என் மலர்
புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் தலைவர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் செல்வமணி, ராமமூர்த்தி மற்றும் தோமினிக் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்தனர்.
அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் கோரிக்கையை ஏற்று 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றியினை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 16-ந் தேதி அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டமைக்காக அவர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
புதுவை பல்கலைகழகத்தில் பட்டியலின-பழங்குடியினர் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதுச்சேரி
புதுவை பல்கலைகழக பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் பல்கலைக்கழக 2-ம் நுழைவு வாயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவி வரவேற்றார். நிர்வாகிகள் கணேசன், நாகமுத்து, ராமு, சாந்தசீலன், ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர் நலச்சங்கத் தலைவர் கலிய பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கடலூர் பாவாணன் கண்டன உரையாற்றினார்.
பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வு குழு கூட்டத்தை கூட்டி அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சி.ஏ.எஸ். உடனே நடத்தப்பட வேண்டும். தொலைதூர கல்வி இயக்ககத்தின் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு எம்.ஐ.டி. எஞ்சினீயரிங் கல்லூரியில் தனியார் நிறுவனம் மூலம் என்ஞினீயரிங் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது இந்த முகாமுக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் துணைத்தலைவர் சுகுமாரன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த முகாமில் அனைத்து துறைகளை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணியாணை வழங்கபட்டது.
பணியாணை பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மலர் கண் பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு அதிகாரி டாக்டர் ஜெயக்குமார், மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஒருங்கினைப்பாளர்கள் செய்திருந்தனர்.
நிறுவனங்கள்-கடைகளில் தமிழில் பெயர் பலகை வையுங்கள் என கவர்னர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தித்துறை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சட்டசபை அருகே உள்ள பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைதொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புரட்சி கவிஞர் பாரதிதாசன் நமக்கு புதுவைக்கு தமிழ்தாய் வாழ்த்தை வழங்கியவர். அவர் தமிழக வீதிகளில் தமிழ் இல்லை என்று கூறியிருந்தார்.
இதனால் நான் வேண்டு கோளாக வைக்கிறேன். புதுவையில் நிறுவனங்கள்-கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். இதை அரசு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நாமாகவே முன்வந்து தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும்.
முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக குறிப்பாணை வெளியிடப்படும். குழுந்தைகளுக்கு தமிழில் பெயரை சூட்டுங்கள். புரியாத மொழிகளில் பெயர்களை சூட்டுவதை விட தமிழில் பெயர்சூட்டி அழை
யுங்கள். பாரதிதாசனின் நினைவு நாள், பிறந்தநாளை அரசு சார்பில் கொண்டாடுகிறோம். மேலும் அவருக்கு விழாக்களை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். தமிழ் அறிஞர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
தமிழை பாராட்டுவோம் சீராட்டுவோம். புதுவை யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரப்படுகிறது. தமிழ் தாய் வாழ்த்து இல்லாமல் எந்த அரசு நிகழ்ச்சியும் தொடங்கப்படுவது இல்லை.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
பின்னர் பெருமாள்கோவில் வீதியில் உள்ள பாரதிதாசன் நினைவு
இல்லத்துக்கு கவர்னர் தமிழிசை சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை ஆரோவில்லில் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
புதுவை:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் பன்னாட்டு நகரம் அமைக்க அனுமதி பெறுவது குறித்த விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
அதில், மரங்களை வெட்டாமல், நீர்நிலைகளை பாதிக்காமல் சாலை அமைக்க முடியுமா என கூட்டுக்குழு ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது.
ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் கட்டப்படும் அனைத்துக் கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ன் கீழ் அனுமதி பெறுவது அவசியம் என தீர்ப்பளித்தது.
இதையும் படியுங்கள்...31 பைசா கடன் பாக்கி - விவசாயியை துன்புறுத்திய வங்கி
உருளையன்பேட்டை தொகுதி நேரு எம்.எல்.ஏ. திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி:
புதுவை கண்டாக்டர் தோட்டம் அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடம் அருகில் அரசு பள்ளி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்பகுதி குடியிருப்பு மக்களும், மாணவர்களும் வந்து செல்ல 10 அடி பாதை மட்டுமே இருந்தது. இதுகுறித்து பள்ளி சார்பில் கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குடிசை மாற்று வாரியம் மூலம் கல்வித்துறைக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்து ஆட்சி மாற்றம் வந்ததால் அந்த இடம் பள்ளிக்கு கொடுக்கப்படவில்லை.அந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கட்டிடத்திற்கு எந்த உரிமமும் பெறவில்லை. அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில் 2022-ல் நகர அமைப்பு குழுமம் கட்டிடம் கட்ட அனுமதி மறுத்தது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக அந்த கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் தொகுதி நேரு எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நகர அமைப்பு குழும அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நேரு எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதன் பிறகு நேரு எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விரக்தியில் மாற்று கட்சியினரை தரம் தாழ்ந்து நாராயணசாமி விமர்சிக்கிறார் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தின் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி விரக்தியின் விளிம்பில் மாற்றுக் கட்சியினரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். 5 ஆண்டுகாலம் முதல்-அமைச்சராக இருந்தவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதால் உண்மையான காங்கிரசை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட வெற்றி பெற இயலவில்லை என்பதை மறந்து பேசுகிறார்.
அதேபோன்று தற்போது காங்கிரஸ் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ.கக்களும் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. ஒவ்வொரு தேர்தலின் போதும் பல்வேறு கட்சிகளில் உள்ள பிரபல மான மனிதர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டி யிட வாய்ப்பு அளித்து அதன்மூலம் வெற்றி யடைந்து தான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமாகும்.
அதையே மாற்று கட்சியினர் செய்யும் போது பொறுத்து கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அநாகரிகமான செயல் ஆகும். 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமியை சி.பி.ஐ. எதை சொல்லி மிரட்டியதால் அவர் போட்டியிடவில்லை என்பதை பகிரங்கமாக பொய் சொல்லாமல் தெரி விப்பாரா? அதே நேரத்தில் வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் எனக்கூறும் நாராயணசாமி ஏன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
சின்னஞ்சிறு யூனியன் பிரதேசமான புதுவை மாநில முதல்-அமைச்சர் மத்திய அரசுடன் இணக்கமாகவும் கவர்னர் ஒத்துழைப்புடன் இருப்பதால்தான் இன்றைக்கு புதுவை மாநிலத்தில் உள்கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோன்று சட்ட மன்றத்தின் அறிவிப்பு கள் மக்களின் நலன் சார்ந்தஅத்தனை திட்டங்களும் உடனுக்குடன் செயல்படுத்தி உள்ளோம் என்று எங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதற்குப் பிறகும் மத்திய அரசையும் கவர்னரையும் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துக்காக தவறான குற்றச்சாட்டுகளை நாராயணசாமி தொடர்ந்து தனது பொய் அறிக்கையை வெளியிட்டு வருவது கண்டனத்துக்கு உரியது ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுவையில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது. கடந்த ஒரு மாதமாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்ப டியாக உயர்ந்து வருகிறது. புதுவையில் 263 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் என புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 7, காரை க்காலில் 2, ஏனா மில் ஒருவர் என 10 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். ஏனாமில் ஒருவர் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுவையில் ஒட்டுமொத்தமாக 11 பேர் தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 16 லட்சத்து 81 ஆயிரத்து 629 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முககவசம் அணியவும் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுவைக்கு மாநில அந்தஸ்து-நிதியை கவர்னர் தமிழிசை பெற்றுத்தர வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையின் வளர்ச்சி பற்றி கவர்னரின் சமீபத்திய கருத்துக்கள் மிகைப்ப டுத்தப்பட்டவையாகவும், ஆதாரமற்றவையாகவும் உள்ளன. கவர்னர், புதுவை வளர்ச்சி பெறப்போகிறது என ஆர்வத்தோடு கூறுகிறார். ஆனால் முதல்-அமைச்சர் மாநில அந்தஸ்து தராததால், புதுவை வளர்ச்சியடையவில்லை என கூறுகிறார்.
இதில் எது உண்மை? என கவர்னர் தெளிவுபடுத்த வேண்டும். புதுவையில் கடந்த 2 ஆண்டாக வளர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புதிய தொழிற்சாலைகள் தொடங்கவில்லை. தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றை புனரமைக்க திட்டங்கள் எதுவும் இல்லை.
இதனால் மக்கள் வேலை வாய்ப்பையும், வருமான வாய்ப்பையும் இழந்து வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் வீணான விழாக்களைப் பற்றியும், ஆடம்பர கார்கள் வாங்கி யுள்ளது பற்றியும் கவர்னர் தன்னிலை விளக்கம் தர வேண்டும்.
மத்திய அரசின் நிதி ஆயோக் ஒரு மாநிலத்தில் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான 13 குறிக்கோள்களை அறிவித்து உள்ளது. அதில் ஏதாவது ஒரு குறிக்கோளை புதுவை அரசு இதுவரை அடைந்துள்ளதா? 11 ஆண்டுகளாக முழு நிதி நிலை அறிக்கையை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை. கவர்னர் எத்தனை புதிய திட்டங்களையும்அதற்கான நிதியையும் புதுவைக்கு பெற்றுத்தந்தார்? திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு 5,10 ஆண்டுகளாகியும் முடிவடை யாத ஒரு விசித்திரமான சூழ்நிலை புதுவையில் மட்டுமே உள்ளறது. வளர்ச்சி என்பது மந்திரத்தால் உருவாவது இல்லை.
தொலைநோக்கு பார்வை, நேர்மையான சிந்தனை, புதுவை பொருளாதாரம் பற்றி நுணுக்கமான புரிதல், துறைகளுக்கு இடையேயான தொடர்புகள், சரியான திட்டங்கள், போதிய நிதி, உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்பு ஆகியவை அவசியம். இவற்றை உருவாக்குவதில் கவர்னர் முனைப்பு காட்டவேண்டும்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து, நியாயமான உரிய நிதி உதவியையும் மத்திய அரசிடமிருந்து கவர்னர் பெற்றுத்தர வேண்டும். இதன் மூலமே புதுவையின் சரித்திரத்தில் கவர்னர் நிரந்தர இடத்தை பெறுவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
மங்கலம்- நெட்டப்பாக்கம் தொகுதியில் ரூ.6 கோடியில் தார்சாலை பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள சாலைகள் மழையால் சேதமடைந்தது.
சாலைகளை மேம்படுத்த மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு அனுமதி பெற்றது. மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பங்கூர் முதல் சிவராந்தகம் வரை 2 கி.மீட்டர் தூரம் ரூ.108.16 லட்சம் செலவிலும், சேந்தநத்தம் முதல் வில்லியனூர் வரை 3.440 கி.மீ. தூரம் ரூ.227.26 லட்சத்திலும், சூரமங்கலம் சந்திப்பு முதல் தொண்டி ரெட்டிபாளையம் சந்திப்பு வரை 3.250 கி.மீ. தூரம் ரூ.229.02 லட்சத்திலும், படகுசெட்டி வாய்க்கால் முதல் ஏம்பலம் சாலை உறுவையாறு வரை 2 கி.மீட்டர்தூரம் ரூ.9,126 லட்சத்திலும் மதிப்பீடு செய்யப்பட்டது.
இதன் மொத்த மதிப்பீடு ரூ.6 கோடியே 45 லட்சம் ஆகும். இதற்கான பூமி பூஜை விழா மங்கலம் தொகுதி பங்கூர் கிராமத்தில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், குடிமைப்பொருள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயலர் ரவிபிரகாஷ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் மணவாளன் மற்றும் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
புதுவையில் திருக்குறள்-கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி:
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் பிறந்தநாளை முன்னிட்டு முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.
அதன் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக உலக கவிஞர்கள் சங்கம் நிறுவனர் புதுவை குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக புதுவை மாநில ஒருங்கி ணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர் ஜெனிபர் சிறப்பாக செய்திருந்தார்.
இளம் வக்கீல்களுக்கு ரூ.5 ஆயிரம் மாத உதவித் தொகையை ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சட்டத்துறை மூலம் புதுவைவக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் புதிதாக 17 இளம் வக்கீல்களுக்கு ரூ.5 ஆயிரம் மாத உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில்நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி 17 இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகையை வழங்கினார். நிகழ்ச்சியின் போது சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், சட்டத்துறை செயலர் மற்றும் துணை செயலர் மற்றும்வக்கீல்கள் சங்க பொதுச்செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமிநாராயணன் இணை செயலாளர் திருமலைவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






