ஒருபாடலுக்கு கோரஸ் பாடுகிறார். "பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை". என்றப் பாடல்தான் அது. ஒத்திகை பாடல் பதிவு என்று நாள் முழுக்க பாடி பாடி ஓய்ந்த போது, திடீரென்று மெல்லிசை மன்னர்கள் "வாராயோ என் தோழி வாராயோ" பாடலையும் நீயே பாடும்மா என்கிறார்கள்.
பொழுதெல்லாம் பாடி பாடி ஒய்ந்தக் குரலில் பாட்டைப் பாடிப் பார்த்தால் குரலே வரவில்லை. தனியாகப் பின்னணிப் பாட வாய்ப்புக் கிடைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற கவலை தோய்ந்த முகத்துடன் அவர்களைப் பார்க்க, சரிம்மா வீட்டுக்குப் போய்விட்டு நாளைக்கு வந்து பாடும்மா என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
எல்.ஆர்.ஈஸ்வரிக்கு தொண்டையை சரி செய்யக் கூட நேரமில்லை. மறுநாள் வாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் கவலைகள் பாடாய் படுத்தியது. எனினும் மறுநாள் அந்த பாடலை சிறப்பாக பாடி முடித்தார்.
"வாராயோ தோழி" பாடலை ஒலிக்கவிடாத திருமணமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வரவேற்பு பெற்ற பாடல் அது. மணப்பெண் வரவேற்பின்போது முதலில் ஒலிக்கும் பாடல் இது.
ஆண் குரல் மட்டும் ஒலிக்கும் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங், பாடல் முழுக்க இடம் பெற்ற ஒரு முன் மாதிரி பாடலும் இவருக்கு வாய்ந்தது. "கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா?, மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... மன்னவன் மட்டும் அங்கிருக்க மற்றும் வீடு வரை உறவு வீதி வரை மனைவி" போன்றப் பாடல்களில் வரும் ஹம்மிங்கை யார்தான் மறக்க முடியும்.
தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக வெண்ணிற ஆடை படத்தில்ஜெயலலிதா நடித்தப்போது அவருக்கு பின்னணி குரல் கொடுத்த முதல் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிதான்.

"கறுப்புப் பணம்" என்றொரு திரைப்படம் கவியரசர் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பு. இதில் இரவு வேளையில் படகில் போய்க் கொண்டே தோழியிடம் தன் காதலைப் பற்றியும் காதலனைப் பற்றியும் பாடும்பாடல்.. ரகசியமான வரிகளுக்கேற்றபடி குறைந்த ஸ்தாயில் பாட வைக்க மெல்லிசை மன்னர்கள் முடிவெடுக்கிறார்கள்.
தயாரிப்பாளர் என்ற முறையில் கவியரசர், ஈஸ்வரியை வைத்து இந்த பாட்டை பாடச் சொல்லுங்கள் என்கிறார். இரட்டை இருக்கோ, ஈஸ்வரி மெல்லியக் குரலில் பாடினால் சரி வருமா? என்கிறார்கள்... கொடுத்துதான் பாருங்களேன் என்கிறார் கவியரசர்.
சரி, புதுமையாக முயற்சிக்கலாம் என்று பாட வைத்தார்கள். "அம்மம்மா கேளடி தோழி, சொன்னானே ஆயிரம் சேதி" என்ற அந்தப் பாடல் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இருந்த வேறொரு பரிமாணத்தையும் காட்டிக் கொடுத்தது.
இவரது குரலின் தனித்தன்மை, மூச்சடக்கும் தன்மை, எவ்வளவு உச்சஸ்தாயிக்கு போனாலும் பிசிறில்லாத உடையாத குரல் எல்லாம் சேர்ந்து, உல்லாச விடுதிப் பாடல்கள் என்றாலே அது எல்.ஆர்.ஈஸ்வரிதான் என்று மக்கள் மனதில் முத்திரையாகப் பதிந்துவிட்டது. மயக்கும் தொனியில் இவர் பாடிய பாடல்களுக்கு இசைப்பிரியர்கள் நடுவே தனி வரவேற்பு உண்டு.

சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடலில் வந்த சவுக்கடி வலிக்கு துடிக்கும் துடிப்பு அசாத்தியமானது. அந்த துடிப்பு ஒலி அடிவயிற்றிலிருந்து தர வேண்டும். அதுவும் தாள அளவுக்குள்...
இந்தியில் இந்தப் படத்தை எடுத்தப்போது இதே காட்சிக்கு லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். அவர் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலை கேட்டுவிட்டு இது யார் பாடியது? என்று கேட்டிருக்கிறார்.
எல்.ஆர்.ஈஸ்வரிப் பற்றி சொன்னதும், வியந்து போய் எல்.ஆர்.ஈஸ்வரியை தேடி வந்து பாராட்டிவிட்டு சென்றார்.
கத்தோலிக்க கிருஸ்தவராக இருந்தாலும் இவர் அம்மனைப் பற்றி பாடினால் உருகாத உள்ளங்களே இல்லை எனலாம். ஆடி மாதத்தில் இவரது கச்சேரிக்கு நாட்கள் கிடைப்பது அரிது என்கிற அளவில் இன்றும் கோவில்கள் தோறும் ஒலிக்கும் இவரது குரல் மதங்களுக்கிடையே உள்ள பேதங்களை களைந்து விட்டது என்றே சொல்லலாம்.
இவர் பின்னணி பாடகியாக பிரபலமானவுடன், நீ உன் பெயரை மாற்றிக்கொள் என்று ஏ.பி. நாகராஜ் மற்றும் கே.வி. மகாதேவன் இருவரும் வலியுறுத்தினர். லூர்துமேரி ராஜேஸ்வரி என்ற பெயரை எல்.ஆர்.ஈஸ்வரி என்று அவர்கள் மாற்றி வைத்த ராசி அவர் திரையிசையில் மிகவும் பிரபலமானார்.
- 26-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.
- உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேடுதளமாக விளங்குகிறது.
இந்த தொழில் நுட்ப உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை யாருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் முதலில் தேடக்கூடிய தளமாக இருப்பது கூகுள் தேடுதளம். அது தனது 26-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஸ்டான்போர்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களான செர்ஜே பிரின் மற்றும் லாரன்ஸ் பேஜ் ஆகியோர் இணைந்து உருவாக்கியது தான் கூகுள் எனப்படும் தேடுதளம். இது உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேடுதளமாக விளங்குகிறது.
ஒன்றுக்கு பின் வரும் நூறு பூஜ்ஜியங்களை குறிக்கும் 'கூகல்' என்ற பெயரிலேயே இது முதலில் அழைக்கப்பட்டது. பின்னர் இது கூகுள் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
'தீமைகள் செய்ய வேண்டாம்' என்பதைக் குறிக்கும் 'டோண்ட் பீ ஈவில்' என்பதையே கூகுள் நிறுவனம் தங்களது இலக்காகக் கொண்டுள்ளது.
'கூகுள்' என்ற வார்த்தை, ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தகவல்களைத் தேடுதல் என்பது பொருளாக அமைகிறது.
இந்த தேடுதளம் ஆரம்பிக்கப்பட்டதில்இருந்து கூகுள் டூடுலும் ஒரு பகுதியாக இருக்கிறது. கூகுள் நிறுவனம், தேடுதளத்தையும் கடந்து கூகுள் சீட், கூகுள் டிரைவ், கூகுள் டாக்குமென்ட், கூகுள் மீட் என பல வடிவங்களில் தொழில் நுட்ப சேவைகளை அளித்து வருகிறது.
- தமிழ் இறைவனின் மொழி. செம்மொழி. மந்திர மொழி. அருள் மொழி.
- சுவாமிகள் அருளிய அற்புதமான மந்திரப் பாடல் ஒன்று சதுரங்க பந்தப் பாடலாக மலர்ந்துள்ளது.
அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்
'முருகா!' என்று ஓதுவார் முன்
தெய்வ மொழியான தமிழின் மூலமாக இறைவனைத் துதிக்கத் தமிழில் துதிப் பாடல்களை அருளிச் செய்ய அவ்வப்பொழுது மகான்கள் தெய்வ பூமியான தமிழகத்தில் தோன்றுவது தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும்.
இந்த வகையில் சமீப காலத்தில் தோன்றி முருகனின் அருளை அனைவரும் பெற தெய்வீகப் பாடல்களை அருளிச் செய்த பெரும் மகான் பாம்பன் சுவாமிகள் ஆவார்.
தோற்றம்: பழந்தமிழ்க் குடியான அகமுடையார் குலத்தில் சாத்தப்ப பிள்ளை என்பாருக்கும் செங்கமல அம்மையாருக்கும் மகனாக பாம்பன் குமரகுரு சுவாமிகள் என்று பின்னால் அறியப்படும் அப்பாவு 1853-ம் ஆண்டு வாக்கில் ராமேஸ்வரத்தில் பாம்பனில் பிறந்தார்.
இளமையில் இவர் உள்ளூர்ப் பள்ளியில் பயின்றார். சேது மாதவ ஐயர் என்பவரிடம் வடமொழியையும் முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் மொழியையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். இயல்பாகவே இவர் தமிழில் கவி பாடும் திறமையைப் பெற்றிருந்தார். முருகன் மீது பக்தி கொண்ட இவர் அருணகிரிநாதரைத் தனது ஞான குருவாகப் பெற்றார். ஆகவே உபய அருணகிரிநாதர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.
குடும்பம்: 1878-ஆம் ஆண்டு வைகாசி மாதம் ராமநாதபுரத்தில் கண்ணுப் பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை இவர் மணம் புரிந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன.
முருகப் பெருமானை நேரில் தரிசனம் பெற விழைந்த இவர் பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் மயானபூமி அருகில் ஒரு குழியை வெட்டச் சொல்லி அதைச் சுற்றி முள் வேலி ஒன்றையும் அமைத்து தவம் புரியலானார். ஏழாம் நாளில் முருக தரிசனம் சித்தியானது. பிறகு தொடர்ந்து தவத்தை ஆற்ற, 35-ம் நாள் 'எழுக' என்ற கட்டளை எழ இவர் தவக்குழியில் இருந்து எழுந்து முருகனுக்கு பூஜை செய்யத் தொடங்கினார். அன்று சித்திரை மாதம் பவுர்ணமி நாளாக அமைந்தது.
பயணங்கள்: 1895-ம் ஆண்டு சந்நியாசம் பெற்ற இவர் சென்னைக்கு வந்தார். சுவாமிகள் தமிழ் நாட்டில் உள்ள பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்தார். பின்னர் பெஜவாடா, விசாகப்பட்டினம், ஜகந்நாத், கொல்கத்தா, கயா என்று நெடும் பயணங்களையும் மேற்கொண்டார். காசி தல யாத்திரையையும் முடித்தார். ஏராளமான சீடர்கள் இவரை நாடினர்.
விபத்தும் அதிலிருந்து மீண்டதும்: 1923-ம் ஆண்டு (வயது 70) டிசம்பர் மாதம் 27ம் தேதி சுவாமிகள் சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்தபோது, குதிரை வண்டிச் சக்கரம் அவரது இடது கணுக்கால் மீது ஏறியது. இதில், அவரின் இடது கால் எலும்பில் ஒரு முறிவு ஏற்பட்டது. உடனே அவர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிபுணர்கள் அவரது இடது காலைத் துண்டிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினர். முருகனைப் பிரார்த்தித்த இவருக்கு மருத்துவமனையில் 13 நாட்கள் இருக்குமாறு அசரீரி வாக்கு ஒன்று தோன்றியது. இவரது அருகிலிருந்த சீடர் ஒருவர், வேல் ஒன்று அவரது காலில் ஊடுருவதை மானசீகமாகக் கண்டார். மருத்துவர்களே வியக்கும் வண்ணம் எலும்பு முறிவு குணமாகி இருந்தது. முருகனின் திருவிளையாடல் இது என்று சீடர்கள் கூறி மகிழ்ந்தனர்.
இதை நினைவு கூரும் வண்ணமாக மயூர வாகன சேவை என்ற நிகழ்ச்சி இன்றளவும் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் மார்கழி மாதம் வளர்பிறை பிரதமை நாளில் நடைபெற்று வருகிறது. இவர் இருந்த மருத்துவமனையில் மன்ரோ வார்டில் இவரது திருவுருவப் படம் மாட்டப்பட்டுள்ளது.
தமிழில் கவிதை மழை!
தமிழ் இறைவனின் மொழி. செம்மொழி. மந்திர மொழி. அருள் மொழி. நுணுக்கமான மொழி. இயற்கையின் அடிப்படையிலும், மனித உடல்கூறின் அடிப்படையிலும் பேசுவதற்கு எழுந்த மொழி.
பல ரகசிய கலைகளை சொற்களிலும் அதன் ஒலிகளிலும் அடக்கிய மொழி. அதைப் பேசுபவர்களுக்கு இனிமையை அருளும் மொழி. பேசும் போது உபயோகிக்கும் சொற்களால் பல் வேறு நலங்களைத் தரும் மொழி. இறை அருளாளர்கள் அற்புதமான சொற்சேர்க்கைகளால் பாக்களை அருளி அனைவரையும் உத்வேகமூட்டி எழ வைக்கும் மொழி. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளையும் சுலபமாக அருளும் மொழி!
இலக்கணக் கட்டமைப்பு வாய்ந்த பழம் பெரும் மொழி என்பதால் இதில் கவிதை எழுதுவது என்பது சுலபமல்ல. பல்வேறு கலைகளையும் இயற்கை ரகசியங்களையும் கற்றுத் தேர்ந்து மொழிப் புலமை பெற்று இறைவனின் அருளைப் பெற்றவரே நின்று நிலைக்கும் கவிதைகளை அருள முடியும். தமிழில் பந்தங்கள் அமைப்பது ஒரு சிலராலேயே முடியும்.
தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிப் புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளுக்குத் தமிழில் தெய்வீகத் துதிகள் இயற்றும் ஆற்றலும் முருகப் பெருமான் அருளும் ஒருங்கே சேர்ந்து உண்டாக அருட்கவிகளை மழையெனப் பொழிய ஆரம்பித்தார்.

சிக்கலான பந்தங்கள் பலவற்றை அதை ஓதுவோர் அனைவரும் தெய்வீக அருளைப் பெறும் வண்ணம் இவர் பாடியருளியுள்ளார். இவற்றுள் சில முக்கிய பந்தங்களை இங்கு காணலாம்.
சஸ்திர பந்தம்:
"வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே- சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா."
`தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே, பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன் எனத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க' என்பது இப்பாட்டின் பொருளாகும்.
இந்தப் பாடலை வேல் வடிவில் வரைந்து அதைத் தொழுதல் சாலச் சிறந்தது. முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க் கிழமை, சஷ்டி தினங்கள் மற்றும் விசாகம், கார்த்திகை நட்சத்திர நாட்கள் ஆகிய தினங்களில் முருகன் சந்நிதி முன் இதைத் தொடங்குவது மரபு.
இப்படித் தொழும் பக்தர்களுக்குத் தீமைகள் அகலும். செல்வம் சேரும். நோய்கள் தீரும். நன்மை பெருகும். ஆன்மீக ஞானம் உண்டாகும்.
சுவாமிகள் அருளிய மயூர பந்தம்:
"வரதந திபநக ரகமுக
வொருகுக
வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி
மலமழ
வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம
யலசர மதிவிரி
விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம
துகமழு முனிவருதி"
இது சகலவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல மந்திரப் பாடலாகும்.
சுவாமிகள் அருளிய அற்புதமான மந்திரப் பாடல் ஒன்று சதுரங்க பந்தப் பாடலாக மலர்ந்துள்ளது.
"வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த
சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க
ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே"
இந்தப் பாடலில் முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21
எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்
சதுரங்க பந்தத்தின் இலக்கணம் தவறாமல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடலும் இருப்பதைக் காணலாம்.
இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பலவித அற்புத பலன்களை இது அருளுகிறது.

ச.நாகராஜன்
குமாரஸ்தவம்: 1918-ஆம் ஆண்டு சுவாமிகளுக்கு வெப்பு நோய் பாதித்தது. உடனே மந்திர நூலான குமார ஸ்தவம் என்ற நூலை இயற்றினார். நோய் உடனே நீங்கியது. இதை ஓதுவோருக்கு நோய்கள் தீரும், முருகன் தன் இரு தேவியருடனும் காட்சி தருவார் என்று இவர் கூறி அருளியுள்ளார். சக்தி வாய்ந்த இதை ஓதி பக்தர்கள் இன்றும் நல்ல பயனை அடைவது கண்கூடு.
ஷண்முக கவசம்: தனது தந்தையார் இறந்த சமயத்தில் அவர் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களைக் கொண்டு 30 பாடல்கள் கொண்ட 'சண்முக கவசம்' என்னும் நூலை இயற்றினார்.
6 மண்டலங்களில் 6666 பாடல்கள் சுவாமிகள் இயற்றிய ஒவ்வொரு பாடலும் தனித்தன்மைகொண்டது. சுவாமிகள் தன் வாழ்நாளில் 6666 அரும் தமிழ் பாடல்களை இயற்றி அருளியுள்ளார்.
சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களும் 6 மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது.
சமாதி: 1926-ஆம் ஆண்டு ஜூலை 17-ந் தேதி உயில் ஒன்றை எழுதி தேஜோ மண்டலசபை அமைப்பை உருவாக்கி செயல்முறை ஒன்றை சுவாமிகள் உருவாக்கினார்.
சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதியன்று காலை 7.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் சமாதி அடைந்தார். சுவாமிகளின் சமாதி சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அருகில் திருமடவளாகத்துள் அமைந்துள்ளது.
தமிழின் தெய்வத் தன்மையை உணரவும் முருகனின் அருளைப் பெற்று வளமான வாழ்க்கை பெறவும் பக்தர்கள் துதிக்க அருட்பாடல்களைத் தந்த ஒரு பெரும் மகான் பாம்பன் சுவாமிகள் என்றால் அது மிகையாகாது!
- இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிறைய கனவுகள் வருகின்றன.
- ராமாயணத்தில் இரண்டு கனவுகள் சொல்லப்படுகின்றன.
நமது இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிறைய கனவுகள் வருகின்றன. ராமாயணத்தில் முக்கியமாக இரண்டு கனவுகள் சொல்லப்படுகின்றன.
ஒன்று பரதன் கண்ட கனவு. அது விளையப்போகும் தீமையைச் சொல்கிறது. இன்னொன்று திரிஜடை கண்ட கனவு. அது நடக்கப் போகும் நன்மையைச் சொல்கிறது.

அயோத்யா காண்டத்தில், அயோத்தியை விட்டுப் பிரிந்து கேகய நாட்டில் இருக்கும் பரதன் கெட்ட கனவு கண்டு விழித்துக் கொள்கிறான். அயோத்தியில் இருக்கும் தன் தந்தை தசரதருக்கு ஏதோ ஆபத்து என உணர்ந்து அவன் உள்ளம் பதறுகிறது. தன் தம்பி சத்துருகனிடம் தான் கண்ட கனவைப் பற்றிச் சொல்லிக் கவலையோடு புலம்புகிறான்.
அந்த கனவு பின்னால் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கான முன்கூட்டிய சூசகம் என்பதை அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் அவனுக்குப் புலப்படுத்துகின்றன. அவன் கேகய நாட்டில் இருந்து மறுபடி அயோத்திக்கு அழைத்துவரப் பட்டபோது, தசரதரின் உயிரற்ற உடலைத்தான் அவனால் காண முடிகிறது.
சுந்தர காண்டத்தில் ராமனைப் பிரிந்து தாளாத துயரத்தில் இருக்கும் சீதாதேவிக்கு ஆறுதலாக விபீஷணனின் புதல்வி திரிஜடை பேசுகிறாள். அவள், தான் கண்ட கனவைப் பற்றி சீதையிடம் சொல்லி அவளுக்கு ஆறுதல் தருகிறாள்.
தன் பெரியப்பா ராவணன் எண்ணையில் மூழ்குவதாகவும், கழுதையும் பேயும் இழுக்கும் தேரில் ரத்த ஆடை அணிந்து தெற்கு திசை நோக்கிப் போவதாகவும் கனவில் கண்டதாகச் சொல்கிறாள் திரிஜடை. எனவே ராவணன் அழிவு நிச்சயம் என சீதாதேவியைத் தேற்றுகிறாள்.
`எண்ணெய் தன் முடிதொறும்
இழுகி ஈறு இலாத்
திண்நெடும் கழுதைபேய்
பூண்ட தேரின்மேல்
அண்ணல்வேல் இராவணன்
அரத்த ஆடையன்
நண்ணினன் தென்புலம்,
நவைஇல் கற்பினாய்!`....
இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தில், ஒன்பதாம் பகுதி `கனாத்திறம் உரைத்த காதை` என்ற தலைப்பிலேயே அமைந்துள்ளது. தன் தோழி தேவந்தியிடம் கண்ணகி தான் கண்ட தீக்கனா பற்றிக் கூறுகிறாள்.
தானும் கோவலனும் அயலூர் செல்வதாகவும் அங்கு `இடுதேள் இட்டதுபோல்` ஒரு பழிச்சொல் நேர்வதாகவும், அதன் பின்னர் கோவலனுக்கு ஓர் ஊறு நேர, தான் மன்னனிடம் சென்று வாதாடியதாகவும் அந்த ஊருக்கே தீங்கு நேர்வதாகவும் தான் கண்ட கனவுக் காட்சிகளை விவரிக்கிறாள் அவள்.
`கடுக்கும் என் நெஞ்சம் கனவினால்
என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள்
பட்டேம்!
பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு
என்தன்மேல்!
கோவலற்கு உற்றதுஓர் தீங்கு என்று
அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்
காவலனோடு
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்
உரையாடேன்...`
இலக்கியங்களிலும் புராணங்களிலும் பின்னால் நிகழப் போகும் சம்பவங்கள் பலவற்றைப் பற்றி முன்கூட்டியே குறிப்பாலுணர்த்தும் உத்தியாகப் பாத்திரங்கள் காணும் கனவுகள் கையாளப்பட்டுள்ளன.
தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரும், நந்தனும் ஒருசேரக் கண்ட கனவை பற்றிச் சேக்கிழாரின் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.
ஜாதி காரணமான இன்னல் தரும் இழிபிறவி சிவபெருமானை அடைவதற்குத் தடை என எண்ணி துயரத்தோடு துயில்கிறார் தில்லை சென்ற நந்தனார். அவர் கனவில் வருகிறான் சிவன். நந்தனைத் தீயில் மூழ்கிப் பின்னர் தன்னிடம் வருமாறு பணிக்கிறான்.
அதுபோலவே தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவர் கனவிலும் வந்து நந்தனாருக்கு எரியமைத்துக் கொடுக்குமாறு பணித்து மறைகிறான். அந்த கனவு பற்றி பெரியபுராணம் பேசுகிறது.

'இப்பிறவி போய் நீங்க
எரியினிடை நீ மூழ்கி
முப்புரிநூல் மார்பர் உடன்
முன்அணைவாய் எனமொழிந்து
அப்பரிசே தில்லைவாழ்
அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருள் ஆனார் அருளி
அம்பலத்தே மேவினார்!`.
சென்னை அருகே திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் என்ற சிவனடியார் புராணத்தையும் விரிவாகப் பேசுகிறது சேக்கிழாரின் பெரிய புராணம்.
ஏழை அடியவரான அவர், தாம் வழிபடும் சிவபெருமானுக்கு கோவில் கட்ட விரும்பினார். கற்கோவில் கட்டுமளவு அவருக்குச் செல்வ வளம் இல்லை.
அதனால் என்ன? பக்தியோடு நெஞ்சத்தில் மனக்கோவில் கட்டத் தொடங்கினார். `உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்` என்கிறாரே திருமூலர்?
கோவில் கட்டுவதில் நாள்தோறும் ஒவ்வொரு பணியாக முடித்தார் பூசலார். கற்களை அடுக்கித் தூண்கள் கட்டுதல், அவற்றில் சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்தல், கோவிலின் உள்ளே கிணறு வெட்டுதல் என இப்படியான எல்லா வேலைகளையும் மனத்தினுள் கற்பனையாக ஒவ்வொன்றாக நிகழ்த்தினார்.
மெல்ல மெல்ல அவர் கட்டிய மனக்கோவில் முழுமையாக அவர் நெஞ்சத்தில் உருப் பெற்றது. தானே தன் உள்ளத்தில் நிர்மாணித்த அந்த விந்தையான கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறித்தார்.
அப்போது காஞ்சியை ஆண்ட மன்னன் காடவர்கோன் என அழைக்கப்பட்ட சிவபக்தனான ராஜசிம்மன் உண்மையிலேயே சிவனுக்குக் கற்கோவில் கட்டிக் கொண்டிருந்தான்.
மன்னன் அவன். எனவே செல்வ வளத்திற்கு ஒரு குறைவும் இல்லை. நூற்றுக் கணக்கான சிற்பிகள் வந்து பணி செய்து அந்தக் கோயிலின் கட்டுமானப் பணி முடிந்தது. அந்தக் கற்கோயிலுக்கும் கும்பாபிஷேக நாள் குறிக்கப் பட்டது.
ஆனால் பூசலாரின் மனக்கோவில் கும்பாபிஷேக நாளும் மன்னன் கட்டிய கற்கோவில் கும்பாபிஷேக நாளும் ஒன்றாகவே அமைந்துவிட்டன. எங்கு செல்வான் சிவன்?
அவனால் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களுக்கும் செல்ல முடியாதா என்ன? அவன் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் அல்லவா?
என்றாலும், உள்ளத்தில் கோவில் கட்டிய பூசலாரின் பக்திச் சிறப்பை உள்ளபடியே உலகிற்கு அறிவிக்க எண்ணியது சிவபெருமானின் திருவுள்ளம்.
பொன்னார் மேனியனாய் புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை மலர் அணிந்து காடவர்கோன் கனவில் வந்தான் கடவுள் சிவன்.
`உன் கற்கோவில் கும்பாபிஷேக நாளை மாற்றி வைத்துக் கொள் அன்பனே! நான் பூசலார் கட்டும் கோவில் கும்பாபிஷேகத்தில் அன்று கலந்து கொள்ளத் திருநின்றவூர் செல்கிறேன்` எனச் சிவன் கனவில் அறிவித்து மறைந்தான். விழித்த மன்னன் வியந்தான்.
யார் அந்த பூசலார்? கோவில் கட்டப் பெரும் செல்வம் வேண்டுமே? தன்னை விட0 செல்வந்தரா அவர்?
குழம்பிய காடவர்கோன் பூசலாரைச் சந்திக்கத் திருநின்றவூர் சென்றான். அவரைத் தேடிக் கண்டு உரையாடினான். அவர் உள்ளத்தில் ஆலயம் கட்டும் உண்மையை அறிந்து பரவசமடைந்தான். அவரை வணங்கிப் போற்றினான்.
இந்த அரிய வரலாற்றைச் சேக்கிழார் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட விவரிக்கிறார்.
பெரியாழ்வார் கதையிலும் கனவு வருகிறது.
தன் மகளான ஆண்டாள் இறைவனுக்கான மலர்மாலையைத் தான் சூடிக் கொடுத்தது பற்றி மனம் வருந்துகிறார் அவர்.
அந்த மாலையை நீக்கிவிட்டுத் தான் தொடுத்த புதிய மாலையோடு ஆலயத்திற்குச் சென்று அதை அரங்கனின் திருமார்பில் அணிவிக்கிறார்.
அன்றிரவு பெரியாழ்வார் வழக்கம்போல் உறங்குகிறார். அவரின் கனவில் வருகிறான் கண்ணன். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பக்திவயப்பட்ட அந்தச் செயல் தனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்றும் இனி ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைகளையே அவர் தனக்கு அணிவிக்க வேண்டும் என்றும் சொல்கிறான்.
திகைத்த பெரியாழ்வார் அதன்பின் கண்ணன் கட்டளைப் படியே சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் மாலையையே கண்ணனுக்குச் சூட்டுகிறார் என்கிறது பெரியாழ்வார் திருச்சரிதம்.
கண்ணனையே மணக்க வேண்டும் எனக் கனவு கண்டவள் அல்லவா ஆண்டாள்? புனிதமே வடிவான ஆண்டாள் நாச்சியார் எழுதிய `நாச்சியார் திருமொழி` என்ற பாசுரம், பட்டர்பிரான் கோதையான ஆண்டாள் கண்ட திருமணக் கனவைத் தித்திக்கும் தமிழில் விவரிக்கிறது.

`வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ
நான்...
தமிழில் பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு முன், பொன்னவன் என்பவர் இயற்றிய `கனா நூல்` ஒன்று இருந்ததாகத் தெரியவந்துள்ளது. கனவுகளின் பலன் பற்றிப் பேசுகிறது அந்நூல்.
தன் இறப்பைத் தானே காண்பது போன்ற கனவுகள் கண்டால் செல்வம் வந்து சேரும் என்பதுபோல் பற்பல கனவுகளின் பலன்கள் அந்தக் கனா நூலில் கூறப்பட்டுள்ளன...
புத்தரின் தாயான மாயாதேவி ஒரு கனவு காண்கிறாள். மன்னர் சுத்தோதனர் மூன்று நிமித்திகர்களை அழைத்து மாயாதேவி கண்ட கனவின் பலன் என்ன என்று வினவுகிறார்.
அவர்கள் உலகத்தை வழிநடத்தப் போகும் மகான் ஒருவர் உங்களுக்கு மகனாகப் பிறக்கப் போகிறார் என அந்தக் கனவுக்குப் பலன் கூறுகிறார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகார்ஜுன மலைச் சிற்பம் ஒன்றில் இந்தக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
நனவில் இறைச் சிந்தனையில் தோய்ந்து, அதன் பயனாய்க் கனவிலும் இறைவனை தரிசிக்கும் பேறு பெறுவது என்பது, பக்தி சார்ந்த மனத்தின் உயர்நிலையைப் புலப்படுத்துகிறது.
இறைவனை நேரில் காண வேண்டும் எனக் கனவு கண்ட ஆண்டாள், நந்தனார் போன்ற அடியவர்கள், முதலில் இறைவனைக் கனவில் கண்டார்கள். பின்னர் அவர்களே நேரிலும் கடவுளைக் காணும் பாக்கியம் பெற்றுக் கடவுளோடு கலந்தார்கள். கனவு நனவான வரலாறே நம் ஆன்மிகம்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- சர்க்கரை வியாதி, உப்பு சத்து காரணமாக குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்புகள் ஏற்படலாம்.
- தாயின் மனநிலையானது மிகுந்த சந்தோஷத்துடனும், அமைதியுடனும் இருந்தால் அந்த குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
ஒரு பெண் இயற்கையாக கருத்தரிக்கும் கர்ப்பத்துக்கும், ஐ.வி.எப். முறையில் செயற்கையாக கருத்தரிக்கும் கர்ப்பத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கர்ப்பம் இரண்டுமே ஒன்று தான் என்றாலும் அதில் உள்ள பிரச்சனைகள் வேறுபடும். கர்ப்பப்பையில் கரு ஒட்டி வளரும்போது சில வகையான சைட்டோகைன்கள் எனப்படும் புரதம் வெளியாகிறது. இந்த சைட்டோகைன்களில், இயற்கையான கருத்தரிப்புக்கும், செயற்கையான கருத்தரிப்புக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது.
சைட்டோகைன்கள் குறைவதால் ஏற்படும் பாதிப்பு:
கர்ப்பப்பையில் கரு வளரும்போது நஞ்சு உருவாக்கம், நஞ்சுவுக்கு போகும் ரத்தக்குழாய்கள், நஞ்சுவில் உருவான அனைத்து ரத்தக்குழாய்கள் வளர்ச்சி ஆகியவற்றை சார்ந்த விஷயம் தான் சைட்டோகைன்கள். இந்த சைட்டோகைன்கள் பொதுவாக ஐ.வி.எப். செயற்கை கருத்த ரிப்பில் குறைவாக உருவாகிறது.
இதனால் அந்த கரு வளரும்போது நஞ்சுவுக்கு வரும் ரத்தக்குழாய்கள் சீராக வளராததாலும், நஞ்சுவில் உருவாகும் சைட்டோகைன்கள் கெமிக்கல் சரியாக இல்லாத காரணத்தா லும், பலநேரங்களில் குறை பிரசவம் ஏற்படுவதற்கான அளவில் சைட்டோகைன்கள் நஞ்சுவில் இருப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பொதுவாக இயற்கையான கர்ப்பத்தில் கூட நஞ்சுவில் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனையெல்லாம் வரும். அதாவது கருவில் இரட்டை குழந்தைகள் உருவாகும் பெண்கள், தொற்று கிருமிகளால் பாதிக்கப்படும் பெண்கள் ஆகியோருக்கும் சில சமயங்களில் நஞ்சுவில் பாதிப்பு ஏற்பட்டு குறை பிரசவம் ஏற்படலாம்.
இப்படிப்பட்ட பாதிப்பு கொண்ட பெண்களுக்கு எந்த அளவில் சைட்டோகைன்கள் இருக்குமோ, அதே அளவு தான் செயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்களுக்கும் சைட்டோகைன்கள் குறைவாக இருக்கிறது என்று பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கிறது.
அதன்படி இதுபோன்ற பெண்களுக்கு சைட்டோகைன்கள் அளவு மாறுபடும் நிலையில் நஞ்சுவின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் பல நேரங்களில் குறை மாத பிரசவம், குறை பிரசவம், குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பு ஏற்படும். நஞ்சுவின் பிரச்சனைகளால் இவை அனைத்தும் ஐ.வி.எப். கர்ப்பத்தில் அதிகமாக உள்ளது.
தாயின் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்பு:
இதுதவிர இந்த குழந்தைகள் பிறந்தவுடன் சில பிரச்சனைகள் ஏற்படும். அதாவது குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இது தவிர இந்த குழந்தைகளுடைய எடை குறைவு, அதனால் வரும் பிரச்சனைகள், குறை பிரசவத்தினால் குழந்தைக்கு குறை மாதத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஆகியவை அனைத்தும் ஐ.வி.எப். கருத்தரிப்பில் அதிகமாக ஏற்படுகிறது. இந்த வகையில் கரு வளர்ச்சி, தாயின் உடல் நிலை ஆகியவை ஐ.வி.எப். கர்ப்பத்தில் பிரத்தியேகமாக பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறது. மேலும் இயற்கையாக கருத்தரிக்கும் பெண்களை ஒப்பிடும்போது ஐ.வி.எப். முறையில் கருத்தரிக்கும் பெண்க ளுக்கு சர்க்கரை சத்து, உப்பு சத்து, ரத்த அழுத்தம் ஆகியவை 5 முதல் 8 சதவீதம் கூடுதலாக வர வாய்ப்புள்ளது. சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படவும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.
சர்க்கரை வியாதி, உப்பு சத்து காரணமாக குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்புகள் ஏற்படலாம். பொதுவாக ஐ.வி.எப். கர்ப்பத்தில் குழந்தை பிரசவம் ஆகும்போது நிறைய நேரங்களில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி, அதனால் ஏற்படும் விளைவுகளும் தாய்க்கும், குழந்தைக்கும் சில பிரச்சனைகளை உருவாக்கலாம். இது இயற்கை முறை கர்ப்பத்தில் அதிகமாக இருப்பதில்லை. செயற்கை கருத்தரிப்பில் குழந்தை தானாக பிறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஐ.வி.எப். கர்ப்பம் தரிக்கும் பெண்கள், ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு, கை, கால் வீக்கம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இயற்கையாக கர்ப்பமாகும் பெண்களுக்கு இந்த பாதிப்பு குறைவாக இருக்கிறது. சிசேரியன் செய்வதால் ஏற்படும் விளைவுகள், பிறந்தவுடன் எடை குறைவாக இருப்பதால் குழந்தைக்கு ஏற்படும் சில தொற்றுக்கள், குழந்தை வயிற்றிலேயே இறப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவையும் ஐ.வி.எப். கருத்தரிப்பில் அதிகம் ஏற்படுகிறது. இதுவே இயற்கை கருத்தரிப்பில் இந்த வாய்ப்புகள் மிக மிக குறைவு.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகள்:
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐ.வி.எப். முறையில் கருத்தரிக்கும் பெண்கள் பலருக்கும் இருக்கிற ஒரு பெரிய பிரச்சனையே மன அழுத்தம் தான். பல பெண்களுக்கு கர்ப்பம் ஆகி விட்டோம் என்கிற சந்தோஷத்தை விட, கர்ப்பம் பாதுகாப்பாக இருக்குமா? தானாக குழந்தை பிறக்குமா அல்லது சிசேரியன் செய்ய வேண்டுமா? குழந்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக இருக்குமா? நிறை மாதம் வரை பிரசவம் தாங்குமா அல்லது இடையில் ஏதாவது குறைபாடுகள் வருமா என்கிற பலவிதமான கேள்விகள் அவர்கள் மனதில் எழுகிறது. இப்படிப்பட்ட பலவிதமான கேள்விகளால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள்.
பெண்களின் இந்த மனரீதியான பிரச்சனையானது குழந்தையின் வளர்ச்சி, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக அமைகிறது. தாயின் மனநிலையானது மிகுந்த சந்தோஷத்துடனும், அமைதியுடனும் இருந்தால் அந்த குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைக்கு எந்த குறைபாடுகளும் வராது. ஆனால் ஐ.வி.எப். முறையில் கர்ப்பமாகும் பெண்களுக்கு சந்தோஷத்தை விட பய உணர்வுதான் அதிகமாக ஏற்படுகிறது. இந்த பய உணர்வு தாயின் உடல் நிலையையும் பாதிக்கும்.
சில நேரங்களில் இந்த மாதிரியான பெண்களுக்கு பொதுவாக உடல் பருமன் அதிகமாக இருக்கும். நீரிழிவு ஏற்கனவே இருக்கலாம். இவை அனைத்துமே கரு வளர்ச்சியை பாதிக்கும். இந்த வகையில் இயற்கை முறை கர்ப்பம், ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு இவை இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. 2 பேருக்கும் ஒரே வயது, ஒரே எடை, ஒரே மாதிரியான செயல்பாடு ஆகியவை சீராக இருந்தாலும், ஐ.வி.எப். மூலம் கர்ப்பம் தரிக்கும் பெண்ணுக்கு இத்தகைய பிரச்சனைகள் மிக அதிகம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பல நேரங்களில் ஐ.வி.எப். கருத்தரிப்பு முறை மூலம் கருத்தரிக்கும்போது நஞ்சு குறைபாடுகளால் 7 அல்லது 8 மாதத்துக்குள் குழந்தையின் நஞ்சு முதிர்வடைந்து குழந்தை சில நாட்களுக்கு முன்பாகவே பிறப்பது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு சீராக அமையாது.

பாதுகாப்பான கர்ப்பமும் குழந்தை பிறப்பும்:
இந்த வகையில் ஒரு ஐ.வி.எப். கர்ப்பம் என்பது அதற்குள் உள்ளடங்கிய சில பிரச்சனைகளோடு இருக்கிறது. இதை தெளிவாக தெரிந்துகொண்டு ஒவ்வொரு கர்ப்பிணிகளும் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு என்றால், அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டும். மேலும் இதைப்பற்றி தெளிவாக தெரிந்த மருத்துவரிடம் கர்ப்பகால பரிசோதனைகளை செய்யுங்கள். இதைப்பற்றி முழுமையாக தெரியாத மருத்துவரிடம் சென்று காண்பிக்கும்போது, கர்ப்பிணிகளுக்கு இந்தெந்த பிரச்சனைகள் வரும் என்பதை முன்பே கணிக்க தெரியாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கலாம். பல நேரங்களில் குழந்தை வயிற்றில் இறப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
இதன் காரணமாக பிரசவ காலத்தில் ஏற்படுகிற பிரச்சனைகளும் அதிகமாகும். தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பு இருக்காது. ஐ.வி.எப். செயற்கை முறையில் கருத்தரிக்கும் கர்ப்பம் மிகவும் விசேஷமானது. இதற்குள் உள்ளடங்கிய பிரச்சனைகள், இயற்கையான கர்ப்பத்தை விட மாறுபாடு உள்ளது.
எனவே ஐ.வி.எப். செயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்கள் இதைப்பற்றி தெளிவாக தெரிந்த மருத்துவரிடம் கர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்து, நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் பிரசவ காலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கர்ப்பமும், பிறக்கும் குழந்தையும் பாதுகாப்பாக இருக்கும்.
- மிகுந்த தேசப்பற்றுடன் வளர்ந்தார்.
- ரவீந்திர நாத் தாகூர் ஜகதீஷ் சந்திர போஸை மிகவும் போற்றினார்.
தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்த ஒருவர் யார்? மார்கோனி வானொலியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அதைக் கண்டுபிடித்தவர் யார்? அவர் தான் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ்.

பிறப்பும் இளமையும்:
இன்றைய பங்களாதேஷில் இருக்கும் டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் ஜகதீஷ் சந்திர போஸ் 1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி பிறந்தார்.
தந்தையார் பகவான் சந்திர போஸ் பிரிட்டிஷ் இந்தியாவில் அரசாங்க உயர் அதிகாரியாகப் பணி புரிந்தார். ஆனால் தேசப்பற்று மிகுந்தவர். தனது மகனை சாதாரண ஏழை எளிய மக்கள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்தார்.
தந்தையின் வழிகாட்டுதலுக்கு இணங்க அனைவருடனும் எளிமையாகப் பழகிய ஜகதீஷ், படிப்பில் சூரனாக விளங்கினார். மிகுந்த தேசப்பற்றுடன் வளர்ந்தார். போஸின் தாயாரோ இந்தியப் பெண்மணிக்குரிய இலக்கணத்துடன் வாழ்ந்தவர். தன் மகனுக்கு நல்ல நற்பண்புகளைக் கற்பித்தார்.
பள்ளிப்படிப்பு:
ஆரம்பக் கல்வியை தூய சேவியர் உயர் நிலைப்பள்ளியில் முடித்துக் கொண்ட ஜகதீஷ் கல்கத்தா சென்று கல்வியைத் தொடர்ந்தார். கல்கத்தாவில் ஒரு மிஷனரி பள்ளியில் அவர் சேர்ந்து படித்த போது அங்கிருந்த ஆங்கில மற்றும் ஆங்கிலோ இந்திய மாணவர்கள் அவரது எளிமையையும் நாட்டுப்புற பின்னணியையும் கண்டு கேலி செய்ய ஆரம்பித்தனர்.
அந்த மாணவர்களுள் குத்துச் சண்டை தெரிந்த ஒருவன் அடிக்கடி அவரைக் குத்தி வம்புக்கு இழுப்பது வழக்கம். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய போஸ் ஒரு நாள் அவன் சண்டைக்கு வந்த போது அவனை அடித்து நொறுக்கி விட்டார்.
அன்றிலிருந்து அவர் மதிப்பு பள்ளியில் உயர்ந்தது. கல்கத்தாவில் 19-ம் வயதிலேயே பட்டத்தைப் பெற்ற பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.
கல்லூரியில் ஆசிரியர்:
லண்டனில் தன் மேல் படிப்பை முடித்து விட்டு கல்கத்தாவிற்குத் திரும்பி வந்த போஸ் 1885-ம் ஆண்டு பிரஸிடென்ஸி காலேஜில் பேராசிரியராகப் பணி புரியச் சேர்ந்தார். ஆனால் அவரது சம்பளமோ மற்ற ஐரோப்பிய பேராசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
அத்தோடு புதியவர் என்பதால் அந்த சம்பளத்திலிருந்தும் இன்னும் கொஞ்சம் குறைக்கப்பட்டது. இதனால் வெகுண்ட போஸ் அந்த சம்பளத்தை ஏற்கவில்லை. ஆனாலும் பணியை விடாது தொடர்ந்து செய்து வந்தார்.
மாதாமாதம் சம்பளம் வாங்காமல் அவர் பணி புரிந்தது மூன்று வருடம் வரை தொடர்ந்தது. இறுதியில் தங்கள் தவறை உணர்ந்த நிர்வாகத்தினர் ஒரு விசேஷ ஆர்டரை மாண்புமிகு ஹிஸ் மெஜஸ்டிக் அரசின் வாயிலாகப் பிறப்பித்தனர். இதன் மூலம் மூன்று ஆண்டுக்கான முழு சம்பளத்தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.
கல்லூரியில் வேலை பார்க்கும் போதே பல்வேறு துறைகளிலும் தன் ஆராய்ச்சியை அவர் தொடங்கலானார்.
தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சி:
தாவரங்கள் மிருகங்களைப் போலவே வலியை உணரும் தன்மை படைத்தவை என்பது போஸின் முடிவு. பல்வேறு சோதனைகள் மூலமாக இதைக் கண்டறிந்த போஸ் உலகிற்கு இதைக் காண்பிக்கத் துடித்தார். தனது கண்டுபிடிப்பை உலகிற்கு நிரூபிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை நிரூபிக்கத் துடித்த பிரிட்டிஷார் அவரை அங்கீகரிக்கவே இல்லை என்பது ஒரு புறமிருக்க அவரை அவமானப்படுத்தினர்; தொல்லை கொடுத்தனர்.
சகோதரி நிவேதிதா தேவியின் உதவி:
இதிலிருந்தெல்லாம் அவர் மீண்டு வர உத்வேகமூட்டியவர் சகோதரி நிவேதிதை என்பது பலருக்கும் தெரியாது.
ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பதை நிவேதிதா தேவி ஆரம்பத்திலேயே நன்கு உணர்ந்து கொண்டார்.
ஆயிரத்தி எண்ணூற்றுத் தொண்ணூறுகளிலேயே ஜகதீஷ் சந்திர போஸ் ரேடியோ டிரான்ஸ்மிஷன் பற்றிய அரிய கண்டுபிடிப்பைக் கண்டார். அத்துடன் தாவரங்கள் வலியை உணரும் சக்தி கொண்டவை என்று அவர் கூறிய போது யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை.
ஆனால் நிவேதிதை அவரிடமிருந்த அபாரமான அறிவியல் அறிவை நன்கு கண்டு கொண்டு அவரை ஊக்குவித்ததோடு, அவருக்கு பண உதவியும் தங்க இடமும் கூடத் தந்தார். 1899-ம் ஆண்டில் பாரிஸில் விவேகானந்தரும் நிவேதிதையும் இருந்த போது ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களைச் சந்தித்தார்.
போஸும் அவரது மனைவி அபலாவும் விம்பிள்டனில் இருந்த நிவேதிதையின் வீட்டில் 1900ஆம் ஆண்டு தங்கி இருந்தனர்; திடீரென்று அங்கு போஸ் நோய்வாய்ப்படவே நிவேதிதையின் தாயார் மேரி நோபிள் தான் அவருக்குத் தேவையான உதவிகளை ஒரு மாத காலம் அவர் நோயிலிருந்து குணமடையும் வரை செய்தார்.
இங்கிலாந்தில் இந்தியர்களை மதிக்காத ஒரு பெரும் ராட்சச பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் மோத வேண்டி இருப்பதை உணர்ந்த போஸ் மிகவும் மனம் நொந்து போனார்.
இப்படி மனம் நொந்திருந்த போஸின் மன நிலையை நன்கு அறிந்து கொண்டு நிவேதிதை, ஆய்வு லாபரட்டரியை அமைக்க அவருக்கு உதவி செய்தார். பிரபல வயலின் மேதை ஓல் புல் -இன் மனைவியும் விவேகானந்தரின் சிஷ்யையுமான சாரா சாப்மன் புல் தந்த நன்கொடை மூலம் இந்த ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டது.
தாகூருக்கு கடிதம்:
ரவீந்திர நாத் தாகூர் ஜகதீஷ் சந்திர போஸை மிகவும் போற்றினார். லண்டனிலிருந்து 1900ஆம் ஆண்டு லண்டனிலிருந்து போஸ் தனது மன வேதனையை ரவீந்திர நாத் தாகூருக்கு ஒரு கடிதம் மூலமாகத் தெரிவித்தார், இப்படி: "நீங்கள் நான் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களை அறிய மாட்டீர்கள்.
உங்களால் கற்பனையே செய்ய முடியாது. 'தாவர உணர்வு' பற்றிய எனது கட்டுரையை சென்ற மே மாதம் ராயல் சொஸைடியில் வெளியிடப்படுவதை வாலர் மற்றும் சாண்டர்ஸன் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் வாலர் அதைத் தனது பெயரில் நவம்பர் மாதம் வெளியிட்டுக் கொண்டார்.
எனக்கு இத்தன நாள் வரை அது தெரியாமலேயே இருந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். பாரதபூமியின் தூசியைத் தொட்டு வாழ்க்கையின் உற்சாகத்தை மீண்டும் பெற இப்போது இந்தியா வர விரும்புகிறேன்."

க்ரஸ்கோகிராப் கருவி:
தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்பதைக் காட்ட க்ரஸ்கோகிராப் (Crescograph) என்ற கருவியை அவர் வடிவமைத்தார். தாவரத்தின் வளர்ச்சியை மிக நுட்பமாக, நுணுக்கமாக இது காட்டும்.
அதாவது ஒரு லட்சத்தில் ஒரு பங்கு என்ற அளவிற்கு மிக நுண்ணிய அளவில் தாவரத்தின் வளர்ச்சியை இது காட்டியதால் உலகமே வியந்து அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது. அவரது கருவி தாவரம் அசையும் போது அதுவும் அசைந்து துல்லியமாக தாவர இயக்கத்தைக் காட்டியது.
இந்திய துணைக்கண்டத்திலிருந்து விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக முதன் முதலாக ஒரு பேடண்டைப் பெற்றவர் அவரே. பிரபல விஞ்ஞானிகளான டெஸ்லா, மார்கோனி, போபாவ் ஆகியோர்களுக்குச் சமமாக இந்த சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார்.
எவ்வளவோ பேர் தடுத்தும் கூட அவர் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1920இல் ராயல் சொஸைடிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் அறிவியலில் கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
சதியை முறித்த போஸ்:
ஒரு முறை 'லெக்சர் டூர்' ஒன்றுக்காக அவர் இங்கிலாந்து சென்றிருந்தார். அவரது கண்டுபிடிப்புகளை நேரடியாகக் காண்பித்து விளக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாவரங்களைப் பிடுங்கும் போது வலியால் அவை துடிக்கின்றன என்பதையும் விஷம் கொடுக்கப்பட்டால் அவை துடிதுடித்து இறக்கின்றன என்பதையும் அவர் நேரில் காட்ட விழைந்தார்.
ஏராளமான விஞ்ஞானிகளும் பெண்கள் பலர் உள்ளிட்ட பிரபலமானவர்களும் குழுமி விட்டனர். போஸ் விஷம் அடங்கிய ஊசியை எடுத்து தாவரத்தின் மீது இஞ்ஜெக்ட் செய்தார். தாவரம் துடிதுடிக்க வேண்டும். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. இதைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
போஸோ தன் நிதானத்தை இழக்கவில்லை. யோசிக்க ஆரம்பித்தார். இந்த விஷம் தாவரத்தை ஒன்றும் செய்யவில்லை எனில் என்னையும் ஒன்றும் செய்யாது என்ற முடிவுக்கு வந்த அவர் அதே விஷத்தைத் தன் மீது ஏற்றுமாறு கூறினார்.
இஞ்செக்ஷன் ஊசி எடுக்கப்பட்ட போது அங்கு வந்திருந்தோரில் ஒருவன் தான் விஷத்திற்குப் பதில் அதே நிறத்தில் உள்ள சாயத் தண்ணிரை வைத்து விட்டதாக ஒப்புக் கொண்டான். போஸ் நிஜமான விஷத்தை எடுத்து தாவரத்தின் மீது செலுத்த அது துடி துடித்து இறந்தது. அனைவரும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
தன்னையே சோதனைக்குட்படுத்திக் கொள்ளவும் தயங்காத மேதை ஜகதீஷ் சந்திர போஸ்!

பெர்னார்ட்ஷாவின் ஆச்சரியம்!
எதையும் நேரில் பார்க்க ஆசைப்படும் பெர்னார்ட் ஷா ஒரு முறை அவரது சோதனையைப் பார்க்க வந்தார். ப்ரோமைட் கரைசலில் முட்டைகோஸ் இலையைப் போடும் போது அந்த விஷக் கரைசலில் அது துடிதுடிக்க ஆரம்பித்ததைப் பார்த்த பெர்னார்ட் ஷா அந்த பயங்கரத்தைப் பார்க்க முடியாமல் வேதனைப் பட்டார்; சோதனையை எண்ணி ஆச்சரியப்பட்டார்.
அறிவியல் புனைகதைகளில் ஆர்வம்:
மிகப் பெரிய விஞ்ஞானியாக இருந்த போதிலும் கூட ஸயின்ஸ் ஃபிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைகதைகளை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது.
வங்காள மொழியில் அவர் எழுதிய 'போலடாக் தூஃபான்' என்ற அவரது பிரபலமான கதை எப்படி ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலைக்குத் தடவிக் கொள்ளும் எண்ணெய் ஒரு சூறாவளியைத் தடுத்து நிறுத்தியது என்பதை சுவைபடச் சொல்கிறது.
எண்ணெயானது புறப்பரப்பு விசையை (Surface tension) மாற்றி நீரைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பது தான் கதையின் அடிப்படையான கரு. 'நிருத்தேஷர் கஹானி' என்ற அவரது நாவல் தான் முதன் முதலாக வங்க மொழியில் எழுதப்பட்ட ஸயின்ஸ் ஃபிக்ஷன் நாவல்!
குடும்பம்:
1887-ல் அவர் அபலா (பிறப்பு 8-8-1865 மறைவு 25-4-1951) என்பவரை மணந்தார். அபலா போஸ் சிறந்த சமூக சேவகி. பெண் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்.
மறைவு: 1937-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி போஸ் மறைந்தார்.
அனைத்து உயிர்களையும் நேசியுங்கள்:
தன் வாழ்நாள் முழுவதும் பல அரிய கருத்துக்களைச் சொல்லிக் கொண்டே வந்தார் போஸ். அவற்றில் சில..
மனமே ஒரு சோதனைச்சாலை. அதில் மறைத்திருக்கும் மாயையை விலக்கிவிட்டால் சத்தியத்தின் விதிகளைக் காணலாம்.
எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே. எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பேருண்மையை உலக மக்களுக்கு உணர்த்திய விஞ்ஞானி!
தாவரங்களுக்கும் உயிர் உண்டு; அனைத்து உயிர்களையும் நேசியுங்கள் என்ற பேருண்மையை உலக மக்களுக்கு உணர்த்தியவர் என்ற அளவில் அபூர்வமான உன்னத அறிவியல் அறிஞராகிறார் போஸ்!
- சிறு வயதிலேயே ராகு திசை வருவதால் கல்வியில் அவ்வளவாக ஆர்வமிருக்காது.
- பெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும்.
27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் மிருகசீரிஷம். இது செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரம். இது உடைபட்ட நட்சத்திரம். இதன் முதல் இரண்டு பாதங்கள் சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும் மூன்று, நான்காம் பாதங்கள் புதனின் ராசியான மிதுன ராசியிலும் உள்ளது. அதனால் முதல் இரண்டு பாதங்களில் பிறப்பவர்கள் ரிஷப ராசி காரர்களாகவும், 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசி காரர்களாகவும் இருப்பார்கள்.
மிருகம் என்றால் விலங்கு. சிரிஷம் என்றால் தலை என்றும் பொருள்படும். இதன் தமிழ் பெயர் மான் தலை என்பதாகும்.இந்த நட்சத்திரத்தின் உருவம் மானின் தலையைப் போல் தோற்றமளிப்பதால் மிருகசீரிஷம் என்றழைக்கப்படுகிறது.
மிருகசீரிஷ நட்சத்திர பொதுபலன்கள்
அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுக்கிரனின் வீட்டிலும் புத்திசாலித்தனம் மிகுந்த புதனின் வீட்டிலும் இந்த நட்சத்திரம் சஞ்சரிப்பதால் அழகும் நளினமும். கம்பீரமும் மதிநுட்பம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.
ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதால் அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். தன்னை தானே வழி நடத்திக் கொள்ளும் திடமான நம்பிக்கை கொண்டவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையோடு எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். முன் கோபம் அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும். தவறை கண்டால் தயக்கமின்றி தட்டி கேட்கும் தைரியம் இருக்கும். இவர்கள் மனதில் உள்ளதை பிறர் அறிந்து கொள்ள இயலாது. சுய ரகசியங்களைக் காப்பாற்றுபவர்கள். பேச்சில் வல்லமை பெற்றவர்கள் என்பதால், பிறருக்கு பிடிகொடுக்க மாட்டார்கள். நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் யோகசாலியாக இருப்பார்கள்.
தன்னுடைய சுய சம்பாத்தியத்தை விட தந்தைவழி சம்பாத்தியத்தையும், சுகபோகத்தையும் அனுபவித்து சுகவாசியாக இருப்பார்கள். ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். குல கவுரவம் சமுதாய அந்தஸ்து நிறைந்தவர்கள். உண்மையையும், நேர்மையையும், சத்தியத்தையும் கடைப்பிடிப்பவர்கள். உடன்பிறந்த சகோதர, சகோதரர்களிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். அவர்களின் நல்லது, கெட்டதில் அதிக சிரமம் எடுப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். பழமையை நேசிப்பதுடன் நவீனத்தையும் விரும்புவார்கள். இளம் வயதிலேயே வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அதைச் செயல்படுத்தியும் காட்டுவார்கள்.
கல்வி
சிறு வயதிலேயே ராகு திசை வருவதால் கல்வியில் அவ்வளவாக ஆர்வமிருக்காது. கல்வியைக் காட்டிலும் மற்றவற்றில் நாட்டம் அதிகமிருக்கும். சிலருக்கு கல்வியில் தடை ஏற்படக்கூடும். கணக்கு, நிதித்துறை, கம்ப்யூட்டர், தாவரவியல், விலங்கியல், அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகள் ஒன்றில் புகழ் பெறுவார்கள்.ஒரு டிகிரி படித்தபிறகு உயர் கல்விக்கு வெளியூர், வெளிநாடு செல்வார்கள்.
தொழில்
நல்ல தொழில் ஞானம் நிறைந்தவர்கள். எந்த தொழிலையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறமை நிறைந்தவர்கள். நல்ல ஆராய்ச்சி மனப்பான்மையும்உண்டு ஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள்,
பேச்சுத் தொழில், ஜோதிட நிபுணத்துவம் ஆகியவை இவர்களுக்கு ஒத்துவரும். டைப்பிஸ்ட்டு, ரெயில்வே, வங்கிப்பணி போன்ற தொழில்களும் அமையும். அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும் மேலாளர்கள் மேற்பார்வையாளர் போன்றவையும், இவர்களுக்கு நன்மைதரும் . கராத்தே, சர்க்கஸ், சிலம்பம் போன்ற உடற்பயிற்சித் தொழில்களும் ஏற்றவை.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்
பெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும். குடும்ப பாசத்திலும் அன்பிலும் சிறந்தவர்கள். தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறிமணந்து கொள்ளும் வேகமும், தைரியமும் உண்டு. குடும்பத்தினர் இவர் பேச்சிற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்.
சொத்து, சுகம், வாகன வசதி நிறைந்தவர். தாய், தந்தை வழி உறவுகள் மூலம் சொத்து உண்டு.பண்ணைத் தொழில், ரியல் எஸ்டேட் மூலம் நல்ல வருமானம் உண்டு. பொதுவாகவே மொழிப்பற்றும் இனப்பற்றும் அதிகம் இருக்கும். கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தாய் நாட்டை மறக்காதவர்கள். அரசியல் ஆர்வம் அதிகம் நிரம்பியவர்கள். வீர தீர சாகசங்கள், வீர விளையாட்டில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
தசாபுத்தி பலன்கள்
செவ்வாய் தசா:
ராசி அதிபதி செவ்வாய் என்பதால் முதல் 7 வருடம் செவ்வாய் தசை நடக்கும். இது ஜென்ம நட்சத்திர தாரையின் நட்சத்திரம். பால்ய வயது என்பதால் பெற்றோர்களுக்கு ஸ்திர சொத்துகள் சேரும். தாய், தந்தையருக்கு நல்ல தொழில் உத்தியோக வாய்ப்புகள் வந்து சேரும். ஜாதகருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். அங்காளி, பங்காளி வகையில் சிறு சிறு மனக்கசப்பு தோன்றி மறையும். குடும்ப உறவுகளால் சிறு சிறு சிக்கல்களையும், சிரமங்களையும் பெற்றோர்கள் சந்திக்க கூடிய சிரமங்கள் இருக்கும்.
ராகு தசா:
இதன் தசா ஆண்டு 18 வருடம். இது தன தாரையின் நட்சத்திரமாகும். 7 முதல் 25 வயது வரையான காலகட்டம். குடும்பத்தில் நல்ல வசதி வாய்ப்புகள் கூடும். பிரமாண்ட எண்ணங்கள், கற்பனைகள் மிகுதியாகும். கல்வியில் நாட்டம் குறைவாக இருக்கும். சில குழந்தைகள் தாய், தந்தை வழி தாத்தாவிடம் வளர்வார்கள். கல்லூரி பருவத்தில் நிச்சயம் காதல் பிரச்சினை உண்டு. சிலருக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கும். எதிர்பாராத தனலாபம் வந்து இதயத்தை மகிழ்விக்கும். அனைத்து வழிகளிலும் நன்மைகள் நடக்கும்.
குரு தசா:
இது மூன்றாவது தசையாகும். இதன் தசா ஆண்டு 16 வருடம். இது விபத்து தாரையின் நட்சத்திரமாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். காரிய சித்தி அடைவதில் காலதாமதமாகும்.
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது.வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போராட்டமான காலமாகும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கநிலை காணப்படும். ஒரு சிலர் வாழ்வாதாரத்திற்கு தொலைதூரம் செல்லலாம். எண்ணற்ற மாற்றங்கள் வரும். உறவினர்களை பகைக்காமல் வாழ வேண்டிய காலகட்டமாகும்.
சனி தசா:
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது 4-வதாக வரக்கூடிய சேமதாரையின் தசையாகும். இதன் தசா ஆண்டு 19 வருடம். துணிவும், நம்பிக்கையும் கூடும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை இருக்கும்.இந்த வயதில் பலருக்கு சொத்து சுகம், வாகன பிராப்தம் உண்டாகும். மன நிம்மதி கூடும். சமூகத்தில் பெயர் புகழ் உண்டாகும்.பொருளாதாரத்தில் உச்சத்தை எட்டுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் அதிதமாகும். இறை வழிபாடு மற்றும் ஆன்மீக நாட்டம் மிகுதியாகும். சிறுசிறு உடல் உபாதைகள் தலை தூக்கும். வாழ்க்கையை மன நிறைவோடு வாழ்ந்த மகிழ்ச்சி இருக்கும்.
புதன் தசா:
இது 5வதாக வரக்கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 17. ஒய்வை நோக்கி உடலும் மனமும் செல்லும். சிலர் பிள்ளைகளின் தயவில் வாழலாம். முயற்சியில் தளர்ச்சி உண்டாகும். உடன் இருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். மதிப்பு, மரியாதை குறையும்.மனக்குழப்பம் கூடும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டிய காலம்.
கேது தசா:
இது சாதக தாரையின் நட்சத்திரம். எனினும் வயோதிகம் காரணமாக முத்தியை நோக்கி மனம் செல்லும். மனதில் நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம். உறவினர்களின் உதவி கிடைக்கும். வெகு சிலர் சுக்ர தசையை சந்திப்பார்கள். மிருகசீரிஷ நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள். இந்த நட்சத்திரத்தில் திருமணம், காது குத்துதல், சீமந்தம் செய்தல் ஆபர ணங்கள் செய்தல், தானியம் வாங்குதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், யாத்திரை செல்லுதல், கல்வி கற்க தொடங்குதல் கால் நடைகள் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். இந்த நட்சத்திரத்தில் முருகனை வணங்கி சிகிச்சை துவங்கினால் வியாதிகள் தீரும். குறிப்பாக காது சிகிச்சை செய்பவர்கள் காது கேளாதவர்கள் இந்த நாளில் சிகிச்சை துவங்கலாம். இந்த நட்சத்திரத்தில் செய்யும் செயல்கள் மென் மேலும் விருத்தியடையும். குறிப்பாக வாகனம் மற்றும் தங்கம் வாங்கினால் மீண்டும் மீண்டும் உயர் ரக வாகனம் பிராப்தம் கிட்டும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் அடுத்தடுத்து ஆபர ணங்கள் சேரும். தங்கம் அடமானத்திற்குச் செல்லாது.
சுக்ரன் வீட்டையும் புதன் வீட்டையும் இணைக்கும் நட்சத்திரம் என்பதால் காதல் முயற்சியில் ஈடுபடலாம். அதே போல் ஒருவரிடம் விரும்பிய உதவிகளை பெற இந்த நட்சத்திரத்தில் உதவி கேட்கலாம்.
நட்சத்திர பட்சி: கோழி
யோகம்: சோபனம்
நவரத்தினம்: பவளம்
உடல் உறுப்பு: புருவங்கள்
திசை: கிழக்கு
பஞ்சபூதம்: நிலம்
அதிதேவதை: சந்திரன்
நட்சத்திர மிருகம்: பெண் சாரை
நட்சத்திர வடிவம்: தேங்காய் கண், மனிததலை, மான்முகம்
நன்மை தரும் நட்சத்திரங்கள்: சம்பத்து தாரை: திருவாதிரை, ஸ்வாதி, சதயம்
சேம தாரை: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
சாதக தாரை: அசுவினி, மகம், மூலம்
பரம மிக்ர தாரை: ரோகிணி, அஸ்தம், திருவோணம்
பொதுவான பரிகாரங்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் குரு ராக வேந்திர சுவாமிகள் மற்றும் நரசிம்மரை வழிபட மேன்மை உண்டாகும். மேலும் சொத்து சுகம், வண்டி வாகனம் வாங்குவதில் தடை இருப்பவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து சுவாமிமலை, விராலிமலை முருகனை வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும். சாதக தாரையான 6வது நட்சத்திரம் மகம். மகம் நட்சத்திர நாளில் புனித நீராடுவதால் உடலும், ஆன்மாவும் புனிதமடையும். பவுர்ணமியும் மாசிமகமும் இணைந்த நாளில் குலதெய்வ வழிபாடு செய்து வருவதால் வெற்றி மேல் வெற்றி வரும்.
- கொழுப்புச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கணையம் ஓர் உறுப்பா? உடலில் இது எந்த பாகத்தில் இருக்கிறது? இதன் பணிதான் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் யாவை? இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கலாம்.
ஒரு மனிதன் உயிர்வாழ இதயம், மூளை போன்ற உறுப்புகள் எந்த அளவுக்கு முதன்மையோ அதே அளவுக்குக் கணையமும் முதன்மை வாய்ந்தது.

இது உறுப்பா? எனக்கேட்டால், இலைவடிவில், ஒரு சுரப்பி என்றே சொல்லலாம். வயிற்றின் தொப்புள் பகுதிக்குப் பின்புறத்தில் இருக்கும் இந்த கணையம், டியோடினம் என்று அழைக்கப்படும் சிறுகுடலின் முதல் பிரிவில் இருக்கிறது.
கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த உறுப்பின் செயல்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் உள்ளன.
உடலில் ஹார்மோன்கள் மற்றும் உணவு செரிமானத்திற்கான நொதி என்ற திரவத்தைச் சுரக்கச் செய்வது போன்ற பல பணிகளை இந்தக் கணையம் செய்கிறது. இதன் குறிப்பிட்ட 2 முதன்மை வாய்ந்த செயல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

நொதிகளை சுரக்கும் கணையம்:
நொதி என்பது நாம் உண்ணும் உணவுகளைச் செரிக்க செய்யும் ஒரு வகை நீர்மமாகும். இதைச் சுரக்கச் செய்யும் பணியைக் கல்லீரல், குடல், மற்றும் இரைப்பையுடன் சேர்ந்து கணையமும் செய்கிறது. உணவு மனிதன் உயிர்வாழ எவ்வளவு தேவையோ, அவ்வளவு அதன் சத்துகள் முழுமையாக உடலைச் சென்றடையக் குடலில் நடக்கும் செரிமானச் செயல்பாடுகளும் தேவை.
அந்தப் பணியைத்தான் கணையம் செய்கிறது. இந்த நொதிகள் கணையத்தில் உள்ள குழாய்கள் வழியாகச் சென்று சிறுகுடலின் மேல்பகுதியில் கலக்கின்றன. அதனைத் தொடர்ந்து, குடலில் இருக்கும் உணவில் உள்ளபுரதம், கொழுப்புமாவு சத்துகளைப் பிரித்துச் செரிக்க உதவுகிறது.
லிபேஸ் -இந்த நொதி உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்துடன் இணைந்து உடைக்கிறது.
புரோட்டீயேஸ் - இந்த நொதி புரதங்களை உடைக்கிறது. அமிலேஸ் -இந்த நொதி மாவுச்சத்தைச் சர்க்கரையாக மாற்றுகிறது.
ஹார்மோன்களைச் சுரக்கும் கணையம்:
எங்குப் பார்த்தாலும் நீரிழிவு நோய். இன்றளவில் நீரிழிவு நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது வருவதற்கு என்ன காரணம்? நம்மில் பலருக்கு நீரிழிவுநோய் என்றால் உடலில் இன்சுலின் அளவு குறைவாகச் சுரப்பதால் வருவது என்றுதான் தெரியும். ஆனால் இந்த இன்சுலினைச் சுரப்பது கணையம் என்று தெரிவதில்லை.
நாளமில்லாச் சுரப்பியாகச் செயல்படும் இந்தக் கணையம் இன்சுலின், குளுகோகான் என்ற இரு ஹார்மோன்களைச் சுரக்கிறது. அதில் இன்சுலின் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், குளுகோகான் சர்க்கரையின் அளவைக் அதிகரிக்கவும் செய்து, உடலின் ரத்தச் சர்க்கரையின் அளவைச் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.
இதுவரை கணையத்தின் முதன்மை, அதன் பணிகள் குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து கணையத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கணையத்தைப் பாதிக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள்
கணைய அழற்சி, கணையப் புற்றுநோய், சிஸ்டிக் பைப்ரோசிஸ், மது மற்றும் பித்தப்பைக் கற்களால் ஏற்படும் நோய்கள் கணையத்தைப் பாதிக்கிறது.

கணைய அழற்சி (Pancreatitis):
கணையத்தைப் பாதிக்கும் நோய்களில் மிகவும் முதன்மையானது கணைய அழற்சியாகும். இந்த நோயின் காரணத்தால் ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
பித்தப்பைக் கற்கள் அல்லது அதிக மது அருந்துதல் பொதுவாகக் கணைய அழற்சிக்குக் காரணமாக அமைகின்றன. அதுமட்டுமன்றி, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும் போதும் (உயர் டிரைகிளிசரைடு டி.ஜி.எல். அளவு) கணைய அழற்சி ஏற்படுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதன் அறிகுறிகள். வயிற்றின் மேல் பகுதியில் வலி உணர்வு, உணவு உட்கொண்டபின் ஏற்படும் வயிற்று வலி, முதுகு பகுதிக்கும் பரவுதல், உடல் எடை குறைவது, சில நேரங்களில் காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஆகும்.
கணையப் புற்றுநோய்:
புற்றுநோய் என்பது இக்காலத்தில் மனிதர்கள் இடையே நாளுக்கு நாள் கூடி வருகிறது. பலவகையான புற்றுநோய்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கணையப் புற்றுநோய். கணையத்தில் உள்ள செல்கள் தம் கட்டுப்பாட்டை இழந்து பல்கிப் பெருகுவதால் கணையப்புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தநோய் முற்றும் போது அதன் செல்கள் பிறபாகங்களுக்கும் பரவுகின்றன.
இதன் அறிகுறிகள், முதுகில் பரவும் வயிற்று வலி, பசியின்மை அல்லது எதிர்பாராத எடை இழப்பு, தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் ஏற்படுவது (மஞ்சள் காமாலை), வெளிர் நிற மலம், கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர், தோல் அரிப்பு, உடலில் ரத்தக் கட்டிகள்.நீரிழிவு நோயின் அறிகுறிகள் (மீறியப் பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மீறிய தாகம்)
கணையச் சிக்கல்களை கண்டறிவது எப்படி?
அழற்சியைத் துல்லியமாகக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பித்தப்பைக் கற்கள் மற்றும் அழற்சியைக் கண்டறிய டோமோகிராபி (சி.டி.), ஊடுகதிர் (ஸ்கேன்), ரத்த ஆய்வுகள்.

கணையத்தைப் பாதுகாக்கும் வாழ்வியல் வழிமுறைகள்:
* மது மற்றும் புகைபழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
* கொழுப்புச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
* புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* இரவில் கால தாமதமாய் உணவு உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
* நினைக்கும் நேரங்களில் எல்லாம் கிடைத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
* வாரத்திற்கு ஒருமுறையாவது உண்ணாநோன்பு இருப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
* உடல் பருமனாவதைத் தவிர்க்கத் தேவையான வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
* மிகவிரைவாக உடல் எடையைக் குறைக்க முயலாமல், பொறுமையாக ஒரு மாதத்திற்கு 2 முதல் 4- கிலோகிராம் வரைமட்டுமே எடையைக் குறைக்க வேண்டும்.
* உணவுப் பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து உண்பதை தவிர்க்க வேண்டும்.
* அன்னாசி, பப்பாளி, மாம்பழம், தேன், வாழைப்பழம், வெண்ணெய், மற்றும் இஞ்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இயற்கையாகவே நொதிகளைச் சுரக்கச் செய்யும் தன்மை உண்டு. இதனால் அந்த உணவுகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இது போன்ற வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் கணையத்தை நலத்துடன் பாதுகாக்க முடியும். கணையம் தொடர்பான நோய்களில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
- பக்தர்களின் வேண்டுதல்களை பெருமாள் உடனே கொடுப்பார்.
- அலை பாயும் மனதால் தங்களது ஒழுக்கத்தைத் தவற விடுவார்கள்.
"பிச்சை எடுத்தாராம் பெருமாளு!! அதை புடுங்கி தின்னாராம் அனுமாரு.." கிராமங்களில் சொலவடையாக சொல்லும் இந்த பழமொழி ஆனது, தன்னை வணங்கி பிரார்தித்து கேட்கும் வேண்டுதல்கள் மற்றும் கேட்காத வேண்டுதல்களையும் பக்தர்களின் தேவையறிந்து கருணையோடு வழங்கும் இரண்டு தெய்வங்களின் கீர்த்தியை குறைப்பதாக உள்ளதே என்று பழமொழிக்கான நிஜ அர்த்தத்தை தேடும் போது கிடைத்த தகவல்கள் உங்கள் பார்வைக்கு..
தவறுதலான ஒரு சொலவடை உச்சரிப்பால் அர்த்தம் மாறிய பழமொழிகளுள் இதுவும் ஒன்று ஆகும்.
பொதுவாக வாழ்க்கை பந்தத்தில் நாம் சிக்கி உழலும் போது சந்தோசமாக இருக்கும் நேரத்தைக் காட்டிலும் சங்கடமாக இருக்கும் நேரத்தில் கடவுளை நன்றாகவே தேடுவோம், கடவுளை நன்றாகவே வணங்குவோம்.
நமது தேவைகளை நிறைவேற்றி தர கடுமையான விரதம் இருந்து கடவுளிடம் நமது வேண்டுதல்களை பிரார்த்தனையாக தெரிவிப்போம்.
எய்யா.. நாராயண சாமி!! பெருமாளே!
ஊருக்கு மேக்கால இருக்க மலங்கரையில (மலையோரம்) நாலு ஏக்கர் தோப்பு வெலைக்கு வருது. வாங்கிப் போட ஆசையா இருக்கு. நல்ல முறையில எடவாடு முடிஞ்சு பத்திரம் ஆயிடுச்சுன்னா திருப்பதிக்கு வந்து தல முடியை காணிக்கையா தாரேமுய்யா! என தான் நினைக்கும் காரியம் வெற்றி அடைய பெருமாளிடம் நேர்ந்து கொள்வார்கள்.
மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும். மகளுக்கு திருமணம் ஆக வேண்டும், சொந்த வீடு வேண்டும், கார் வேண்டும் என பெருமாளிடம் கேட்பார்கள்.
இன்னும் சிலரோ உன்னோட புள்ள தானே நான்!!. எலி வளைன்னாலும் தனி வளையா இருக்கணுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்களே.
புறாக்கூடு மாதிரியான வாடகை வீட்டுல இருந்து கஷ்டப்படுறேனே. நாம் படுற செரமம் ஒன்னோட கண்ணுக்கு தெரியலையா??
எய்யா!! எம்பெருமாளே!!! ஒம்ம கால புடிச்சு பிச்சையா கையேந்தி கேக்குதேன். என்னையும் கண்ண தொறந்து பாத்து ஒம்மோட கருணையால ஒரு வீட்ட வாங்கி தாரும். நடந்தே திருப்பதிக்கு மலையேறி வந்து கும்பிட்டு போவேன் பெருமாளே!!
என்று பெருமாளிடம் நம்முடைய வேண்டுதல்களை வேண்டி இருப்போம், அல்லது பிறர் வேண்டுவதை கேட்டிருப்போம்.
உள்ளன்போடு தன்னிடம் உரிமை கலந்த பக்தியோடு கேட்கும் பக்தர்களின் வேண்டுதல்களை பெருமாள் உடனே கொடுப்பார்.
ஆம்!! பக்தர்கள் பெருமாளிடம் பிச்சையாக பணிவு கலந்த பக்தியோடு கண்களில் கண்ணீரோடு மனமுருகி கேட்கும் வேண்டுதல்களை உடனே பெருமாள் நிறைவேற்றிக் கொடுப்பார்.
தனது பக்தர்கள் அல்லல் படுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் வாரி வாரி கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவன் வைகுண்ட வாசரான பெருமாள்.
பெருமாளின் கருணையால் பணம், பதவி, புகழ் கிடைத்ததும் சிலர் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.
பணம், பதவி, புகழ் வந்ததும் பெரும்பான்மையானோர் முந்தைய காலத்தில் தாங்கள் சிரமப்பட்ட நிலையை மறந்து மனதை அலை பாய விடுவார்கள்.
சற்று பணம் வந்ததும் சிலர் ஏழ்மை காலத்தில் தன்னுடன் இருந்த பக்தி நெறியை மறந்து கடவுளை வணங்காமல், கடவுளுக்கு பயப்படாமல், கடவுளை மதிக்காமல் நடந்து கொள்வார்கள்.

குரங்கைப் போல் அங்கும் இங்கும் அலை பாயும் மனதால் தங்களது ஒழுக்கத்தைத் தவற விடுவார்கள்.
கிளைக்கு கிளை இங்கும், அங்கும் குரங்கு தாவுவதை போல் மனம் அங்கும், இங்கும் அல்ப விஷயங்களுக்கு சபலப்பட்டு அலை பாய்வதால் "மனம் ஒரு குரங்கு" என்று மனதை குரங்குக்கு ஒப்பிட்டு சொல்வார்கள்.
கிராமங்களில் குரங்கினை அனுமார் என்று அழைப்பதுவும் உண்டு..
சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வரும் பொழுது அனுமன் தன் வாலினால் ஏற்படுத்தப்பட்ட தடத்தின் வழியாக பாயும் ஆறு குரங்காறு என பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டாலும் அனுமன் நதி என்று தான் பெரும்பான்மையானோர் அழைப்பார்கள்.
பெருமாள் பிச்சையாக தந்த பொன், பொருள், புகழ் போன்ற செல்வங்களை அலை பாயும் குரங்கு போன்ற மனதால் மது, மாது, சூது போன்றவற்றில் தொலைத்து விட்டு நிர்கதியாய் நிற்பார்கள் சிலர்.
மனதை குரங்கை போல் அலைபாய விடாமல் இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு நேர்மையாக நடந்தால் இறைவன் நமக்கு தந்த வீடு,பேறு,புகழ் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும்.
பெருமாள் பிச்சையாக தந்தது தான் இந்த செல்வங்கள் என என்னாமல் மனதை குரங்கை போல் அலை பாய விட்டு தான் தோன்றித்தனமாக நடந்தால் அனைத்து செல்வங்களும் வந்த வேகத்தில் காணாமல் சென்று விடும்.
இதை உணர்த்துவதற்காகவே "பிச்சை கொடுத்தாராம் பெருமாள்...
அதைப் பிடுங்கி தின்றாராம் அனுமார்"
என சொலவடையாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.
பேச்சு வழக்கில் திரித்து பழமொழியை தவறாக உச்சரித்து பழமொழியின் பொருளையும் திரித்து பெருமாளையே பிச்சை எடுக்க வைத்து விட்டனர்.
"பிச்சை எடுத்தாராம் பெருமாள் பிடுங்கித் தின்றாராம் அனுமார்" என்பது தவறான சொலவடை.
"பிச்சை கொடுத்தாராம் பெருமாள் பிடுங்கி தின்றாராம் அனுமார்" என்பது தான் சரியான சொலவடை ஆகும்.
தொடர்புக்கு-isuresh669@gmail.com






