என் மலர்
விருதுநகர்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து படுக்கை வசதிகளுடன் கூடிய தனியார் ஆம்னி பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. நள்ளிரவு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தது.
பந்தல்குடி புறவழிச்சாலையில் ஆம்னி பஸ் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி பஸ் கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். நள்ளிரவு நேரத்தில் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட விபத்தினால் இடிபாடுகளில் சிக்கி வெளியே செல்ல வழியின்றி பயணிகள் பேருந்தின் உள்ளே அலறி துடித்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னை ஆவடி பம்மல் தெருவை சேர்ந்த வேல்மணி (வயது 60) என்ற பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தால் மதுரை- தூத்துக்குடி 4 வழி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரேன் மூலம் விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்சை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் விபத்து குறித்து நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசுக்கு பெயர் பெற்ற சிவகாசி அருகே பூசாரிபட்டி என்ற அழகிய கிராமம் உள்ளது. முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள இந்த கிராமத்தில் அதிக எண்ணிக்கை உடைய 2 பெரிய குடும்பத்தினர் கூட்டாக வாழ்ந்து வருவது இந்த நவீன காலத்தில் தொடருகிறது.
இதில் பூசாரி நாயக்கர் என்ற குடும்பத்தில் 90 பேர் உள்ளனர். இவர்களில் 61 பேர் வாக்காளர்கள் ஆவார்கள். பெருமாள்சாமி என்பவரது குடும்பத்தில் 190 பேர் உள்ளனர். இவர்களில் 80 பேர் ஓட்டு போட தகுதியானவர்கள்.
இந்த 2 குடும்பத்தினரும் ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது ஒருவருக்கு மொத்தமாக ஓட்டு போட்டு வருவது தான் வழக்கமாக கொண்டுள்ளனர்.
தேர்தல் நாளன்று என்ன வேலையாக இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றாக சென்று ஓட்டு போடுவதை அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றனர்.
இது குறித்து பூசாரி நாயக்கர் குடும்பத்தின் தலைவர் வெடிமுத்து கூறியதாவது:-
நாங்கள் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக ஒரே குடும்பமாக வசித்து வருகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் ஒன்றாக கூடி கலந்து பேசி நமக்கு யார் நல்லது செய்வார்கள்? என பார்த்து ஓட்டு போடுவோம். இதற்காக நாங்கள் எந்த கட்சியிடம் இருந்தும் காசு, பணம் எதுவும் வாங்குவது கிடையாது.
யார் எங்கள் வீட்டுக்கு ஓட்டு கேட்டு வந்தாலும் அவர்களை மரியாதையுடன் வரவேற்போம். கட்சி பாகுபாடு எதுவும் பார்ப்பது கிடையாது.
எங்கள் குடும்பத்தில் வருகிற தேர்தலில் 17 பேர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். அவர்களும் இந்த தேர்தலில் ஓட்டு போட உற்சாகமாக உள்ளனர். அவர்களும் நாங்கள் சொல்கிறபடி தான் போட்டு போடுவதாக கூறி இருப்பது பெருமையாக உள்ளது. எப்போதுமே எங்கள் ஓட்டு விற்பனைக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெடிமுத்துவின் மருமகள் மகாலட்சுமி கூறுகையில், பணத்துக்காக் எந்த கட்சிக்கும் ஓட்டு போடமாட்டோம். எங்க வீட்டு பெரியவர் மாமா தான். அவர் தான் குடும்பத்துக்கு எல்லாம். அவர் சொல்கிறதை தான் நாங்க எல்லாரும் கேட்போம்.
பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக எந்த கட்சிக்கும் ஓட்டு போட சொல்ல மாட்டார். நம்முடைய விவசாயத்திற்கு யாரெல்லாம் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு போட சொல்வார்.
இந்த தேர்தலிலும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு என்றார்.
இதே குடும்பத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கூறும்போது, “நாங்கள் கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக இருப்பது பெருமையாக உள்ளது. அனைத்து வேட்பாளர்களும் எங்கள் வீடுகளை தேடி வரும்போது அதுவே எங்களுக்கு ஒரு கெத்தாக உள்ளது என்று கூறினார்.
இதேபோல் பெருமாள் சாமி குடும்பத்தினரும் தேர்தல் சமயத்தில் ஒன்றாக கலந்து பேசி பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அந்த சொல்லுக்கு மதிப்பு கொடுத்து ஓட்டு போட்டு வருகின்றனர்.
ஒரே கிராமத்தில் 2 குடும்பத்திலும் மொத்தம் 141 ஓட்டுகள் உள்ளதால் ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த 2 குடும்பத்தினர் ஓட்டுகளை குறிவைத்து அனைத்து வேட்பாளர்களும் இவர்களது வீடு தேடி செல்வது இன்றளவும் தொடர்கிறது.
வருகிற தேர்தலிலும் இவர்களின் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்ய அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களை தேடி செல்ல ஆரம்பித்து விட்டனர்.
2 குடும்பத்தினர் ஓட்டுகளை எப்படியும் பெற வேண்டும்? என்பதற்காக அரசியல் கட்சியினர் அவர்கள் வெளியில் எங்கே சென்றாலும் மரியாதையுடன் கைகூப்பி ஓட்டு கேட்டு வருவது வித்தியாசமாக உள்ளது.






விருதுநகர்-சிவகாசி செல்லும் சாலையில் ஆமத்தூர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலை உள்ளது.
இங்கு கலர் மத்தாப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிவாசியை சேர்ந்த விசாகன் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மாலை மத்தாப்பு தீக்குச்சிகளை காய வைப்பதற்காக தொழிலாளர்கள் அதனை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கருமருந்து உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தீ விபத்துபற்றி அறிந்ததும் தீயணைப்பு விரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 2 அறைகள் தீப்பிடித்து எரிந்து சேதமாயின.
இதில் வீராசாமி (வயது 64), புதுராஜா (54), நடராஜன் (50) மற்றும் முருகேசன் மனைவி பஞ்சவர்ணம் (54) ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். உடல் கருகிய நிலையில் அவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் புதுராஜா இறந்தார்.
மேலும் வீராசாமி, நடராஜன் ஆகியோரும் அடுத்தடுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பஞ்ச வர்ணத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் ஆலை உரிமையாளர் விசாகன் மற்றும் போர்மேன் துரைராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் துரைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது தாயார் மாரியம்மாள் (வயது 88). இவர் கால்வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த இருக்கன்குடி போலீசார் மாரியம்மாளின் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ரிசர்வ்லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த குருவையா (வயது 40) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், குருவையாவை கைது செய்தனர்.
ராஜபாளையம்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட குழு கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-,
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றனர்.
பட்டாசு ஆலைகளில் விபத்து தவிர்க்கப்பட வேண்டும். விபத்தை காரணம் காட்டி பட்டாசு ஆலைகளை மூட நேரிடும் போது பட்டாசு தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக ஏறிக் கொண்டே போகிறது. அதேபோன்று சமையல் எரிவாயு விலையும் அதிகமாக ஏறிக்கொண்டே போகிறது.
தாங்கள் வெற்றி பெற்றால் 6 சிலிண்டர் இனாமாக தருகிறேன் என்றும் மீதி ஆறு சிலிண்டருக்கு காசு தர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கூறிவருகிறார்.
விலை உயர்வை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசாங்கத்தை கண்டிப்பதற்கு பதிலாக, விலை ஏற்றத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதற்குப் பதிலாக, இதைக் கைவிட வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு சிலிண்டர் இனாமாக தருகிறோம் என்று கூறுவது அரசியல் நாகரிகம் ஆகாது.
தேர்தல் ஆணையம் தற்போது சுதந்திரமாக செயல்படவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. இதையும் நாங்கள் எதிர் கொள்வோம்.தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை செய்வதற்கு ஒரு மாத காலம் உள்ளது இதனால் எல்லாருக்கும் ஒரு அச்சம் உள்ளது .
இடைப்பட்ட காலத்தில் ஏதாவது சதி செய்வார்களோ என்ற எண்ணம் நிலவுகிறது. பாரதிய ஜனதா கட்சி எத்தகைய செயலையும் செய்யக்கூடிய கட்சியாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கூட்டும் கூட்டத்தில் இந்தக் கருத்துகளை நாங்கள் சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






