என் மலர்
புதுச்சேரி
பாகூர் அருகே பதட்டம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பாகூர் அருகே கரையாம்புத்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் குணால் (வயது 18). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
குணால் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று மது குடித்துவிட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது திரவுபதி அம்மன் கோவில் வழியாக வந்து கொண்டிருந்த போது அங்கு நின்றிருந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த ரவிச்சந்திரன், தினகரன், உதயா, எத்திராஜ், பூபதி ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், குணாலிடம் ஏன் ஏன் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வருகிறாய்? என்று கேட்டு தடியாலும், கல்லாலும் தாக்கியுள்ளனர். மேலும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
குணாலை தாக்கியது தெரியவந்ததும் கரையம் புத்தூர் காலனியை சேர்ந்த 100 பேர் திரவுபதியம்மன் கோவில் அருகே திரண்டனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் பாகூர்-கிருமாம்பாக்கம் மற்றும் கரையாம் புத்தூர் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இரவு சுமார் 50 பேர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு குணாலை தாக்கியவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதட்டமானது.
இது சம்பந்தமாக கரையம்புத்தூர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த மோதல் காரணமாக கரையாம்புத்தூர் பகுதியில் 2-வது நாளாக இன்றும் பதட்டம் நிலவுகிறது. அங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இரு தரப்பினரிட மும் போலீசார் சமாதானம் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் அவல நிலை ஏற்படுள்ளது-.
புதுச்சேரி:
பாகூரில் அரசு ஆரம்ப நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், சேலியமேடு, பரிக்கல்பட்டு என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஆனால் பாகூரில் உள்ள ஆம்புலன்ஸ் அடிக்கடி பழுதாகி விடுவதால் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
கரிக்கலாம் பாக்கம், தவளகுப்பம் மருத்துவ மனையில் இருந்து 108 ஆம்புலன்சை அழைத்து பாகூர் அல்லது கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ளவர்களை புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 14-ந் தேதி காலையில் கடலூர்-புதுவை சாலை காட்டுக்குப்பம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற பாகூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியை புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி 3 பேரும் படுகாயம் அடைந்து கிடந்தனர்.
அங்கு இருந்த சமூக ஆர்வலர்கள் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பாகூரில் ஆம்புலன்ஸ் இல்லாததால் அரியாங்குப்பத்தில் இருந்து வர வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் ஆம்புலன்ஸ் வராததால் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நீண்ட நேரம் படுகாயம்பட்டவர்கள் கிடந்ததால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கொதிப் படைந்தனர். விரைவில் பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட வேண்டும் என அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிராம விளையாட்டு திடல்களை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி :
செட்டிப்பட்டு நம்மவர் கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
போட்டியில் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கைப்பந்து அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
இறுதிப்போட்டியில் செட்டிபட்டு நம்மவர் கைப்பந்து அணியும், கடலூர் பிரதர்ஸ் அணியும் மோதின. இதில் வெற்றி பெற்ற செட்டிப்பட்டு நம்மவர் கைப்பந்து அணிக்கு முதல் பரிசு, கடலூர் பிரதர்ஸ் அணிக்கு 2-ம் பரிசு ஆகியவற்றை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டுத்திடல்களை மேம்படுத்த அரசின் மூலம் ரூ.1கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து கிராமங்களில் உள்ள விளையாட்டு திடல் கள் சீரமைத்து தரப்படும். விளையாட்டுகள் மூலம் வாழ்க்கையை மேம் படுத்திக்கொள்ள முடியும்.
இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.
முன்னாள் ராணுவ வீரர் லீக் சார்பில் கருத்து பரிமாற்றம்-கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை மிகவும் எளிமையான முறையில் அளித்திட ஸ்பர்ஸ் என்ற என்ற எளிய முறையினை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனைப்பற்றிய கருத்து பரிமாற்றம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுவை முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சார்பில் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் செயலாளர் லெப்டிணன்ட் சுகுமார், ஸ்பர்ஸ் பற்றி விளக்க உரை ஆற்றினார். கூட்டத்திற்கு லீக்கின் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சிவராமன், பொதுச் செயலாளர் செல்வமணி, செயலாளர் தௌமினிக் மற்றும் பொருளாளர் ராமமூர்த்தி உள்பட 150 முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
நிர்வாக சீர்கேடுகளை களைந்து பி.ஆர்.டி.சியை லாபகரமாக இயக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை சாலை போக்குவரத்து கழகமான (பி.ஆர்.டி.சி.) நிறுவனத்தில் 100 பஸ்களை இயக்கும் அளவிற்கு நடத்துனர், ஓட்டுனர், தொழில்நுட்ப ஊழியர்கள் 800 பேர் வரை உள்ளனர்.
ஆனால் சுமார் 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பல்வேறு ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வந்த பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பி.ஆர்.டி.சி.க்கு வரவேண்டிய வருவாய் குறைந்துள்ளது.
இதன் காரணமாக ஊழியர்களுக்கு மாதந்தோறும் தரப்பட வேண்டிய ஊதியம், போனஸ் உள்ளிட்டவை சரியாக தரப்படாமல் உள்ளது.
பல்வேறு நிர்வாக சீர்கேடுகளால் தொடர்ந்து பி.ஆர்.டி.சி. நிறுவனம் சீரழிந்து வருகிறது.இதற் கிடையில் கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் பி.ஆர்.டி.சிக்கு புதியதாக 200 பஸ்கள் வாங்கப்படும் என அறிவித்தார். ஆனால் விரைவில் மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் இதுவரை புதியதாக ஒரு பஸ் கூட வாங்கப்படவில்லை.
பி.ஆர்.டி.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும், அமைச்சர் அறிவித்தபடி புதியதாக 200 பஸ்களை வாங்கி அனைத்து பகுதிகளிலும் இயக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக பி.ஆர்.டி.சி. நிறுவனத்தில் உள்ள அனைத்து நிர்வாக சீர்கேடுகளையும் களைந்து, நிறுவனத்தை சிறப்பான முறையில், லாபகரமாக நடத்துவதற்கும் தொழிலாளர்களுக்கு தடையின்றி சம்பளம், போனஸ் வழங்கவும், புதுவை மக்களுக்கு சிறப்பான பஸ் வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.
மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க. செயற்குழு கூட்டம் கவுண்டம் பாளையம் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதுவை அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை ஒழித்திட போலீசார் இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும்.
நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அதிக அளவில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும். பல்வேறு அரசுத்துறைகளில் ஊழியர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை பொதுப்பணித்துறை மூலம் சீரமைக்க வேண்டும்,
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து அல்லது சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொரோனா பரவல் குறைந்ததால் புதுவை கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு மக்கள் குவிந்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் தற்போது மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகளால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர்.கடற்கரை சாலை, பூங்காக்கள் மூடப்பட்டதால் தினசரி நடைபயிற்சியாளர்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டனர்.
திறந்த வெளியில் தூய்மையான காற்றை சுவாசித்தபடி நடப்பதில் உள்ள திருப்தி இல்லை என்றாலும் நோய் ஆபத்து கருதி முடங்கி இருந்தனர். தற்போது புதுவையில் கொரோனா தொற்று குறைந்து பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகி விட்டது.
இதனால் பொதுமக்கள் பயமின்றி கடற்கரை சாலையில் அதிக அளவில் நடை பயிற்சிக்கு குவிந்தனர். 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புதுவை கடற்கரை சாலையில் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்தபடியே நடைபயிற்சி மேற்கொள்ள வார இறுதி நாளான இன்று வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்தனர்.
இதனால் புதுவை கடற்கரை சாலையில் அதிகாலை யிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதே போல் சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகையால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டம் அதிகமாகியுள்ளது. சுற்றுலா நகரமான புதுவை மீண்டும் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
புதுவை மாஸ்டர்ஸ் பேட் மிண்டன் சங்கம் சார்பில் மாநில அளவிலான பேட் மிண்டன் போட்டி நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மாஸ்டர்ஸ் பேட் மிண்டன் சங்கம் சார்பில் மாநில அளவிலான பேட் மிண்டன் போட்டி கோரிமேடு கலைவாணர் நகரில் உள்ள ஜோஸ் பேட் மிண்டன் அகாடமியில் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா நடந்தது.
விழாவில் ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே, இந்திய விளை யாட்டு ஆணைய புதுவை முன்னாள் பொறுப்பாளர் முத்துகேசவலு ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதில் புதுவை மாஸ்டர்ஸ் பேட் மிண்டன் சங்க தலைவர் தாமஸ், செயலாளர் ஹென்றி தாமஸ், பொருளாளர் உமா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் 48 விளையாட்டு கிளப்புகளை சேர்ந்த 232 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர் களில் 40 பேர் பெண்கள் ஆவர். போட்டிகள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என தனித்தனி பிரிவுகளாக நடந்து வருகிறது.
நேற்று 164 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு 124 போட்டிகள் நடத்தப் பட்டன. கால் இறுதி போட்டிகளில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஸ்டாலின், பிஜூ ஆகியோரும், அன்பழகன், பாரதிதாசன் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.
55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் போலீஸ் ஐ.ஜி. சந்திரன், ராஜ்குமார் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட் டோருக்கான தனிநபர் பிரிவில் ஜிப்மர் மருத்துவ மனையின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே தேர்வாகி யுள்ளார்.
65 வயதுக்கு மேற்பட் டோருக்கான போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் டாக்டர் ஜம்பு லிங்கம், நடராஜன் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. இன்று மாலை இறுதி போட்டிகள் நடக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், போலீஸ் ஐ.ஜி. சந்திரன், டாக்டர் ஜம்பு லிங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்குகிறார்கள்.
புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரி:
விப்ரோ எர்த்தியன் நிறுவனம் சார்பில் செயல் வழி கற்றல் நிகழ்ச்சியாக பல்லுயிர் மற்றும் நிலைத் தன்மை என்ற தலைப்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய படைப்புகள் வெளியிடப்பட்டன.
இதில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமி (சி.பி.எஸ்.இ.) பள்ளி 7-ம் வகுப்பு மாணவிகள் லூர்து அருமை பர்னிஸ், சங்கீதா, 8-ம் வகுப்பு மாணவி லத்திகா, 9-ம் வகுப்பு மாணவர்கள் அஷிபா, பூவராகவன், பல்லுயிர் மற்றும் நிலைத்தன்மை என்ற தலைப்பில் ஆய்வுகளை சமர்பித்தனர்.
மேலும் இவர்கள் கோவில் காடுகள் பற்றிய தகவல்கள் மற்றும் இன்றைய சூழ்நிலையில் அதன் முக்கியத்துவம் பற்றி செய்திகளை தொகுத்து சமர்பித்தனர். ஆய்வின் அடிப்படையில் சிறந்த படைப்புகளுக்காக புதுவை மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 5 படைப்புகளில் ஒன் றாக அமலோற்பவம் லூர்து அகாடமி தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியரை பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் லூர்துசாமி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.-
நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவோம் என ஒம்சக்தி சேகர் பேசினார்.
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா ஒரு மாத காலம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நெல்லித் தோப்பு தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சாரம் பாலம் அருகில் கொண்டாடப்பட்டது.
நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கொடி ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இது போல் சக்திநகர் வார்டு அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கொடி ஏற்றி பொது மக்க ளுக்கு இனிப்பு வழங்கி 200 மகளிருக்கு புடவை மற்றும் நல திட்ட உதவிகளை ஓம்சக்தி சேகர் வழங்கினார்.
மேலும் குயவர்நகர் வார்டு சார்பில் கருணாகரபிள்ளை தெருவில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் ஓம்சக்தி சேகர் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் பேசியதாவது:-
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. அதே போல நான் நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசிடம் போராடி பெற்று கொடுத்துள்ளேன்.
அதேபோல் எனது சொந்த செலவிலும் பல நல திட்ட உதவிகளை செய்துள்ளேன்.
மீண்டும் நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறும் என்பதை உறுதியாக கூறுகிறேன். அ.தி.மு.க. வெற்றி நடைபோடும்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் பேசினார்.
கைவினை பொருட்கள் கண்காட்சியை செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார்
புதுச்சேரி:
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுவையில் மாநில அளவிலான கைவினைப் பொருள் கண்காட்சி நடைப்பெற்றது.
கண்காட்சியை செல்வ கணபதி எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புதுவை வேளாண்மை அறிவியல் நிறுவனத்தின் தலைவர் கணேஷ், கிராம புற பெண்கள் முன்னேற்றம் பற்றி சிறப்புரையாற்றினார். கண்காட்சியில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்ற பெண் தொழில் முனைவோர் தாங்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தினர்.
கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பயன் அடைந்தனர். கண்காட்சிக் கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செய்து இருந்தனர்.
வேலை வாய்ப்பு முகாம்களில் 65 தனியார் நிறுவனங்களுக்கு 292 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பணி ஆணையை ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி:
புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் மூலகுலம் தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில் 65 தனியார் நிறுவனங்கள் 5 ஆயிரத்து 712 காலி இடங்களை நிரப்புவதற்காக கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 700 மாணவர்கள் கலந்து கொண்டனர்.பல்வேறு தனியார் முன் னணி நிறுவனங்கள் கலந்து கொண்ட முகாமில் 292 இளைஞர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டர்.
தேர்வு செய்யப் பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது இல்லத்தில் வழங்கினார். அமைச்சர் சந்திரபிரியங்கா, தொழிலாளர் துறை துணை ஆணையர் மோகன்குமார், வேலைவாய்ப்பு அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






