என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் 200 தன்னார்வலர்களுக்கு விருது அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்.
    • சமூக சேவை செய்யும் தன்னார்வலர்களுக்கு அன்னை தெரேசா விருது வழங்கும் விழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உதவும் இதயம் பேரியக்கம் சார்பில் சமூக சேவை செய்யும் தன்னார்வலர்களுக்கு அன்னை தெரேசா விருது வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு 200க்கு மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கினர்.

    சிறப்பு விருந்தினர்களாக புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், இசைக்கவி செல்வமணி, சமூக சேவகர் பிரகாஷ் , மதன், கவிஞர் தமிழரசி ஆகியோர் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினர்.

    கவிஞர் சங்கர் , லூர்து சேவியர், ராஜலட்சுமி சமூக சேவகர் சவுந்தரராஜன், சரவணன் , தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுந்தர நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் உலக கவிஞர்கள் சங்கமம் நிறுவனர் புதுவை குமார் செய்திருந்தார்.

    • புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.
    • நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர்களை மாணவர்கள் அதிகளவில் சேர்க்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.

    கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 23-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 13-ந் தேதி தொடங்கி நடக்கிறது.

    நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர்களை மாணவர்கள் அதிகளவில் சேர்க்கின்றனர்.

    1-ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். மாற்று சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழ் தேவையில்லை என்பதால் எளிதில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டாக கொரோனவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

    இதனால் அரசு பள்ளிகளுக்கு கூடுதலாக மவுசு ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதும்,

    சி.பி.எஸ்.இ பாடத்திட்டம், ஆங்கில வழிக்கல்வி ஆகியவையும் பெற்றோர்களிடம் அரசு பள்ளிகள் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

    அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த கல்வியாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாகூரில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.
    • இந்த மண் சேகரிக்கும் பணியானது அடுத்த ஒரு வார காலத்திற்கு பாகூர், பரிக்கல்பட்டு, குருவிநத்தம் மற்றும் இருளன்சந்தை கிராமங்களில் நடைபெற உள்ளது

    புதுச்சேரி:

    புதுவை அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வேதியியல் பிரிவு சார்பில் பாகூர் பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள மண்ணை பரிசோதனை செய்யும் பொருட்டு மண் மாதிரி சேகரிப்பு முகாம் பாகூரில் நடைபெற்றது. இந்த மண் சேகரிக்கும் பணியானது அடுத்த ஒரு வார காலத்திற்கு பாகூர், பரிக்கல்பட்டு, குருவிநத்தம் மற்றும் இருளன்சந்தை கிராமங்களில் நடைபெற உள்ளது.

    இந்த பணியில் பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான், வேளாண் அலுவலர் பரமநாதன், உதவி வேளாண் அலுவலர் கோபால் மற்றும் உதவியாளர் திருநீலகண்டன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
    • கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உணவு தொழில்நுட்பத்துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உணவு தொழில்நுட்பத்துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மலர்க்கண் சிறப்புரையாற்றினார். உணவு தொழில்நுட்பத்துறை தலைவர் திருச்செல்வம் வரவேற்புரையாற்றினார். புதுவையில் உள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உணவு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் உணவு சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதில் மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியின் உணவு தொழில்நுட்பத்துறை மற்றும் பிற துறைகளை சேர்ந்த சுமார் 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை உணவு தொழில்நுட்பத் துறையின் உதவி பேராசிரியர்கள் சாந்தலட்சுமி மற்றும் பாக்யா நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.

    • காலிமனையில் மோட்டார் சைக்கிள் நிறுத்திய தகராறில் கணவன்-மனைவி, மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • ரெட்டியார் பாளையம் சிவகாமி நகரை சேர்ந்தவர் சீனுவாசன். இவர் ரெயில்வே துறையில் பணி செய்து வருகிறார்

    புதுச்சேரி:

    காலிமனையில் மோட்டார் சைக்கிள் நிறுத்திய தகராறில் கணவன்-மனைவி, மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புதுவை ரெட்டியார் பாளையம் சிவகாமி நகரை சேர்ந்தவர் சீனுவாசன். இவர் ரெயில்வே துறையில் பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியில் அவருக்கு சொந்த காலிமனையில் சுரேஷ் என்பவர் வீட்டில் குடியிருந்தவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு சீனுவாசன் கேட்டுக்கொண்டிருந்த போது அதே தெருவை சேர்ந்த கோபால கிருஷ்ணன், பத்மநாபன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி சீனுவாசனை வீடுபுகுந்து கையாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் சீனுவாசனின் மனைவி கஸ்தூரி பாய் மற்றும் அவரது மகள் ஆகியோரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர்களை தாக்கியதோடு அவர்களிடமிருந்த செல்போனை வலுக்கட்டா யமாக பறித்து சென்று விட்டார்.

    மேலும் இனிமேல் இந்த வீட்டில் இருந்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.

    இதுகுறித்து சீனுவாசன் ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இதையடுத்து சீனுவாசன் புதுவை வடக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அவர்களும் இதன் மீது நடவடிக்கை எடுக்காததால் சீனுவாசன் புதுவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ரெட்டியார் பாளையம் போலீசுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி போலீசார் சீனுவாசனையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கோபால கிருஷ்ணன், பத்மநாபன் மற்றும் அசோக் குமார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கரிக்கலாம் பாக்கத்தில் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்ததை தட்டிக்கேட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரி தாக்கப்பட்டார்.
    • கரிக்கலாம் பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து இவர் புதுவை குடிசைமாற்று வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    கரிக்கலாம் பாக்கத்தில் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்ததை தட்டிக்கேட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரி தாக்கப்பட்டார்.

    வில்லியனூர் அருகே கரிக்கலாம் பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து இவர் புதுவை குடிசைமாற்று வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்க அங்குள்ள கடைதெருவுக்கு சென்றார். அப்போது அதே தெருவில் குமரவேல் என்பவரின் உறவினரான காரணப்பட்டை சேர்ந்த பூமணி நடுரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்திருந்தார். இதனை வீரமுத்து தட்டிக்கேட்டு நாற்காலியை சாலை ஓரமாக போட்டு அமருமாறு அறிவுறுத்தினார்.

    இதனால் ஆத்திரமடைந்த பூமணி தகாத வார்த்தைகளால் திட்டி வீரமுத்துவை நாற்காலியை எடுத்து தாக்கினார். இதில் வீரமுத்துவுக்கு இடதுகை நடுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதையடுத்து வீரமுத்து தனது உறவி னர்கள் உதவியுடன் கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைகாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வீரமுத்துவின் மனைவி விஜயா கரிக்கலாம் பாக்கம் புறகாவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 291, பாகூர் திரவுபதியம்மன் கோவில் வீதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 739 ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட சின்ன ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் பழைய நீர்தேக்க தொட்டி அருகே கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 291, பாகூர் திரவுபதியம்மன் கோவில் வீதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 739 ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் புனிதவதி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர், தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • லாஸ்ட்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ரூ. 2 ½ கோடியில் புதிய கட்டிடம் கட்ட ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்
    • லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து இந்த போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கிழக்கு கடற்கரைச்சாலையில் மடுவுபேட்டில் ரூ. 2 கோடியே 74 லட்சத்து 66 ஆயிரம் செலவில் கட்டப்படுகிறது.

    காலை நடந்த இதற்கான பூமி பூஜை விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ. சரவணன் குமார், செல்வகணபதி, எம்.பி. வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காவல்துறை இயக்குநர் ரன்வீர் சிங் கிருஷ்ணியா, கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆனந்தமோகன், ஜ.ஜி சந்திரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.

    போலீஸ் நிலையம் 225 சதுர மீட்டர் அளவு தரைத்தளத்தில் முகப்பு வளாகமும், நிலைய அதிகாரி, எழுத்தர், தலைமைக்காவலர், பெண்கள் மற்றும் ஆண்கள் சிறை அறை ஆகியவையும் 218 சதுர மீட்டர் முதல் தளத்தில் ஆலோசனைக் கூடமும், கம்பியில்லா தொலைபேசி அறை, அலுவலக அறை, காவலர் அறை, ஆயுத அறை, இன்ஸ்பெக்டர் அறையும் அமையும்.

    2-வது தளத்தில் பதிவாளர் அறை, பொருள்கள் வைக்கும் அறை, குற்றப்பின்னணி கண்காணிப்பு அறை, பயிற்சி போலீசார் தங்கும் இடம் ஆகியவை அமைக்கப்படும். 8 மாதங்களில் இந்த போலீஸ் நிலையம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த 2021-ல் இதே இடத்தில் அப்போதைய முதல்- அமைச்சர் நாராயணசாமி லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரைக்காலுக்கு பாய் மர படகில் கடல் சாகசமாக சென்று புதுவை திரும்பிய மாணவர்களுக்கு ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
    • இந்த குழுவினருடன் 3 கடல்படை அதிகாரிகளும், 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை-தமிழகம் தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள இணைந்து கடந்த 6-ந் தேதி கடல் சாகச பயணத்தை புதுவையில் தொடங்கினர். பயணத்தை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். பயணத்தில் 25 மாணவிகள் உட்பட 60 பேர் பங்கேற்றனர். இந்த குழுவினருடன் 3 கடல்படை அதிகாரிகளும், 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றனர்.

    3 பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத்ததான முகாம், மரம் நடுதல், தூய்மைப்பணி திட்டம் என பல சமூக சேவைசார்ந்த நிகழ்வுகளை நடத்தினர்.

    கடல் சாகச பயணக்குழுவினர் சுமார் 302 கி.மீ தொலைவினை கடந்த 6-ந் தேதி தொடங்கி நிறைவு செய்தனர். அவர்களை வரவேற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்பட பலர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர். 

    • புதுவையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது.
    • கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில் 12 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், ஏனாமில் 4 பேர், மாகியில் 2 பேர் என மொத்தமாக 19 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    புதுச்சேரி:

    புதுவையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது.

    புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில் 12 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், ஏனாமில் 4 பேர், மாகியில் 2 பேர் என மொத்தமாக 19 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 77 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,65,992 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,63,953 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • மது குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தேங்காய்த்திட்டு நேரு நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாரி செல்வன்(வயது56). இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்

    புதுச்சேரி:

    மது குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை தேங்காய்த்திட்டு நேரு நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாரி செல்வன்(வயது56). இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பாரிசெல்வம் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். மது குடிக்கும் பழக்கமுள்ள இவர் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்வார். கடந்த 2 மாதமாக இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.

    அதுபோல் பாரிசெல்வம் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால், மணிமேகலை பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து மொட்டை மாடிக்கு தூங்க செல்வதாக பாரி செல்வம் கூறி சென்றார். மணிமேகலை டீ தயாரித்து கணவருக்கு கொடுக்க மாடிக்கு சென்றார். அப்போது அங்குள்ள அறையில் மின்விசிறி கொக்கியில் கணவர் வேட்டியால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் பாரிசெல்வம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து மணிமேகலை முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
    • மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு நாடு முழுக்க தாய்மொழிக்கு அடுத்து சமஸ்கிருதம், இந்தியை கொண்டு வரும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வடிவமை த்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு நாடு முழுக்க தாய்மொழிக்கு அடுத்து சமஸ்கிருதம், இந்தியை கொண்டு வரும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வடிவமை த்துள்ளது. 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் இருமொழி கொள்கையை நிராகரித்து, மும்மொழிக் கல்வித்திட்டத்தை முன்னிறுத்துகிறது.

    தாய்மொழியில் 5 அல்லது 8-ம் வகுப்பு வரை கல்வி கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் தான் 5-ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு அப்பாட திட்டங்களை தமிழில் தயாரித்து வழங்கவில்லை.

    இதே நிலைதான் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினாலும் தொட ரும். ஆட்சியாளர்களாலும் பாடத் திட்டங்களை தமிழில் தயாரித்து வழங்க முடியாது. 6-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத் தினால் மொழிப்பாடமாக உள்ள தமிழ் நீக்கப்பட்டு, இந்தி நுழைந்துவிடும்.

    இதனால் புதுவை அரசு தமிழக பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து அமல்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போகும். தமிழ் மொழியில் பாடத்திட்டத்தை புதுவை அரசால் தயாரிக்க முடியாது என்பதால் வெளிமாநிலங்களில் எந்த மொழியில் தயாரிக்கப்படு கிறதோ, அந்த புத்தகங்களை பெற்று வந்து புதுவை மாணவர்களுக்கு வழங்கும்.

    எனவே புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தினால் இந்தி அல்லது பிற மொழிகளை திணிப்பதற்கான பாதை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை உணர்ந்து தமிழக முதல்-அமைச்சர், தனியாக ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறார்.

    நிச்சயம் அது சிறந்த கல்விக் கொள்கையாகவும், மாணவர்களின் வாழ்க்கை யையே மாற்றி அமைக்கும் கொள்கையாகவும் இருக்கும். எனவே தமிழக கல்விக் கொள்கையை புதுவையிலும் 1-ம் வகுப்பு முதலே அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×