என் மலர்
இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்த மருமகனை அடித்துக் கொன்ற மாமியார்- மீண்டும் அத்துமீறியதால் வெறிச்செயல்
- ஆத்திரம் அடைந்த மாமியார் அருகில் இருந்த கட்டையை எடுத்து மருமகன் தலையில் பலமாக தாக்கினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், ஹிமாயத் நகரை சேர்ந்தவர் ஷேக் நஜீம் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, மகன் மற்றும் மாமியாருடன் தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம், தரோடா கிராமத்திற்கு வந்தார்.
ஷேக் நஜீம் கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி கட்டிட வேலைகளுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நஜீமின் மனைவி தனது மகனுடன் மகாராஷ்டிரா மாநிலம், ஷிவானிக்கு சென்றார். இதனால் அவரது மாமியார் வீட்டில் தனியாக இருந்தார்.
கடந்த வாரம் மது போதையில் வீட்டிற்கு வந்த ஷேக் நஜீம் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனால் அவரது மாமியாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த ஷேக் நஜீம் மீண்டும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மாமியார் அருகில் இருந்த கட்டையை எடுத்து மருமகன் தலையில் பலமாக தாக்கினார். இதில் ஷேக் நஜீம் மயக்கம் அடைந்தார். அவரது கழுத்தை நெரித்து மாமியார் கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷேக் நஜீமின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






