என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும் - சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
- பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
- உத்தவ் தாக்கரே காலில் விழாததால்தான் பாஜக சிவசேனாவைப் பிளவுபடுத்தியது
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தோல்வியடைந்தது என சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் ஏன் நடந்தது? அதற்கு அமித் ஷா மட்டுமே பொறுப்பு. உள்துறை அமைச்சராக அவர் தோல்வியடைந்தவர். பிரதமர் மோடி அவரை ராஜினாமா செய்து பதவி விலகச் சொல்ல வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் ஒரு தோல்வி. பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதைக் கோரினார்" என்று சஞ்சய் ராவத் கூறினார்.
மேலும், உத்தவ் தாக்கரே காலில் விழாததால்தான் பாஜக சிவசேனாவைப் பிளவுபடுத்தியது என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.
ஜூன் 2022 இல், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் பிரிவுடன் முறித்துக் கொண்டு பாஜகவில் இணைந்து மஹாயுதி கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார்.
மத்தியிலும், மூன்றரை ஆண்டுகாலம் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த பாஜக, பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தங்கள் தோல்வியை மறைக்க எதற்கும் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் மீது பழி சுமத்துவதாக சஞ்சய் ராவத் விமர்சித்தார்.
இந்த மாதம் 7 ஆம் தேதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.






