என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பி.ஆர்.டி.சியை லாபகரமாக இயக்க வேண்டும்-தி.மு.க. வலியுறுத்தல்

    நிர்வாக சீர்கேடுகளை களைந்து பி.ஆர்.டி.சியை லாபகரமாக இயக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சாலை போக்குவரத்து கழகமான (பி.ஆர்.டி.சி.) நிறுவனத்தில் 100 பஸ்களை இயக்கும் அளவிற்கு நடத்துனர், ஓட்டுனர், தொழில்நுட்ப ஊழியர்கள் 800 பேர் வரை உள்ளனர்.  

    ஆனால் சுமார் 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.  பல்வேறு ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வந்த பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பி.ஆர்.டி.சி.க்கு வரவேண்டிய வருவாய் குறைந்துள்ளது. 

    இதன் காரணமாக ஊழியர்களுக்கு மாதந்தோறும் தரப்பட வேண்டிய ஊதியம், போனஸ் உள்ளிட்டவை சரியாக தரப்படாமல் உள்ளது. 

    பல்வேறு நிர்வாக சீர்கேடுகளால் தொடர்ந்து பி.ஆர்.டி.சி. நிறுவனம் சீரழிந்து வருகிறது.இதற் கிடையில் கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் பி.ஆர்.டி.சிக்கு புதியதாக 200 பஸ்கள் வாங்கப்படும் என அறிவித்தார். ஆனால் விரைவில் மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் இதுவரை புதியதாக ஒரு பஸ் கூட வாங்கப்படவில்லை.

     பி.ஆர்.டி.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும், அமைச்சர் அறிவித்தபடி புதியதாக 200 பஸ்களை வாங்கி அனைத்து பகுதிகளிலும் இயக்க வேண்டும். 

    ஒட்டுமொத்தமாக பி.ஆர்.டி.சி. நிறுவனத்தில் உள்ள அனைத்து நிர்வாக சீர்கேடுகளையும் களைந்து, நிறுவனத்தை சிறப்பான முறையில், லாபகரமாக நடத்துவதற்கும் தொழிலாளர்களுக்கு தடையின்றி சம்பளம், போனஸ் வழங்கவும், புதுவை மக்களுக்கு சிறப்பான பஸ் வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×