என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 24 சதவீதம் காடுகள் அழிந்துள்ளது என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை காலநிலை மாற்றப்பிரிவு, புதுவை சுற்றுச்சூழல் தகவல் மையம், டெல்லி எரிசக்தி மற்றும் வள நிறுவனம்  ஆகியவை இணைந்து புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி திட்டத்தில் காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.

    இதன் தொடக்கவிழா   ஓட்டல் சன்வேயில் நடந்தது. முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    புதுவை நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள் இருந்தது. தற்போது இது 6 சதவீதமாக குறைந்துவிட்டது. 24 சதவீத காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. அண்டைநாடான பாகிஸ்தானில் 118 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது.

    வேலூரில் 108 டிகிரி வெயில் நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக  இது ஏற்படுகிறது. கொரோனா அதிகளவு நமக்கு தீங்கிழைத்தது. அதேநேரத்தில் சில நன்மைகளையும் செய்துள்ளது. 

    ஒசோனில் ஏற்பட்ட ஓட்டை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்காட்லாந்தில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் 2030-க்குள் கரியமில வாயுவை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார். 

    இதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி பயன்பாடை அதிகரிக்கப்போவதாக கூறியுள்ளார். ஆர்.ஓ. தண்ணீர் குடிப்பதே கேடு விளைவிக்கும் என்கின்றனர். இதனால் நான் மழைநீரை குடிக்கிறேன். நிலத்தடிநீரில் 50 டி.சி. நச்சுத்தன்மை இருந்தாலேகுடிக்க முடியாது என்பார்கள். 

    தற்போது புதுவையில் 700 டி.சி. நச்சுத்தன்மை இருப்பதாக கூறப்படுகிறது. நல்ல குடிநீரை மக்களுக்கு வழங்க திட்டங்கள் தீட்டியுள்ளோம். விரைவில் செயல்படுத்த உள்ளோம். பெரியவாய்க்காலை சுத்தப்படுத்த தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை வைத்தார். சுத்தப்படுத்திய மறுநாளே கழிவுநீரை வெளியேற்றுவார்கள்.

    பலர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதால் தோட்டம், கிணறு கிடையாது. இந்த பயிற்சி முகாமில் எடுக்கும் முடிவுகளை அரசு செயல்படுத்த தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

    விழாவில் சம்பத், எம்.எல்.ஏ., தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், புதுவை சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா, சீனியர் பொறியாளர் ரமேஷ் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 

    முகாமில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், எரிசக்தி வள நிறுவனம், கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம், ஜிப்மர், புதுவை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்கின்றனர். இன்றும், நாளையும் நடைபெறும் 2 நாள் பயிற்சி முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.
    திருக்கனூர் அருகே வழக்கை வாபஸ் பெறக்கோரி டிரைவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே விநாயகம் பட்டு ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சுப்பையன் (வயது 53). இவர் சொந்தமாக மினி வேன் வைத்து செங்கல் ஜல்லி ஏற்றிச்செல்லும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் கண்டமங்கலம் அருகே பெரியபாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில்   செல்வராசு அப்பகுதியில் உள்ள மது கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த புருஷோத்தமன் தகாத வார்த்தைகளால் திட்டி வழக்கை வாபஸ் வாங்க மாட்டாயா என கூறி சுப்பையனை கையால் தாக்கினார். 

    அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து தாக்குதலில் காயம் அடைந்த சுப்பையன் மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

    பின்னர் இது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவை அருகே மனைவியை கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே கலித்தீர்தாள்குப்பம் பழனிநகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது50). இவரது மனைவி செந்தமிழ்செல்வி(45). இவர்களுக்கு யுவராஜ்(24) என்ற மகன் உள்ளார். இவர் எம்.எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு அங்குள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    கலியமூர்த்தி மதகடிப்பட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மது குடிக்கும் பழக்கமுள்ள கலியமூர்த்தி அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வார்.

    தந்தையின் இந்த செயலால் அவரது மகன் யுவராஜ் வளவனூர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    இதற்கிடையே கலியமூர்த்தி வீட்டுக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது.

    மேலும் குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை என தெரிகிறது. இதனால் கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு கலியமூர்த்தி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரிடம் செந்தமிழ்செல்வி வீட்டுக்கு வராதது குறித்தும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காதது குறித்தும் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களை கலியமூர்த்தி எங்கள் குடும்ப சண்டையில் யாரும் தலையிட வேண்டாம் என கண்டித்து அவர்களை அங்கிருந்து விரட்டி அனுப்பினார்.

    பின்னர் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் தீராத கலியமூர்த்தி தனது கழுத்தில் அணிந்திருந்த துண்டை எடுத்து செந்தமிழ்செல்வி கழுத்தில் போட்டு இறுக்கினார்.

    இதில் மூச்சு திணறி செந்தமிழ்செல்வி இறந்து போனார். இதை பார்த்ததும் கலியமூர்த்தி பயந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது செந்தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து திருபுவனை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்இன்ஸ்பெக்டர் குமரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செந்தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கலியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

    மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் ஆண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து வீசிச்சென்ற கொடூரத்தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    அரியூர் காலனியை சேர்ந்தவர் மங்கைவரம். இவர் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை நகராட்சி பகுதியில் துப்புரவு தொழிலாளியாக கடந்த 7 வருடமாக வேலைசெய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு மங்கை வரம் சின்னசுப்புராயப்பிள்ளை லப்போர்த் வீதி சந்திப்பில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

    அங்குள்ள குப்பை தொட்டியை சுத்தம் செய்ய சென்ற போது அங்கு ஒரு கட்டைப்பையில் பிறந்து ஒரே நாளான பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் கிடப்பதை கண்டு மங்கைவரம் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அந்த குழந்தையை தானே வளர்க்க ஆசைப்பட்டு குழந்தையை தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். ஆனால் அந்த குழந்தையின் தொப்புள் கொடியில் ரத்தம் கசிந்ததால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

    அங்கு குழந்தை குறித்து டாக்டர்கள் மற்றும் நர்சுகள் விசாரித்த போது மங்கைவரம் நடந்த விவரத்தை எடுத்து கூறினார்.

    இதையடுத்து டாக்டர்கள் மங்கைவரத்துக்கு அறிவுரை கூறி அந்த குழந்தையை சிகிச்சைகாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதன் பின்னர் மங்கைவரம் இந்த சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து குப்பை தொட்டியில் வீசிச் சென்ற கொடூரத்தாய் யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை வீசிச் சென்றாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கன்னிய கோவிலில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:

    விக்கிரவாண்டியை  சேர்ந்தவர் ராமு. (வயது 34). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான காரை எடுத்துக்கொண்டு கடலூருக்கு புறப்பட்டு வந்தார். அந்த காரில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கோபி (32) என்பவர் பயணம் செய்தார். 

    புதுவை-கடலூர் ரோட்டில் கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த மற்றொரு கார் திடீரென ராமு ஓட்டிச் சென்ற கார்மீது மோதியது.

    இதில் ராமு ஓட்டிச் சென்ற காரின் முன் பக்கம் சேதமாகி இடிபாடுகளில் ராமுவும்  கோபியும் சிக்கிக் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

    அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அளவுக்கு அதிகமாக மது குடித்த தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    புதுச்சேரி:

    காட்டேரிக்குப்பம் அருகே தேத்தாம்பாக்கத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது34). இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கொடாத்தூரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா இறந்து விட்டதால் அவரது சகோதரி மகாலட்சுமியை சரண்ராஜ் 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சரண்ராஜ் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் தங்குவதற்கு இடம் பற்றாக்குறையாக இருந்ததால் மகாலட்சுமி தனது குழந்தை மற்றும்  சகோதரி குழந்தையுடன் கொடாத்தூரில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார்.

    மது குடிக்கும் பழக்கமுள்ள சரண்ராஜ் தினமும் இரவு மது குடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் இடத்தில் தங்குவது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு சரண்ராஜ் வீடு கட்டும் இடத்தில் படுத்து தூங்கினார்.  வெகுநேரமாகியும் சரண்ராஜ் எழுந்திருக்க வில்லை. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது சரண்ராஜ் இறந்து கிடப்பதை கண்டனர்.
    அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து சரண்ராஜியின் தந்தை கந்தன் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை அரும்பார்த்தபுரம் வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி யமுனாபாய். இவர்களது மகன் அன்பழகன்(வயது38). இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த மீனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  இதற்கிடையே  குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6ஆண்களுக்கு முன்பு அன்பழகன் மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து தாய் வீட்டில் இருந்து வந்தார். 

    மனைவி-குழந்தைைய பிரிந்து வந்த வேதனையில் அன்பழகன் மது குடிக்க தொடங்கினார். அளவுக்கு அதிகமாக அன்பழகன் மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு அறுவை சிகிச்சை  செய்த பின்னர்  அன்பழகன் வீட்டிலேயே இருந்து வந்தார். ஆனாலும் தொடர்ந்து அவர் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
    இந்த நிலையில் திடீரென அன்பழகன் உடல்நிலை மோசமாகி பேச்சுமூச்சியின்றி கிடந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அன்பழகன் இறந்து போனதாக தெரிகிறது.

    இதுகுறித்து அவரது தாய் யமுனாபாய் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வம்பாகீரப் பாளையத்தில் ஒர்க்‌ஷாப்பில் புகுந்து உரிமையாளரை தாக்கி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப் பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரத்(வயது37). இவர் வம்பாகீரப்பாளையம்-சோனாம்பாளையம் ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    இவரது வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் கடந்த 1½ மாதங்களாக கோவிந்தசாலை நேரு நகரை சேர்ந்த ஜோசப்(20)  என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில்  பாரத்தும், ஜோசப்பும் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக்்கொண்டிருந்தனர். அப்போது சோனாம்பாளையத்தை சேர்ந்த சூர்யா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் ஒர்க்‌ஷாப்பில் புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி பாரத்தை இரும்பு பைப்பால் தாக்கினர்.

    மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜோசப்பை சரமாரியாக வெட்டினர். இதனால் இருவரும் வலி தாங்காமல் அலறினர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் சூர்யாவும், ராமச்சந்திரனும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் தாக்குதலில் படுகாயமடைந்த பாரத் மற்றும் ஜோசப் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யா மற்றும் ராமச்சந்திரனை ேதடி வருகிறார்கள்.
    அரசு வேலைவாய்ப்பில் புதுவை இளைஞர்களுக்கு வயது தளர்வு கவர்னர் தமிழிசையிடம் அங்காளன் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    புதுச்சேரி:


    திருபுவனை  தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் புதுவை கவர்னர் தமிழிசையிடம்  மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- 
    புதுவை கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் புதுவை இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளாக அரசு வேலை பெறாமல் இருந்து வருகின்றனர். தற்போது புதுவை அரசு எல்.டி.சி. யூ.டி.சி., ஸ்டோர் கீப்பர் போன்ற வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது புதுவை இளைஞர்களுக்கு வயது தளர்வு அளிக்க வேண்டும். 

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    ஜூன் முதல் வாரம் புதுவையில் தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் தொழிற்சாலைகளுக்கான வரி சலுகை, மானிய  நிறுத்தம் ஆகியவற்றால் பல தொழிற்சாலைகள் இடம் பெயரத்தொடங்கின. இதனால் இளைஞர்களுக்கு  வேலை  இல்லாத சூழல் ஏற்பட்டது. 

    புதுவையில்  என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இளைஞர்களுக்கு வேலை தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    முதல்கட்டமாக காவல்துறையில் 390 பேர் போலீசாராக பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தககட்டமாக  எல்.டி.சி, யூ.டி.சி.   ஸ்டெனோ கிராபர் பணியிடம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் புதிதாக தொழில்முனைவோரை கவர பலதிட்டங்கள் கொண்டு வர அரசு முடிவு எடுத்தது. குறிப்பாக தொழில்முனைவோர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. புதுவை அரசும் பிரெஞ்சு வர்த்தக சபையும், இணைந்து வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொழில் முனைவோர் மாநாட்டை இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து நடத்த உள்ளனர்.

    ஒட்டல் அக்கார்டில் நடக்கும் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். 
    குறிப்பாக பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் உள்ள நாடுகளின் தொழில்முனைவோரும், நாடு முழுவதும்  உள்ள தொழில்முனைவோரும் பங்கேற்கிறார்கள்.

    இதுபற்றி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
    புதுவையில் இளையோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், தொழில்துறையை மேம்படுத்த சிறப்பு பொருளாதார மண்டலத்திட்டத்துக்காக சேதராப்பட்டு, கரசூர் பகுதிகளில் 750 ஏக்கர் நிலம் கையகம் செய்யப்பட்டது. இந்த நிலம் அரசிடம்  உள்ளது. இங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. வரும்  ஜூன் முதல் வாரத்தில் தொழில் முனைவோர் மாநாட்டை புதுவையில் நடத்தவுள்ளோம். 

    குறிப்பாக ஐ.டி., பார்மாசூட்டிக்கல், ஆட்டோமொபைல் ஆகிய 3 துறைகளுக்கு முக்கியத்துவம் தர உள்ளோம். ஸ்டார்அப் நிறுவனங்களையும் ஊக்குவிக்க உள்ளோம்.  முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே புதுவையில் வரவேற்பு தருவோம். இதன்மூலம் புதுவையில் இளையோருக்கு ஆயிரக்கணக்கில் வேலை கிடைக்கும்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.
    பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் பிளஸ்-2  பொதுத் தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது. 

    அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக புதுவையில் தற்போது கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்து கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதை தொடர்ந்து நாளை பிளஸ்-2 பொதுத் தேர்வும், நாளை மறுநாள் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வும் நடைபெற உள்ளது.

    பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் நன்றாக பயின்று தேர்வுக்குத் தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

    பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதன் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வியைப் பயிலும் வாய்ப்பைப் பெற முடியும்.

    எனவே, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் நல்ல நிலையை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    காமராஜ் நகர் தொகுதியில் ரூ.80 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
    புதுச்சேரி:

    காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணா நகர், வடக்கு சாலை பகுதிகளை மேம்படுத்த நியமன சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணியினை ஜான்குமார் எம்.எல்.ஏ. மற்றும் வெங்கடேசன் 
    எம்.எல்.ஏ.  ஆகியோர் பூமி பூஜை செய்து வைத்து தொடங்கி வைத்தனர். 

    இதில் உழவர்கரை நகராட்சி ஆணையர், செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் பகுதி குடியிருப்போர் நலச்சங்க பிரநிதிகள், கிருஷ்ணாநகர் வார்டு பொறுப்பாளர் அருள்பாபு கலந்து கொண்டனர். 

    இதேபோல் காமராஜ் நகர் தொகுதிக்குப்பட்ட ரெயின்போ நகர், 7-வது குறுக்குவீதி மற்றும் அன்னை நகர் சாலை பகுதிகளை மேம்படுத்துவதற்கு நியமன எம்.எல்.ஏ.  வி.பி.ராமலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து. ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
    இளநிலை எழுத்தர் பணி நியமன தேர்வுக்கு வயது வரம்பை குறைப்பதா? அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
    புதுச்சேரி

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர் பணியிடங்கள் நூற்றுக்கணக்கானவைகள் காலியாக இருந்து வருகிறது. முதல்-அமைச்சராரக பதவியேற்ற ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர்  காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

    அதன் அடிப்படையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கு அரசு முயற்சித்து வருகிறது. தற்பொழுது புதுவை அரசின்  நிர்வாகத் துறையின் மூலம் இளநிலை எழுத்தர் பணி பதவி இடங்களை நிரப்புவதற்கு பூர்வாங்கப்பணிகள் நடந்து வருகிறது. 

    இந்த நிலையில் எழுத்தர் பணி நியமன விதிகள் திருத்தப்பட்டு நிர்வாகத் துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால் தற்பொழுது பொது நிர்வாகத்துறை கடந்த 28.11.2016 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட நியமன விதிகளின்படி 18 வயது முதல் 30 வயது வரை வயது வரம்பை குறைத்து  இளநிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அதாவது கடந்த 2.12.2011 புதுவை அரசின் நிர்வாகத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி இளநிலை எழுத்தர் பணிக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது அதன்பின்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கும்வயது சலுகை அடையும் வகையில்  அறிவிக்கை செய்து பணி நியமனம் நடைபெற்றது.

    கடந்த 2012-ம் ஆண்டிற்கு பிறகு புதுவை அரசில் எந்த பணி யிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளதால் 10 ஆண்டு காலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் மிகவும் வறுமையான சூழ்நிலையில் தவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இளநிலை எழுத்தர் பணிக்கு வயது வரம்பினை குறைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமானது என்று தெரியவில்லை.

    இந்த இளநிலை பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும்.
    இம்மாதிரியான நியமன விதிகள் திருத்தப்படு ம்போது மாநில முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வராமல் 2016-ம் ஆண்டு திருத்தப்பட்ட நியமன விதிகளின்படி வெளியிடுவதற்கு யாரோ சிலர் முயற்சித்து வருகிறார்கள்.

    இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் கடந்த 10 ஆண்டு காலமாக வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் இருப்பதை கவனத்தில் கொண்டு 2011-ம் ஆண்டு தங்களால் கொண்டுவரப்பட்ட நியமன விதிகளின்படி அதாவது 18 வயது முதல் 32 வயது வரை இளநிலை எழுத்தர் பணிக்கு தேர்வு செய்ய நியமன விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும் எனபுதுவை மாநில தி.மு.க. சார்பில் வேண்டுகோள் வைக்கின்றேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில்  அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குறிப்பிட்டுள்ளார்.
    ×