search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2006-ல் மன்மோகன் சிங் பேசியது என்ன?
    X

    2006-ல் மன்மோகன் சிங் பேசியது என்ன?

    • காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
    • பா.ஜனதா தலைவர்கள் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தி வருகிறார்கள்.

    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் சொத்துகளில் (வளங்கள்) முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் காங்கிரஸ் அரசு தெரிவித்திருந்தது" என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசினார்.

    2006 தேசிய வளர்ச்சி மாநாட்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக பா.ஜனதா வீடியோவும் வெளியிட்டிருந்தது.

    காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேவேளையில் பா.ஜனதா தலைவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடியின் பேச்சை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

    அதன்படி, 2006-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், "நாட்டின் வேகமான வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, விவசாயம், வேலை வாய்ப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி" உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

    அப்போது, "நமது முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன். விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நீர் ஆதாரங்கள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் முக்கியமான முதலீடு மற்றும் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றோடு, பட்டியலினத்தோர், பிற பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களுடன் தான் நமது முன்னுரிமை.

    பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெற வேண்டும். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களை சமமாகப் பெறுவதை உறுதிசெய்ய, திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். நமது வளங்கள் மீதான முதல் உரிமை இவற்றிற்கானது தான்." என்று குறிப்பிட்டார்.

    பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த கருத்துக்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கிய பிறகு பிரதமர் அலுவலகம் விளக்கம் கொடுத்தது.

    அதில், "வளங்கள் மீதான முன்னுரிமை" குறித்த பிரதமரின் பேச்சு வேண்டுமென்றே தவறாக பரப்பப்பட்டதின் காரணமாக சர்ச்சை உருவாகியுள்ளது. பிரதமரின் பேச்சினை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது இந்த சர்ச்சையை தூண்டியுள்ளது. பட்டியலினத்தோர், பிற பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் போன்ற அனைவரின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை தான் இது குறிக்கிறது.

    சமீப மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதை அடிப்படையாக கொண்டே பிரதமர் இந்த அறிவிப்புகளை மேற்கொண்டார். பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தினாலும், நலிவடைந்த மற்றும் சிறுபான்மை பிரிவினரின் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். "இந்தியா பிரகாசிக்க வேண்டும், ஆனால் அது அனைவருக்குமே பிரகாசிக்க வேண்டும்" என்று பிரதமர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்".

    "வளங்கள் மீதான முதல் உரிமைகோரல்" என்ற பிரதமரின் குறிப்பு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாடு உள்பட மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து "முன்னுரிமை" பகுதிகளையும் குறிக்கிறது என்பதை மேற்கூறியவற்றிலிருந்து பார்க்க முடியும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×