என் மலர்
இந்தியா

பாகிஸ்தானுக்கு 19%, இந்தியாவுக்கு 50% வரி: டிரம்ப் - மோடி நட்பை கேள்வி எழுப்பிய ரகுராம் ராஜன்
- அமெரிக்காவை நம்ப முடியாது.
- சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியது.
மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான மிகவும் பாராட்டப்பட்ட நட்பு எங்கே? என்று பொருளாதார நிபுணரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பினார்.
சிகாகோ கவுன்சில் ஆன் குளோபல் அஃபேர்ஸ் நடத்திய உரையாடலில் பேசிய ரகுராம் ராஜன், "கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி வருவதாக நான் நினைக்கிறேன். அது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துவிட்டு, பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரி மட்டுமே விதிக்கிறது. அப்படியெனில் மோடிக்கும் டிரம்பிற்கும் இடையே பாராட்டப்பட்ட நட்பு எங்கே?
அமெரிக்காவை நம்ப முடியாது. 1970களில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கிஸ்ஸிங்கரும் 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானின் பக்கம் சாய்த்தனர். அவர்கள் போரை நிறுத்தவும், பாகிஸ்தானுக்கு உதவவும் ஏழாவது கடற்படையை அனுப்பினர். அதனால் இந்தியர்கள் மிகவும் கோபமடைந்தனர். அப்போது சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியது. அது இந்தியாவை 25 ஆண்டுகளாக சோவியத் முகாமில் வைத்திருந்தது" என்று தெரிவித்தார்.






