என் மலர்
இந்தியா

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார் சித்தராமையா
- பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
- காயம் அடைந்தவர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயம் அடைந்தவர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-
ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர். இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
35000 பேர் அமரக்கூடிய சின்னசாமி மைதானத்தில் 2- 3 லட்சக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மக்கள் மைதானத்தின் கதவுகளை உடைத்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இவ்வளவு பெரிய கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. மைதானத்திற்கு வெளியே கடல் போல் கூடியிருந்த கூட்டம் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
துயரத்தால் ஏற்பட்ட சோகம் வெற்றிக் கொண்டாட்டத்தை மகிழ்ச்சி இழக்கச் செய்து விட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக பொது மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும்.
கூட்ட நெரிசல் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. எங்கள் அரசு இதில் அரசியல் செய்யாது. நான் ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளேன். நீதி விசாரணைக்கு பிறகு யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






