என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு ஆந்திர அரசு ரூ.3 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அத்துடன் வீட்டு மனை மற்றும் அரசு வேலையும் வழங்குகிறது.
    ஐதராபாத்:

    பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

    அவ்வகையில், ஆந்திர மாநில அரசு அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர, புதிதாக உருவாகி வரும் தலைநகர் அமராவதியில் 1000 சதுர யார்டு வீட்டு மனையும், குரூப்-1 நிலையில் அரசு பணியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    மேலும், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கவும், ஆந்திராவில் பேட்மிண்டன் அகாடமி தொடங்க விரும்பினால் நிலம் ஒதுக்கி கொடுக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை அல்லிசன் பெலிக்ஸ் 5 பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
    அமெரிக்காவின் முன்னணி ஓட்டப் பந்தய வீராங்கனை அல்லிசன் பெலிக்ஸ். இவர் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 200 மீட்டர், 4X100 தொடர் ஓட்டம் மற்றும் 4X400 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்க பதக்கம் வென்றிருந்தார். 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற 4X400 தொடர் ஒட்டத்தில் தங்க பதக்கம் வென்றிருந்தார்.

    ரியோவில் ஒரு தங்கம் பதக்கம் வென்று தனது எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்த எண்ணிய பெலிக்ஸ், அதற்கேற்றவாறு 400 மீட்டர் ஓட்டத்தில் முதல் நபராக வந்து கொண்டிருந்தார். ஆனால் பஹாமாஸ் வீராங்கனை டைவ் அடித்து தங்கத்தை பறித்துச் சென்றார். பெலிக்ஸ் வெள்ளி பதக்கம் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

    ஆனால். 4X100 மீ தொடர் ஓட்டத்தில் முதல் இடம்பிடித்து தங்க பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் 5 தங்க பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். நாளை 4X400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இதில் தங்கம் வென்றால் 6 பதக்கம் வென்று பெருமை சேர்ப்பார். இதுதவிர 3 வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.
    ரியோ ஒலிம்பிக்கில் 4x400 மீ ஆண்களுக்கான தொடர் ஒட்டத்தின் அரையிறுதி ஒன்றில் 3-வது இடம் பிடித்தும் பிரிட்டன்அணி தகுதி வாய்பை இழந்தது.
    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 4x400 மீ தொடர் ஓட்டத்தின் 2-வது அரையிறுதி நடைபெற்றது. இதில் பிரிட்டன் அணி சார்பில் நிகெல் லெவின், டெலானோ வில்லியம்ஸ், மேத்யூ ஹட்சன்-ஸ்மித் மற்றும் மார்ட்டின் ரூனே பந்தய தூரத்தை 2 நிமிடம் 58.88 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தனர்.

    ஆனால், பிரிட்டன் அணியை தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கம் (IAAF) தகுதி நீக்கம் செய்தது. பிரிட்டன் அணியினர் தங்கள் கையில் உள்ள பேட்டனை குறிப்பிட்ட எல்லைக்குள் பரிமாறிக் கொள்ள தவறியதால் இந்த தகுதி நீக்கம் என்று கூறப்படுகிறது.

    இதை எதிர்த்து பிரிட்டன் அணி மேல்முறையீடு செய்தது. ஆனால், IAAF அதை நிராகரித்து விட்டது. முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதியைச் சேர்த்து ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்தும் பிரிட்டன் அணி ஏமாற்றம் அடைந்துள்ளது.

    பிரிட்டன் அணி வெளியேறியதால் ஒட்டுமொத்தமாக 8-வது இடம் பிடித்த பிரேசில் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இதே பிடிவில் ஓடிய இந்திய அணியும் (மொகமது கஞ்சு, மொகமது அனாஸ், அய்யாசாமி தருண், ராஜீவ் ஆரோக்கியா) தகுதி இழந்தது. 3 நிமிடம் 2.24 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தபோதும், தருண் மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு இடையே பேட்டன் பரிமாற்றத்தில் தவறு நடந்தால் தகுதி நீக்கம் செய்யப்ட்டது.

    ட்ரினிடாட் அண்டு டொபாக்கோ அணியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தமுள்ள 16 அணிகளில் 3 அணிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். மேலும் சவாலான புரோடுனோவா சாகசத்தை நிகழ்த்தும் உலகின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவரது சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அவர் 4-வது இடத்தைப் பிடித்தார்.

    இந்நிலையில் பிரேசிலில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி திரும்பினார். இந்திரா காந்தி விமான நிலையத்தில் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது பேசிய தீபா கர்மாகர், ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாட்டிற்காக பதக்கம் வென்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஏழாவது அல்லது எட்டாவது இடத்தையே பிடிக்க முடியும் என நினைத்தேன். ஆனால் நான்காவது இடத்திற்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை.” என்றார்.

    இதற்கிடையே, தீபா கர்மாகரின் சாதனையை கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள் (22-ம் தேதி) திரிபுரா அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. அகர்தலாவில் உள்ள விவேகானந்தர் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பாராட்டு விழாவில் முதல்வர் மாணிக் சர்க்கார், விளையாட்டுத்துறை அமைச்சர் சாகித் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டு தீபா கர்மாகர் மற்றும் அவரது பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர் நந்தி ஆகியோரை பாராட்டி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் இந்தியாவின் மொத்த கவனத்தையும் சிந்து ஈர்த்து விட்டார்.


    பி.வி.சிந்து விளையாடும் இறுதிப் போட்டியை காண அனைவரும் எதிர் நோக்கி இருந்தனர். ஆனால் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது.

    போட்டி எப்போது ஆரம்பிக்கும் என்று அனைவரும் காத்து இருந்தனர். போட்டி தொடங்கியதும் டி.வி. முன்பு அமர்ந்து சிந்து ஆட்டத்தை பரபரப்புடன் பார்த்தனர். நேற்று இந்தியாவின் மொத்த கவனத்தையும் சிந்து ஒரு ஆளாக ஈர்த்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சிந்து மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல் அவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார்.


    இன்று காலை பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் கென்ய வீராங்கனை விவியன் சருயியூட் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கத்தை கைப்பற்றினார். அவர் 14 நிமிடம் 26.17 வினாடியில் கடந்தார்.

    வெள்ளி பதக்கத்தை கென்யாவின் ஹெலன் ஒனசன்டுவும், வெண்கலத்தை எத்தியோப் பியாவின் அயனா அல்மஸ் வென்றனர்.

    ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவுக்கு டெல்லி அரசு ரூ.2 கோடி பரிசும், தெலுங்கானா அரசு ரூ1 கோடி பரிசு தொகையும் அறிவித்துள்ளது
    வெள்ளி பதக்கம் வென்றதும் பி.வி.சிந்துக்கு நாடு முழுவதும் வாழ்த்து பரிசுகள் குவிந்தன. ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவ், மேற்கு வங்காள முதல்வர் மம்தாபானர்ஜி அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் நடிகர்- நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

    சிந்துவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    சிந்துவுக்கு பரிசுகளும் குவிகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த அவருக்கு தெலுங்கானா மாநில அரசு ரூ.1 கோடி வழங்குகிறது. இந்திய பேட்மிண்டன் சங்கத் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்து உள்ளார்.

    டெல்லி மாநில அரசு இன்று பி.சி.சிந்துக்கு ரூ.2 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில அரசும் ரூ.50 லட்சம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.  இந்திய கால்பந்து சங்கம் பி.வி.சிந்துக்கு ரூ.5 லட்சம் வழங்குகிறது. இதுவரை அவருக்கு 4½ கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது.

    மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்சிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் கடுமையாக போராடி மகளிர் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து தாய்நாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, இந்த சாதனையை படைக்க 3 மாதங்கள்வரை செல்போனை துறந்தும், தனக்கு பிடித்தமான இனிப்பு தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தியாகம் செய்தும், வெற்றிக்காக தவம் கிடந்த தகவல் வெளியாகியுள்ளது.
    ரியோ டி ஜெனீரோ:

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் கடுமையாக போராடி மகளிர் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து தாய்நாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, இந்த சாதனையை படைக்க 3 மாதங்கள்வரை செல்போனை துறந்தும், தனக்கு பிடித்தமான இனிப்பு தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தியாகம் செய்தும், வெற்றிக்காக தவம் கிடந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் வசிக்கும் பி.வி.சிந்துவின் குடும்பம் இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது. இவரது தந்தை பி.வி.ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். கைப்பந்து போட்டிக்கு அளித்த பங்களிப்புக்காக அர்ஜூனா விருது பெற்றவர். தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனைதான்.

    விஜயா, விஜயவாடாவில் பிறந்தாலும் சில ஆண்டுகள் குடும்பத்தினருடன் சென்னை தியாகராயநகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே விஜயா முடித்தார். தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக 1977 ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தேசிய போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.

    இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் திவ்யா டாக்டர். கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டார். 2-வது மகள் தான் பி.வி.சிந்து. சிந்துவின் தாத்தா பிரம்மய்யா தெலுங்குப் பட தயாரிப்பாளர்.

    சிறுவயதில் பயிற்சிக்காக சிந்துவை உள்விளையாட்டு அரங்குக்கு அவரது பெற்றோர் அழைத்து செல்வார்கள். ஆனால் சிந்துவின் மனதில் கைப்பந்து மீது நாட்டம் ஏற்படவில்லை. அதே உள்விளையாட்டு அரங்கில் பக்கத்தில் சிலர் ஜாலியாக ஆடிக்கொண்டிருந்த பேட்மிண்டன் தான் அவரை கவர்ந்தது. அது முதல் பேட்மிண்டன் ராக்கெட்டை எடுத்து சும்மா விளையாடிக் கொண்டிருப்பார்.

    2001-ம் ஆண்டு ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் பட்டத்தை இந்திய வீரர் கோபிசந்த் கைப்பற்றிய போது, வெகுவாக ஈர்க்கப்பட்ட சிந்து, ‘இனி பேட்மிண்டன் தான் வாழ்க்கை’ என்ற முடிவுக்கு வந்தார்.

    ‘நம்மை போன்றே கைப்பந்து நட்சத்திரமாக உருவாக வேண்டும்’ என்று அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தவில்லை. மகளின் விருப்பத்திற்கே விட்டு விட்டனர்.

    சிந்து பேட்மிண்டன் ஆடத் தொடங்கிய போது அவரது வயது 8½. பேட்மிண்டனில் தனி கவனம் செலுத்த கோபிசந்தின் பயிற்சி அகாடமியில் சேர்த்து விட்டனர். அப்போது செகந்திரபாத்தில் வசித்ததால் பயிற்சி மையத்திற்கு வருவதற்கு தினமும் 56 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருந்தது. சிந்துவின் அலைச்சலைப் பார்த்து பரிதாபப்பட்ட அவரது பெற்றோர் பயிற்சி மையம் அமைந்துள்ள பகுதிக்கு தங்கள் வீட்டை மாற்றி கொண்டனர்.

    கோபிசந்தின் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட சிந்து, படிப்படியாக பேட்மிண்டன் விளையாட்டுசார்ந்த தொழில்நுட்பங்களை கற்றார். பள்ளி, ஜூனியர் அளவிலான போட்டிகளில் பங்கெடுத்தார்.

    சிந்துவின் முன்மாதிரி, பிடித்த பேட்மிண்டன் வீரர் எல்லாமே கோபிசந்த்தான். அவரது வார்த்தெடுப்பில் கச்சிதமான ஒரு பேட்மிண்டன் மங்கையாக 2011-ம் ஆண்டில் வெளி உலகுக்கு அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு ஆசிய ஜூனியர் போட்டியில் வெண்கலமும், காமன்வெல்த் இளையோர் போட்டியில் தங்கமும் வென்றார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கத்தை பெற்றார்.

    எனினும், 2013-ம் ஆண்டு சீனாவில் நடந்த உலக பேட்மிண்டனில் வெண்கலத்தை வென்ற போதுதான் விளையாட்டு ஆர்வலர்கள், ரசிகர்களின் பார்வை ஒட்டுமொத்தமாக சிந்துவின் பக்கம் திரும்பியது. உலக பேட்மிண்டனில் முத்திரை பதித்த முதல் இந்திய வீராங்கனையாக மின்னினார்.

    2014-ம் ஆண்டு மீண்டும் உலக பேட்மிண்டனில் வாகை சூடி, இந்த போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற மகத்தான சாதனையை மேலும் அழுத்தமாக பதிய வைத்தார். இந்தோனேஷிய போட்டி, மலேசிய மாஸ்டர்ஸ், மக்காவ் ஓபன் ஆகிய சர்வதேச தொடர்களிலும் பட்டம் வென்று அசத்தினார்.

    இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இப்போது ரியோ ஒலிம்பிக் பதக்கம் அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று புகழின் உச்சத்துக்கே சென்று விட்ட சிந்து, தனது குருநாதர் கோபிசந்தின் கனவையும் நனவாக்கி இருக்கிறார்.

    தன் உடலை உறுதியாக வைத்துக்கொள்வதற்காக இனிப்புகளையும், சாக்லெட்டுகளையும் சிந்து தொடுவதே இல்லை. காபி குடிக்கும் பழக்கமும் கிடையாது. ஐதராபாத் பிரியாணி, சர்க்கரை கலந்த தயிர், ஐஸ் கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம்.

    ஆனால், தனக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை கலந்த தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றை எல்லாம் தீவிர பயிற்சிக்காக தியாகம் செய்ததுடன், சுமார் மூன்று மாத காலம் தனது கைபேசியை கூட பயன்படுத்தாமல் ஒலிம்பிக் பதக்கத்துக்காக அவர் வாழ்ந்த ‘தவ வாழ்வு’ பற்றி அவரது பயிற்சியாளரான கோபிசந்த் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ரியோ டி ஜெனீரோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோபிசந்த கூறியதாவது:-


    ஒலிம்பிக் இறுதி சுற்றுக்கு தேர்வுபெற்று பதக்கம் அளிக்கும் மேடையில் நிற்கும் வாய்ப்பு நூறு கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பாகும். எங்கள்மீது நம்பிக்கை வைத்து, வெற்றிப் பயணத்தை நோக்கி எங்களை வழிநடத்திச் செல்ல ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி.

    தற்போது, எண்ணிய காரியத்தை முடித்து விட்டதால் சிந்து இனி 21 வயது இளம்பெண்ணுக்குண்டான வழக்கமான செயல்களை தொடரலாம். தனது தோழிகளுடன் வாட்ஸ்அப்பில் உரையாடலாம், பிடித்தமான ஐஸ் கிரீமை அவர் சாப்பிடலாம்.

    கடந்த மூன்று மாதங்களாக சிந்து தனது செல்போனை பயன்படுத்தவே இல்லை. முதல்வேலையாக அவரது செல்போனை சிந்துவிடம் திருப்பி அளிக்கப் போகிறேன். இரண்டாவதாக இங்குவந்து 12-13 நாட்களாக அவருக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை கலந்த இனிப்பு தயிர் சாப்பிடுவதையும் நான் தடுத்து வைத்திருந்தேன், அதேபோல் ஐஸ் கிரீம் சாப்பிடவும் தடை விதித்திருந்தேன். இனி, அவர் விரும்பியவற்றை எல்லாம் சாப்பிடலாம்.

    கடந்த இரண்டு மாதங்களாக சிந்து செய்துவந்த பயிற்சிகள் அபாரமானவை. குறிப்பாக, கடந்தவாரம் அவரது ஆட்டத்தில் அதிகமான உத்வேகம் வெளிப்பட்டது. மிகவும் அனுபவித்தும், தனது பொறுப்பை உணர்ந்தும் தன்னிடம் உள்ள திறமையை எல்லாம் அவர் வெளிப்படுத்தினார். சிந்துவிடம் இதைதான் நான் எதிர்பார்த்தேன். அந்த வகையில் ஒரு பயிற்சியாளராக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    சிந்து மிகவும் இளம்பெண்ணாக உள்ளார். இந்த போட்டியின்போது அவரிடம் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மென்மேலும் வளரக்கூடிய ஆற்றலும் அவரிடம் உள்ளது. நாட்டுக்கு பதக்கம் வாங்கி தந்ததன் மூலம் நம்மை எல்லாம் அவர் பெருமைப்படுத்தியுள்ளார்,

    இழந்த தங்கப் பதக்கத்தை பற்றி நினைக்காமல், வென்ற வெள்ளிப் பதக்கத்தை நினைத்து பெருமைப்படும்படியும், இந்த இரண்டாவது இடத்தை பிடிக்க கடந்தவாரம் செய்த கடுமையான பயிற்சியை எண்ணிப் பார்க்கும்படியும் சிந்துவிடம் நான் குறிப்பிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தங்க பதக்கத்தை வெல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களில் சிந்து இடம் பிடித்து விட்டார் என சிந்துவின் தந்தை கூறியுள்ளார்
    சிந்துவின் தந்தை பி.வி.ரமணா. முன்னாள் கைப்பந்து சர்வதேச வீரர். தாய் விஜயாவும் கைப்பந்து வீராங்கனைதான். ரமணா தென் மத்திய ரெயில்வேலில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ரமணா கூறியதாவது:-

    சிந்து வெள்ளி வென்றதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறந்த வீராங்கனைக்கு எதிராக விளையாடினார். அவருக்கு கடும் சவால் கொடுத்தார். தங்க பதக்கத்தை வெல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களில் சிந்து இடம் பிடித்து விட்டார்.

    இறுதி ஆட்டத்தில் சிந்து செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்கம் வெல்வார். தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே சிந்து பதக்கம் வென்றதே பெருமை அளிக்கிறது. தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய கரோலின் மரின் அதற்கு தகுதியானவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    4ஜ்400 மீட்டர் ஓட்டம் தகுதி சுற்றில் இந்திய அணிகள் தோல்வி
    பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்ட தகுதி சுற்று இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. இதில் பூவம்மா ராஜு, அனில்டா தாமஸ், டின்டூ லுக்கா, நிர்மலா ஆகியோரை கொண்ட இந்திய அணி பங்கேற்றது.

    8 அணிகள் பங்கேற்றதில் இந்திய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.53 வினாடியில் கடந்து 7-வது இடத்தையே பிடித்தது. ஒட்டு மொத்தமாக 13-வது இடத்தை பிடித்தது. இதனால் இறுதிப் போட்டி வாயப்பை இழந்தது.

    ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட தகுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணியும் ஏமாற்றம் அளித்தது.

    ஆரோக்ய ராஜுவ், தருண் அய்யாசாமி, குன்ஷு முகமது, முகமத் அனுயஸ் ஆகியோரை கொண்ட இந்திய அணி ஓட்டத்தின் போது தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
    பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்றபோது துப்பாக்கி முனையில் தங்களிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய அமெரிக்க வீரருக்கு 11 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ரியோ டி ஜெனீரோ:

    ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் கழிப்பறையை உடைத்து, சூறையாடியுள்ளனர்.

    இதனால் ஏற்பட்ட சேதாரத்துக்கும் பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்படி பெட்ரோல் பங்க் பாதுகாவலர்கள் வற்புறுத்தவே இழப்பீடாக பணத்தை கட்டிவிட்டு, அங்கிருந்து விடுபட்டுவந்த அந்த நீச்சல் வீரர்கள், தங்களை சிலர் துப்பாக்கி முனையில் வழிமறித்து, பணத்தை கொள்ளையடித்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, ரியோ டி ஜெனீரோ போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விபரங்கள் யாவும் தெரியவந்தது. போலியான புகார் தெரிவித்து, தங்கள் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள்மீது பிரேசில் நாட்டு போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்கிடையில், அமெரிக்காவுக்கு செல்வதற்காக விமானம் ஏறப்போன அவர்களை பிரேசில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, பாஸ்போர்ட்களை முடக்கி வைத்திருப்பதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.

    இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்றுபேர் ஏற்கனவே அமெரிக்கா திரும்பி விட்டனர். தங்கள் நாட்டு நீச்சல் வீரர்களின் செயலுக்காக பிரேசில் நாட்டு மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி நேற்று வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது.

    இந்நிலையில், போலீசில் பொய் புகார் அளித்த அமெரிக்காவின் பிரபல நீச்சல் வீரரும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜிம்மி பெய்கென் என்பவருக்கு 35 ஆயிரம் ரியஸ் (அமெரிக்க மதிப்புக்கு சுமார் 10,927 டாலர்கள்) அபராதம் விதித்து ரியோ டி ஜெனீரோ நகர நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    மேற்படி அபராத தொகையை அந்நாட்டின் விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளைக்கு செலுத்தியபின், அவரது பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்கும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையில், பிரேசிலில் கொள்ளை நாடகமாடிய தங்கள் நாட்டு நீச்சல் வீரர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்க நீச்சல் வீரர்கள் நான்கு பேரின்மீதும் ஒழுங்குமுறை குழு சார்பில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையும் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆக்கி இறுதி ஆட்டத்தில் முதல் முறையாக அர்ஜென்டினா அணி தங்கம் வென்று மகுடம் சூட்டியுள்ளது.
    ரியோ டி ஜெனீரோ:

    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆக்கி இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவும், பெல்ஜியமும் மோதின.

    3-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் கோல் அடித்தது. சிறிது நேரத்தில் பதிலடி கொடுத்த அர்ஜென்டினா அடுத்தடுத்து மேலும் கோல்களை திணித்தது. முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை சாய்த்து தங்கப்பதக்கத்தை சுவைத்தது.

    ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கியில் அர்ஜென்டினா மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தியது.
    ×