search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    13 மாநிலங்களில் தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரம்- உ.பி.யில் பிரதமர் மோடி இன்று ஓட்டு வேட்டை
    X

    13 மாநிலங்களில் தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரம்- உ.பி.யில் பிரதமர் மோடி இன்று ஓட்டு வேட்டை

    • 2-வது கட்ட வாக்குப்பதிவுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பா.ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    18-வது பாராளுமன்ற மக்களவைக்கான ஓட்டுப்பதிவை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. மொத்தம் உள்ள 543 இடங்களுக்கு முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    64 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. திரிபுராவில் அதிகபட்சமாக 80 சதவீதமும், பீகாரில் குறைந்தபட்சமாக 49 சதவீதமும் பதிவானது.

    2-வது கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன் விவரம்:-

    கேரளா-20, கர்நாடகம்-14, ராஜஸ்தான்-13, மகாராஷ்டிரா-8, உத்தரபிர தேசம்-8, மத்தியபிரதேசம்-7, அசாம்-5, பீகார்-5, சத்தீஸ்கர்-3, மேற்கு வங்காளம்-3, திரிபுரா-1, ஜம்மு காஷ்மீர்-1, மணிப்பூர்-1 ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவரது தொகுதிக்கான வாக்குப்பதிவு 2-வது கட்டத்தில் வருகிறது. ராகுல்காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆனி ராஜாவும், பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் கே.சுரேந்திரனும் போட்டியிடுகிறார்கள். இதேபோல திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் சசிதரூரும், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகரும் களத்தில் உள்ளனர்.

    பாலிவுட் நடிகையான ஹேமமாலினி போட்டியிடும் மதுரா தொகுதியும் (உத்தரபிரதேசம்) 2-வது கட்டத்தில் வருகிறது. அவர் 3-வது முறையாக பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். ராமாயணம் புகழ் அருண் கோவில் போட்டியிடும் மீரட் தொகுதியிலும் இரண்டாவது கட்டத்தில் தேர்தல் நடக்கிறது.

    2-வது கட்ட வாக்குப்பதிவுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் ஜாலோர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதேபோல மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அங்கு மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகள் 2-வது கட்ட தேர்தலில் வருகிறது.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா சத்தீஸ்கரிலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கேரளாவிலும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    தலைவர்களின் தீவிர பிரசாரத்தால் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×