என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றேன்.. மனைவியை கொன்ற 'வீரர்' தண்டனையை தவிர்க்க உச்சநீதிமன்றத்தில் விசித்திர மனு
- அவர் குற்றவாளி என நிரூபணமாகி பஞ்சாப் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
- விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
தனது மனைவியைக் வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய பாதுகாப்புப் படையின் பிளாக் கேட் கமாண்டோ வீரர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான வாதத்தை முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சமீபத்திய ஆபரேஷன் சிந்தூருக்காக அவர் பணியாற்றியதாகவும், எனவே கொலை வழக்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
வரதட்சணைக்காக தனது மனைவியைக் கொன்ற வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபணமாகி பஞ்சாப் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தை அணுகினார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் மூலம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அவர் ஒரு பிளாக் கேட் கமாண்டோ என்றும், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதாகவும் கூறினார். இந்த மனுவை விசாரித்த அமர்வு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றியதால் மட்டுமே, அவர் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும், இந்த வழக்கில் அந்த விலக்கு அளிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவர் உடனடியாக சரணடைய உத்தரவிட்டது. இருப்பினும், மனுதாரர் சரணடைய சிறிது நேரம் கேட்டதால், அவருக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.






