என் மலர்
இந்தியா

"நரேந்தர் - சரண்டர்" என்று டிரம்ப் சொன்னதும் போரை நிறுத்திய பிரதமர் மோடி - ராகுல் காந்தி தாக்கு
- ஒரு சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
- எப்போதும் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடியுள்ள காங்கிரஸ் ஒருபோதும் தலைவணங்காது.
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கட்சிப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
அவர் பேசியதாவது, "ஒரு சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது.ஒரு பக்கம் காங்கிரசும் அரசியலமைப்பும் நிற்கின்றன; மறுபுறம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், அதைக் கடைப்பிடிக்கவோ அல்லது பாதுகாக்கவோ விரும்பவில்லை. அவர்கள் இந்தியாவின் நிறுவனங்களை முறையாகக் கைப்பற்றி, நாட்டை மெதுவாக மூச்சுத் திணறடிக்கிறார்கள்.
இரண்டாவது போராட்டம் சமூக நீதிக்கானது. பாஜக-ஆர்எஸ்எஸ் தலைமை சாதி கணக்கெடுப்பை நிர்ப்பந்தத்தின் பேரில் வாய்மொழியாகவே நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அதை செயல்படுத்துவதை தீவிரமாகத் தடுக்கிறது. அவர்கள் சமூக நீதியின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்தியாவை அல்ல, அதானி மற்றும் அம்பானிக்கு சேவை செய்யும் இந்தியாவை விரும்புகிறார்கள்.
நான் பாஜகவையும் ஆர்எஸ்எஸ்ஸையும் நன்றாகப் புரிந்துகொண்டேன். சிறிதளவு அழுத்தம் கொடுத்தாலும், அவர்கள் பயத்தில் பின்வாங்குவார்கள். டிரம்ப் போன் செய்து, 'நரேந்தர், சரண்டர்' என்று சொன்னபோது ஜி அப்படியே ஆகட்டும் என மோடி போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்று ராகுல் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் வல்லரசுகளை துணிச்சலுடன் எதிர்கொண்டதை நினைவுபடுத்திய ராகுல், "அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை மீறி 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையின்கீழ் இந்தியா பாகிஸ்தானை அடித்தது.
எப்போதும் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடியுள்ள காங்கிரஸ் ஒருபோதும் தலைவணங்காது. காந்தி, நேரு, சர்தார் படேல் போன்ற சிறந்த மனிதர்கள் அனைவரும் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிய போர்வீரர்கள்" என்று கூறினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூருக்கு பின் கடந்த மே 9 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்தத்திற்கு தானே காரணம் என்றும், வர்த்தகத்தை வைத்து இருவரையும் பணிய வைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்க நீதிமன்றத்திலும் டிரம்ப் நிர்வாகம் இதை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






