என் மலர்
இந்தியா

வக்பு மசோதாவுக்கு பின் தேவாலயங்களைக் குறிவைக்கும் சங் பரிவாரம்.. பினராயி விஜயன் எச்சரிக்கை
- கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது
- சிறுபான்மை சமூகத்தினரை அழிக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அங்கமாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, மேல்சபையில் நேற்று முன்தினம் அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்ந்த இதழான Organiser, "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது.
வக்பு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்எஸ்எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரை குறிவைக்கிறதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் எச்சரித்தார்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து கூறியதாவது, வக்பு மசோதாவுக்குப் பிறகு சங் பரிவாரம் தேவாலயங்களைக் குறிவைத்துள்ளது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களின் ஆழமான விரோதத்தை வெளிப்படுத்துகிறது. தேவாலய நிலங்கள் பற்றி குறிப்பிடப்படும் தேவையற்ற கருத்துகள் ஆபத்தான அறிகுறிகளை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளன.
இந்தக் கட்டுரையின் மூலம் ஆர்எஸ்எஸ்-ன் உண்மையான நோக்கம் வெளியே வந்துள்ளது. சங் பரிவாரம் முன்வைக்கும் பெரும்பான்மை வகுப்புவாதம் மற்ற மதங்களின் மீது பகையை உண்டாக்கும் வேலையே.
சிறுபான்மை சமூகத்தினரை அழிக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அங்கமாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.