search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பேசிய காட்சி.
    X
    ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பேசிய காட்சி.

    வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவு

    வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. வெளியூர்காரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நாளை மறுதினம் 5-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    தி.மு.க.வில் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள், வெளிமாவட்ட பிரமுகர்களும் வேலூருக்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் 3 நாட்கள் பிரசாரம் செய்தனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் வீதம் 2 கட்டங்களாக பிரசாரம் செய்தார். 

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமிக்கு ஆதரவாக சீமான் சட்டசபை தொகுதி வாரியாக பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

    கடந்த 5-ந்தேதி தொடங்கிய வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 

    வேலூர் தொகுதியில் தங்கியுள்ள வெளியூர் காரர்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதை மீறி தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

    தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7500 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் வாக்குப்பதிவு முடிந்ததும் எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு நாளான 5-ந்தேதி 20 கம்பெனி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    வருகிற 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. அன்றே தேர்தல் முடிவு வெளியாகும். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் வரும் 11-ந்தேதியன்று வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×