என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்காவின் ஏகாதிபத்திய திமிர்.. வெனிசுலா அத்துமீறல் உலக ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் - பினராயி விஜயன்
    X

    அமெரிக்காவின் ஏகாதிபத்திய திமிர்.. வெனிசுலா அத்துமீறல் உலக ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் - பினராயி விஜயன்

    • உலக ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
    • வெனிசுலா மக்கள் காட்டும் மன உறுதி பாராட்டுக்குரியது.

    வெனிசுலாவை தாக்கி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்றது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறல் என கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.

    நேற்று நிகழ்வு ஒன்றில் அவர் பேசுகையில், "வெனிசுலா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. அமெரிக்க அரசு சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக, ஏகாதிபத்திய ஆணவத்துடன் நடந்து கொள்கிறது.

    ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்காமல், அதன் அதிபரைக் கைது செய்வது அமெரிக்காவின் அதிகாரத் திமிரையே காட்டுகிறது.

    அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையானது, உலகின் பிற நாடுகளில் அத்துமீறித் தலையிடும் அதன் நீண்டகால வரலாற்றையே மீண்டும் ஒருமுறை பிரதிபலிக்கிறது.

    இது ஒன்றும் புதிதல்ல; தனது விருப்பத்திற்கு மாறான ஆட்சிகளை அகற்றுவதே அமெரிக்காவின் வாடிக்கையாக உள்ளது.

    கடந்த காலங்களில் தனது சுயநலத்திற்காக அமெரிக்கா உருவாக்கிய போர்களாலும், ராணுவத் தலையீடுகளாலும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்பதை உலகம் மறக்காது.

    அதே போன்ற ஒரு ஆபத்தான சூழலைத் தான் இப்போது வெனிசுலாவிலும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது.

    ஒரு நாட்டின் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை மற்றொரு நாடு ராணுவ பலத்தைக் கொண்டு அகற்றுவது உலக ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.

    அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக வெனிசுலா மக்கள் காட்டும் மன உறுதி பாராட்டுக்குரியது.

    அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×