search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஸ்மிருதி இரானியை எதிர்த்து களம் காணும் பிரியங்கா காந்தியின் கணவர்?
    X

    ஸ்மிருதி இரானியை எதிர்த்து களம் காணும் பிரியங்கா காந்தியின் கணவர்?

    • ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை.
    • சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.

    அமேதி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தவை. இந்திராகாந்தி காலத்தில் இருந்தே அங்கு காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது.

    அமேதி தொகுதியில் கடந்த 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராகுல் காந்தி தொடா்ந்து வெற்றி பெற்றாா்.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தோ்தலில் ராகுலை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி ஸ்மிருதி இரானியை நிறுத்தியது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக சுமாா் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியை தழுவினார்.

    வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற் கொண்டு அந்த தொகுதியை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான தொகுதியாக மாற்றி இருக்கிறார்.

    இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற தோ்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சாா்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவது யார் என்பது தொடர்ந்து சஸ்பென்சாக உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட காங்கிரஸ் அமேதி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது

    கடந்த முறை தோல்வியை தழுவிய ராகுல் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட மனு செய்து உள்ளார். அவர் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து மீண்டும் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமேதியில் மே 20-ந்தேதி 5-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அமேதியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட்வதேராவை போட்டியிட செய்ய முயற்சி நடப்பது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக பேட்டியளித்த ராபா்ட் வதேரா, 'ஸ்மிருதி இரானியை தோ்வு செய்ததன் மூலம் தாங்கள் செய்த தவறை அமேதி தொகுதி மக்கள் இப்போது உணா்ந்து விட்டனா். சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.

    சோனியா குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்தான் தங்கள் தொகுதியை மீண்டும் பிரதி நிதித்துவப்படுத்த வேண்டும் என அமேதி தொகுதி மக்கள் எதிா்பார்க்கின்றனா். நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், அமேதி தொகுதியை தோ்வு செய்ய வேண்டும் என்று அந்த தொகுதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.

    ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை. அவர் மீது நில மோசடி வழக்குகள் உள்ளன. அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

    அவர் தேர்தலில் போட்டியிட்டால் அந்த மோசடி புகார்களை பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×