என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயநாட்டில் ராகுல்காந்தியை எதிர்த்து சரிதாநாயர் போட்டி
    X

    வயநாட்டில் ராகுல்காந்தியை எதிர்த்து சரிதாநாயர் போட்டி

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்தும் போட்டியிடப் போவதாக அதிரடியாக சரிதாநாயர் அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi #Wayanad #SarithaNair
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 2011-ம் ஆண்டு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

    அப்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது.

    கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் மீது இந்த மோசடி புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

    சோலார் பேனல் மோசடி வழக்கில் தன்னை பலிகடா ஆக்கி விட்டதாகவும் இந்த திட்டத்தை நிறைவேற்ற தனக்கு உதவி செய்வதாக கூறி அப்போது முதல் மந்திரியாக இருந்த உம்மன்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ. ஹிபிஈடன் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறினார்.

    தொடர்ந்து கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பிறகு இந்த வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்தது. ஹிபிஈடன் உள்பட மேலும் பலர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எர்ணாகுளம் தொகுதியில் ஹிபிஈடன் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு சரிதாநாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எர்ணாகுளம் தொகுதியில் ஹிபிஈடனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்த அவர் அந்த தொகுதியில் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார்.

    மேலும் தேர்தல் விதிமுறைப்படி தன்மீது உள்ள வழக்குகள் பற்றியும் அவர் பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்தார்.


    இந்த நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்தும் போட்டியிடப் போவதாக அதிரடியாக சரிதாநாயர் அறிவித்துள்ளார். இன்று மனு தாக்கல் செய்யவும் அவர் முடிவு செய்துள்ளார்.

    ராகுலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவது ஏன்? என்பது பற்றி சரிதா நாயர் கூறியதாவது:-

    சோலார் பேனல் மோசடி வழக்கில் என்னை சிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் தலைவர்கள் பற்றியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அந்த கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு பல முறை இ-மெயில் மூலம் புகார் அனுப்பினேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் அவரிடம் இருந்து வரவில்லை.

    இந்த நிலையில் நான் பாலியல் புகார் கூறிய ஹிபிஈடனுக்கு எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. இதனால் எனது எதிர்ப்பை வெளிப்படுத்த வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட உள்ளேன்.

    என்னை மட்டும் குற்றவாளி ஆக்கி விட்டு குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை சமூகத்தில் சுதந்திரமாக நடமாடவிடுவதை ஏற்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கும் போது நானும் நிற்க முடியும் என்பதால் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi #Wayanad #SarithaNair
    Next Story
    ×