என் மலர்
புதுச்சேரி
கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் குற்றசாட்டுகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு..க அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வே இந்த ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று தெள்ளத் தெளிவாக புட்டுப்புட்டு வைத்துள்ளது. அதுபோல் வேளாண்துறை அமைச்சரும் இந்த ஆட்சியில் விவசாயிகள் நிம்மதியாக இல்லை என்று கூறியுள்ளார்.
புதுவை அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற்று வருவதாக கவர்னர் கூறுகிறார், அதேசமயம் முதல்-அமைச்சர் புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்காததால் வளர்ச்சி அடையவில்லை என்கிறார், இதில் எது உண்மை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
புதிய அரசு அமைந்து எந்த வளர்ச்சியும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மக்கள் வேலை வாய்ப்பையும், வருமான வாய்ப்பையும் இழந்து வருகின்றனர்.
தனிமனித ஏற்றத்தாழ்வுகளும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளும் மேலோங்கி வருகின்றன, எனவே புதுவை வளர்ந்து வருகிறது என்று கூறுவது வளர்ச்சியைப்பற்றிய புரிதல் இல்லாததாகும்.
விவசாய உற்பத்தித்திறன் உயரவில்லை, விளை பொருளுக்கு நல்ல விலை கிடைக்காததால், விவசாயிகள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று வேளாண்துறை அமைச்சரே குறை கூறுகிறார். எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்காவிட்டாலும் தற்போது கூட்டணி கட்சியான அ.தி.மு..க கூறியதற்கும், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவரே கூறியதற்கும் இந்த அரசும், கவர்னரும் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.
ரமலான் பண்டிகையையொட்டி ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
புதுச்சேரி:
புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு உப்பளம் தொகுதிக்குட்பட்ட பெரிய பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏழை- எளிய மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி தலைமை தாங்கினார். உப்பளம் தொகுதி தி.மு..க பிரமுகர் அஷ்ரப் முன்னிலை வகித்தார்.
இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர், பங்கு கொண்ட அனைவருக்கும் கென்னடி எம்.எல்.ஏ. பொருட்களை வழங்கி ரமலான் வாழ்த்துக்களை கூறினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ரவி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி , மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, அஸ்ரப், முபாரக்,நிசார், ரகீப், இமாம், காலப்பன், லாரன்ஸ், மோரீஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி பள்ளி ஆண்டு விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி (எலைட்) வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர்.கிறிஸ்டிராஜ், பள்ளியின் முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் தலைமைத் தாங்கினர். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. விழாவில் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளையும் பள்ளி நிர்வாகம் பற்றியும் பாராட்டிப் பேசினார்.
இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியச் சங்கத் தலைவர் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஜான்பால், ரஞ்சனி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழாவின் முடிவில் பள்ளியின் துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் நன்றியுரை வழங்கினார்.
கோரிமேடு அருகே பட்டானூரில் வழிகாட்டும் சாய்பாபா ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
புதுச்சேரி:
கோரிமேடு அருகே பட்டானூரில் வழிகாட்டும் சாய்பாபா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மேலும் சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சாய்பாபாவுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.
அதுபோல் நேற்று அமாவாசை தினத்தையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது மூதாதையர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். பக்கதர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
புதுவையில் ெதாழில்தொடங்க மானியம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
இந்திய தொழிலககங்கள் கூட்டமைப்பின் தென்மண்டல கவுன்சில் கூட்டம் புதுவை அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது.தென் இந்தியாவைச் சேர்ந்த 6 மாநிலங்களில் செயல்படும் பல்வேறு தொழிற்சாலைகளின் முதன்மைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
புதுவையில் பெரிய தொழிற்சாலைகள் வரவேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். இளைஞர்களுக்கு அதனால் வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுவையில் நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.அங்குள்ள ஏழை மாணவர்களும் மருத்துவம் தொழில் கல்வி படிப்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்க ஏதுவான சூழ்நிலைகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறோம்.
புதுவையில் குடிநீர் வசதி, சாலை வசதி சிறப்பாக உள்ளது. விமான போக்குவரத்தும் இப்போது தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் 300 ஏக்கர் பரப்பளவிலான இடங்களை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த திட்டம் முடிந்தால் பெரிய விமானங்கள் வந்து செல்வ தற்கு ஏதுவாக இருக்கும். எங்கள் பிள்ளைகள் சிறந்த கல்வி உடையவர்கள். அவர்களுக்கு வேலை தர வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.உங்கள் பார்வையில் அவர்களுக்கு பயிற்சி தேவை இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்தப் பயிற்சிகளை மத்திய அரசோடு சேர்ந்து கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
எளிமையான முறையில் தொழில் தொடங்கு வதற்கான உரிமங்களை வழங்குவதற்கு எங்கள் அரசு உதவியாக இருக்கும்நல்ல தொழி ற்சாலைகள் புதுவையில் வர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க ஆர்வமுடன் இருக்கிறோம்.தொழில் முனை வோர்கள் புதுவையில் தொழில் தொடங்க வந்தால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் எங்கள் மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
அதற்கு ஏதுவாக தொழிற்சாலைகளுக்கு நாங்கள் உதவிகரமாக இருக்க விரும்புகிறோம். உரிமங்களை விரைவாக கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் தொழில் தொடங்க முன்வ ருவோருக்கு மானியம் வழங்குவது தொடர்பாக வருகிற பட்ஜெட் கூட்ட த்தொடரில் பேசி முடிவு எடுக்கப்படும் உரிமங்களை சிங்கல் விண்டோ சிஸ்டம் அடி ப்படையில் கொடுப்பதற்கும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
தொழில் முனைவோர்களுக்கு செய்து கொடுக்கும் உதவிகளால் நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லி மற்ற தொழிற்சாலைகள் புதுவையில் வருவதற்கு உதவி செய்ய வேண்டும்.புதுவையில் கடல் வளம் உள்ளது. அந்த வளத்தைப் பயன்படுத்தி சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.
உங்களைப் போன்ற வர்கள் சுற்றுலா தொடர்பான தொழில் நன்கு அறிந்தவர்கள் அதற்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும். புதுவையில் ஐ.டி. தொழில் மற்றும் மருத்துவப் பூங்கா போன்ற தொழிற்சாலைகள் அமைக்க உகந்த சூழல் இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தருவதற்கு அந்த தொழிற்சாலைகளை நீங்கள் இங்கு தொடங்க வேண்டும். இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
கலந்துரையாடலில் தென்மண்டல சி.ஐ.ஐ. தலைவர் சுசித்ரா எலா, துணை தலைவர் கமல் பாலி, தலைவர் சுரேந்தர் துணைத் தலைவர் ஜோசப் ரோசாரியோ தென் மண்டல சி.ஐ.ஐ.யின் மண்டல இயக்குனர் ஜெயேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தவளக்குப்பத்தில் விபத்து டிப்பர் லாரிகள் மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
திண்டிவனத்தில் இருந்து புதுவை வழியாக ஜல்லி ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தது.
தவளகுப்பம் 4 முனை சந்திப்பு அருகே சென்ற போது, அபிஷேகப்பாக்கம் சாலை வழியாக வந்த ஜல்லி ஏற்றி வந்த லாரி பின் பக்கமாக மோதியது.
இதில் ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்து ஜல்லி ரோடு முழுவதும் கொட்டியது.
அதிகாலை நேரம் போக்குவரத்து குறைவாக இருந்ததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில், சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி டிரைவர் கிளியனுார் கீழ்கூத்தப்பாக்கத்தை சேர்ந்த வெற்றிமுருகன் (36) லேசானக காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாரும், தவளக்குப்பம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரதச்தை சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
நெட்டப்பாக்கம் அருகே தனியார் இரும்பு தொழிற்சாலையை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
புதுச்சேரி
நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம்- நத்தமேடு கிராமத்தில் பல ஆண்டுகளாக இரும்பு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகின்றது.
இந்த தொழிற்சாலையில் வட மாநிலங்களை சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை அந்த கிராமத்தை சுற்றிலும் சூழ்ந்து மூச்சுத்தினறல் ஏற்பட்டு பாதிப்படைவதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியை சேர்ந்த சிலருக்கு புற்றுநோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்த தொழிற்சாலையை கண்டித்து இன்று காலை ஏரிப்பாக்கம் - நத்தமேடு கிராம பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொழிற்சாலை நுழைவு வாயிலை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நெட்ட ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் -இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தொழிற்சாலை மீது அரசு நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று பந்தல் அமைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
மனைவியை தாக்கியதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பயந்து போன கணவன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் காரைக்கால் அம்மையார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38) இவர்
பெயிண்டராக வேலைசெய்து வந்தார். இவருக்கு மீரா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் ரமேசுக்கும் அவரது மனைவி மீராவுக்கும்தகராறு ஏற்பட்டது. அப்போது மீராவை ரமேஷ், தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மீரா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மனைவி மீரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால், திடீரென பயந்து போன ரமேஷ் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சுண்ணாம்பாறு பகுதிக்கு வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ரமேஷ் திடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்ட மீனவர்கள் ரமேசை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் தலையில் பலத்த காயமடைந்ததால் ரமேஷ் இறந்து போனார்.
தகவலறிந்த தவள க்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அதிநவீன மெய்நிகர் ஆய்வகத்தை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
கனக செட்டிகுளம் பிம்ஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அதிநவீன மெய்நிகர் ஆய்வக தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் முன்னிலை வகித்தார்.பிம்ஸ் முதல்வர் ரேணு வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை ஆய்வகத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
கொரோனா கட்டுப்படுத்திட 30-வாரங்கள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் ரேணு உள்ளிட்ட பல மருத்துவ நிபுணர்கள் குழு பங்கேற்றனர்.
அதனால்தான் கொரோனா கட்டுப்ப டுத்திட முடிந்தது. மத்தியில் இதற்கு பாராட்டு பெற்றோம்.இங்கு பேசிய ஆலோசகர்பாபு டேனியல் ,60ஆண்டுக்கு பிறகு முதல் தமிழ் பேசும் கவர்னர் வந்துள்ளார் என்றார்.இங்கு தமிழே வந்துள்ளேன்.என் பெயரிலே தமிழ் உள்ளது. நம் மருத்துவ மாணவ-மாணவிகள் புதிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் தம்மை புதுப்பித்து கொண்டால் தான் நாம் பல்வேறு புதிய நோய்களை கண்டறிந்து அதனை கட்டுபடுத்த முடியும். பலருக்கும் கிடைக்காத மருத்துவ வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து உள்ளது.
ஆகையால் கஷ்டப்பட்டு படிப்பதை விட்டு விட்டு இஷ்டப்பட்டு படிக்க வேண்டும்.
நான் மருத்துவ உதவி பேராசிரியராக இருந்த காலத்தில் கடைசி பெஞ்ச் மாணவர்களின் கல்வி மேம்பாடுகளுக்கு உதவியாக இருந்தேன்.
ஆகையால் அன்றைய பாடத்தை நன்றாக புரிந்து கொண்டு படியுங்கள் மகிழ்ச்சியாக கல்லூரி படிப்பை படியுங்கள். அது கட்டுப்பாடுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஊக்கம் தந்தால் தான் முன்னேற முடியும். அந்தவகையில் இங்கு இந்த ஆய்வகம் அமைய ஊக்கம் தந்த மருத்துவ கல்லூரிக்கு நன்றி.
இதனை பயன்பாட்டுக்கு தந்த மெடிசிம்- வி.ஆர். ஆதிக் சின்னசாமி.சபரீஷ் ஆகியோரை பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றை கடக்க முயன்ற ஒருவர் திடீரென ஆற்றில் மூழ்கினார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் திருக்கனூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
அதன்பேரில் திருக்கனூர் தீயணைப்பு நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆற்றில் இறங்கி தேடினர். இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தொலைவில் அவரது பிணம் மிதப்பதை கண்டனர்.
இதையடுத்து திருக்கனூர் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செட்டிப்பட்டு மேலாண்டை வீதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 47).கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.
திருமணமான இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், வெளியூருக்கு கூலி வேலைக்கு செல்லும் இவர் சொந்த ஊரான செட்டிப்பட்டு வரும்போது
அங்குள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு அப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். நேற்று அதேபோன்று சாராயக் கடையில் குடித்து விட்டு ஆற்றில் குளி ப்பதற்காக இறங்கிய போது அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
எனினும் போலீசார் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாதது ஏன்? நமச்சிவாயம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ. 30 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளை கிணறுகளை திறந்து மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு ஆழ்துளை கிணறுகளை இயக்கி தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வாய் அடக்கத்துடன் பேச வேண்டும். தற்போது நடுத் தெருவில் யார் நிற்கிறார்கள் என்பது புதுவை மக்களுக்கு தெரியும். 5 ஆண்டு காலம் முதல் -அமைச்சராக இருந்து விட்டு தேர்தலில் நிற்க தைரியில்லாமல் பயந்து ஓடியவர் நாராயணசாமி.
எங்களை பற்றி பேச அவருக்கு தகுதியில்லை.5 ஆண்டு கால ஆட்சியில் நாராயணசாமி என்ன செய்தார் என்பது அனை வருக்கும் தெரியும். அவருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமியை குறை கூற தகுதியில்லை.
தற்போது பிரதமர், மத்திய் உள்துறை மந்திரி ஆசியுடன் திட்டங்களை நிறைவேற்ற தொடங்கியுள்ளோம். இதனால் வயிற்று எரிச்சலில் தரம் கெட்ட வகையில் நாராயணசாமி பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.
கவர்னருடன் மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைத்து திட்டங்களை செயல் படுத்துகிறோம். தன்னால் செய்ய முடியாததை இப்போதைய முதல்-அமைச்சர், அமைச்சர்கள் செய்வதை நாராயணசாமியால் பொறுத்து கொள்ள முடிய வில்லை. புதுவையில் நடப்பது பொம்மை ஆட்சியல்ல. மக்கள் ஆட்சி.
முக்கியமாக பிரதமர் மோடியை குறை கூற முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. முதல் அமைச்சராக இருந்த போது மோடியை சந்திக்க சென்ற போதெல்லாம் காங்கிரஸ் துண்டை எடுத்து விட்டுதான் நாராயணசாமி சந்தித்தார். நடிப்பதுதான் அவரது வாடிக்கை.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரியில் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா பொறுப்பேற்றார்.
புதுச்சேரி:
புதுவை தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமாருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மறைமுகமாக மோதல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 20-ந் தேதி புதுவை தலைமைச் செயலாளரை டெல்லிக்கு இடமாற்றம் செய்து உத்தர விட்டது. புதுவை தலைமை செயலர் அஸ்வனி குமார் டெல்லிக்கும், அருணாச்சலப் பிரதேச ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜீவ்வர்மா புதுவைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நீண்டநாள் ஆளும் அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மத்திய உள்துறை நிறைவேற்றியதாக கூறப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளாக அஸ்வினி குமார் புதுவையில் இருந்த தால்தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுவைக்கு வந்த புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மாவிடம் தனது பொறுப்புகளை அஸ்வனிக்குமார் ஒப்படைத்து அவருக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, அஸ்வனி குமார் கவர்னர் தமிழிசையை சந்தித்தும் விடை பெற்று டெல்லி சென்றார்.






