என் மலர்
இந்தியா

பாழடைந்த பெட்டிகள், 3 நாள் தாமதம் - பாதுகாப்புக்கு புறப்பட்ட 1,300 BSF வீரர்களை அலைக்கழித்த ரெயில்வே!
- ரெயில் பெட்டிகள் அழுக்காகவும், பாழடைந்ததாகவும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 13 கம்பெனியை சேர்ந்த சுமார் 1,300 BSF வீரர்களைப் பாதித்துள்ளது.
அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் 72 மணி நேரம் தாமதமானதால், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும், ரெயில் பெட்டிகள் அழுக்காகவும், பாழடைந்ததாகவும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திரிபுராவில் உள்ள உதய்பூர் ரெயில் நிலையத்தை ஜூன் 6-ம் தேதி வந்தடைய வேண்டிய இந்த ரயில், ஜூன் 9-ம் தேதி மாலை 6:30 மணிக்கே வந்து சேர்ந்தது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, ஜூன் 12, 2025-க்குள் முழு பட்டாலியனும் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருந்தது.
இந்தத் தாமதம் திரிபுரா, குவஹாத்தி, மிசோரம் மற்றும் கச்சார் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 13 கம்பெனியை சேர்ந்த சுமார் 1,300 BSF வீரர்களைப் பாதித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ரயில்வே பதிலளித்து, பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படும் வீடியோக்களில் காணப்படும் சேதமடைந்த பெட்டிகள் பருவகால பராமரிப்புக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளால் தவறுதலாக அந்த பெட்டிகளில் வீரர்கள் ஏற்றப்பட்டதாகவும் ரெயில்வே விளக்கமளித்துள்ளது.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக BSF அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.






