search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு: மோடி, கெஜ்ரிவால் இரங்கல்
    X

    டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு: மோடி, கெஜ்ரிவால் இரங்கல்

    • குழந்தைகள் நல மருத்துவ மையத்தில் இருந்த 12 குழந்தைகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
    • உடல் கருகியதால் சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    டெல்லி கிழக்கு பகுதியில் விவேக் விகார் என்ற இடத்தில் குழந்தைகள் நல மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை உள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனை 3 மாடிகளை கொண்டதாகும்.

    கடந்த 2 நாட்களில் அந்த மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்ட குழந்தை கள் பிறந்தன. மருத்துவமனையின் 2-வது மற்றும் 3-வது மாடிகளில் அந்த குழந்தை கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். 3 குழந்தைகளை நேற்று மாலை அவர்களது பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் 12 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் இருந்தனர்.

    நேற்று இரவு 11.20 மணிக்கு இந்த மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் 11.40 மணிக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் விவேக் விகார் பகுதிக்கு விரைந்து வந்தன.

    அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் பரவியது. தீயணைப்பு படை வீரர்கள் 2 கட்டிடங்களிலும் பரவிய தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். இதற்கிடையே குழந்தைகள் நல மருத்துவ மையத்தில் இருந்த 12 குழந்தைகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

    12 குழந்தைகளும் ஆம்புலன்ஸ் மூலம் கிழக்கு டெல்லியில் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த குழந்தைகளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் கருகியதால் சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    மற்ற 5 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினாலும் அவர்களது நிலையும் மோசமாக இருந்தது. அதில் ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவமனை கட்டிடம் முழுமையாக எரிந்து போனது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழந்தைகள் மருத்துவமனையின் கீழ்தளத்தில் ஏராளமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்து சிதறின. அங்கிருந்துதான் தீ விபத்து ஏற்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    இந்த தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில், "டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உருக்குகிறது. இந்த நம்பமுடியாத இக்கட்டான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அதே போல் இந்த தீ விபத்து தொடர்பாக டெல்லி முதலவர் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு நாங்கள் அனைவரும் துணை நிற்கிறோம். சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மற்றும் நிர்வாக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்திற்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அலட்சியத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×