என் மலர்
இந்தியா

உ.பி.யில் வாக்குகளை பிரித்து 16 தொகுதிகளில் பாஜக வெற்றிக்கு உதவிய பகுஜன் சமாஜ் கட்சி
- உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி பல இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
- பகுஜன் சமாஜ் 2024 தேர்தலில் வெறும் 9.39 சதவீத வாக்கையே பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி பல இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு 37 தொகுதிகளில் சமாஜ்வாதியும் 6 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக கூட்டணி 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் 16 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி அமைந்துள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அக்பர்பூர், அலிகார், அம்ரோஹா, பான்ஸ்கான், பதோஹி, பிஜ்னோர், தியோரியா, ஃபரூக்காபாத், ஃபதேபூர் சிக்ரி, ஹர்தோய், மீரட், மிர்சாபூர், மிஸ்ரிக், புல்பூர், ஷாஜஹான்பூர், உன்னாவ் ஆகிய 16 தொகுதிகளில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றி வித்தியாசத்தை விட பகுஜன் சமாஜ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது
இந்த 16 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றிருந்தால் பாஜக 226 இடங்களையும் பாஜக கூட்டணியாக 278 இடங்களையும் தான் வென்றிருக்கும்.
2014 மற்றும் 2019 தேர்தல்களில் முறையே 19.77% மற்றும் 19.42% வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஜ் 2024 தேர்தலில் வெறும் 9.39 சதவீத வாக்கையே பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வென்ற பகுஜன் சமாஜ் இந்த தேர்தலில் ஒரு தொகுதியை கூட வெல்லவில்லை. கடந்த முறை 5 தொகுதிகளை வென்ற சமாஜ்வாதி இம்முறை 37 இடங்களில் வென்றுள்ளது.
அலிகர் தொகுதியில் 15,647 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் சமாஜ்வாதி கட்சி தோற்ற நிலையில் அத்தொகுதியில் பகுஜன் சமாஜ் 1,23,929 வாக்குகள் பெற்றுள்ளது.
அம்ரோகா தொகுதியில் 28,670 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் தோற்ற நிலையில் அத்தொகுதியில் பகுஜன் சமாஜ் 1,64,099 வாக்குகள் பெற்றுள்ளது.






