என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் ஊரீசு பள்ளியில் அரசு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு நடந்தது.
    வேலூர்:

    வேலூர் ஊரீசு பள்ளியில் அரசுத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது.

    இதற்கு பள்ளி தலைமை ஆசிரியரும், கண்காணிப்பாளருமான எபினேசர் முன்னிலையில் அலுவலர்கள் தேர்வு எழுதினர்.

    இந்த தேர்வுகள் 2 விதமாக நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட புத்தகங்களை பார்த்தும், புத்தகங்களை பார்க்காமலும் எழுதினர். இந்த தேர்வுகள் நேற்று தொடங்கியது. நாளையும் நடைபெற உள்ளது. 

    இன்று நடந்த தேர்வில் 90 அலுவலர்கள் கலந்து கொண்டு எழுதினர்.
    குடியாத்தம் நகராட்சி 31-வது வார்டில் இந்திய குடியரசு கட்சி சார்பில் திருநங்கை நிஷா (33) போட்டியிடுகிறார். வேட்பு மனுதாக்கல் செய்து வார்டுகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக திருநங்கை கங்கா போட்டியிடுகிறார். ஓல்டு டவுன் உத்திரமாதா கோவில் பின்புறமுள்ள பகுதியில் வசித்து வரும் கங்கா ஏற்கனவே சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் மனுதாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

    வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து கண்டிப்பாக வெற்றி பெறுவேன். மக்கள் நலப் பணிகளில் திறம்பட செயலாற்றுவேன் என்றார்.

    குடியாத்தம் நகராட்சி 31-வது வார்டில் இந்திய குடியரசு கட்சி சார்பில் திருநங்கை நிஷா (33) போட்டியிடுகிறார். வேட்பு மனுதாக்கல் செய்து வார்டுகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    வாணியம்பாடி நகராட்சி 20-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி போட்டியிடுகிறார்.

    வார்டுகளில் சென்று பிரசாரத்தை தொடங்கி ஓட்டு கேட்டு வருகிறார்.


    ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
    வேலூர்.

    வேலூர் மாநகர அ.தி.மு.க சார்பில் இன்று மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, பொருளாளர் மூர்த்தி, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் ஜனனீ பி.சதீஷ் குமார், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர் மற்றும் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர். 

    மனுவில் கூறியிருப்பதாவது:-

    நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி தொகுதிக்குட்பட்ட காட்பாடி ஒன்றிய தேர்தலில் தேர்தல் பொறுப்பாளரான வட்டார வளர்ச்சி அதிகாரி ஆளும் தி.மு.க அரசுக்கு உதவிடும் நோக்கத்தோடு அ.தி.மு.க வேட்பாளரின் மனு பரிசீலனையின்போது வேண்டும் என்றே வாபஸ் மனுவில் கையெழுத்து பெற்று வீன் கழகம் ஏற்படுத்தி அ.தி.மு.க.வினர் மீது ஆளும் கட்சியினர் அழுத்தத்தோடு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மேலும் தற்போது நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவின்போதும், மனு பரிசீலனையின்போதும் ஆளும் தி.மு.க.வினர் அ.தி.மு.க. வேட்பாளரின் மனுவில் குளறுபடிகள் நடத்திட திட்டம் தீட்டியுள்ளனர்.

    தங்களின் கீழ் பணிபுரியும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை தாங்கள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற பணிக்க வேண்டும். 

    மேலும் நேற்று அண்ணா உருவ சிலைக்கு நாங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரான தங்களிடம் முறையான அனுமதி பெற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

    ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் கார்த்திகேயன் ஆகியோர் எந்த ஒரு அனுமதியின்றி பூட்டியிருந்த இரும்பு கதவின் பூட்டு உடைத்து தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி சிலைக்கு மாலை அணிவித்தனர். 

    எனவே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தனித்துப் போட்டி மாவட்ட செயலாளர் தகவல் தெரிவித்தார்.
    வேலூர்:

    தி.மு.க. கூட்டணியில் போதிய இடம் கிடைக்காததால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தயாநிதி தெரிவித்தார்.

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் பல்வேறு கட்டங்களாக அறிவித்தது.

    வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும்.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல கட்சிகளுக்கு வார்டு ஒதுக்குவதில் கடும் இழுபறி காணப்பட்டது.

    குறிப்பாக கூட்டணி கட்சிகள் கேட்ட வார்டுகளை வழங்குவதில் சிக்கல் நிலவியது. அதனால் கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட மற்றும் போதிய வார்டு ஒதுக்க முடியாத நிலை காணப்பட்டது. 

    இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் போதிய இடம் கிடைக்காததால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    இது குறித்து அக்கட்சியின் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தயாதிநிதி கூறுகையில்:-

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு வேலூர் மாநகராட்சியில் 2 வார்டும், குடியாத்தம் நகராட்சியில் 2 வார்டும் என்று 4 வார்டுகள் ஒதுக்க வேண்டும்.

    அதேபோன்று திருப்பத்தூர், ஆம்பூர் நகராட்சிகளில் தலா ஒரு வார்டும், வாணியம்பாடி நகராட்சியில் 2 வார்டும் என்று 4 வார்டுகள் வழங்க வேண்டும் தி.மு.க. கட்சியிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் 2 மாவட்டங்களிலும் போதிய இடம் கிடைக்கவில்லை. 

    அதனால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுகுறித்து கட்சியின் மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.

    வேலூர் மாநகராட்சியில் 12, 23, 58 ஆகிய வார்டுகளிலும், குடியாத்தம் நகராட்சியில் 23, 36 ஆகிய வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    மேலும் வேலூர் மாநகராட்சி 19-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் மோகனவள்ளிக்கு ஆதரவு அளிக்கிறோம். இதேபோன்று திருப்பத்தூர் நகராட்சியில் 23 வார்டிலும், ஆம்பூரில் 34-வது வார்டிலும், வாணியம்பாடி நகராட்சியில் 26,36-வது வார்டிலும் போட்டியிடுகிறோம். 

    வேலூர் மாவட்டத்தில் 3 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மனுதாக்கல் செய்ய உள்ளனர் என்று தெரிவித்தார்.
    மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று வேலூர் மாநகராட்சியில் வேட்பாளர்கள், தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    வேலூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மனு தாக்கல் தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு 10 வார்டுகளுக்கு ஒரு மனுத்தாக்கல் அலுவலகம் என 6 இடங்களில் மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    நேற்று ஏராளமான அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது தொண்டர்கள், ஆதரவாளர் களுடன் மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர். காட்பாடி தாராபடவேட்டில் உள்ள 1-வது மண்டல அலுவலகம் முன்பாக காட்பாடி வேலூர் சாலையில் தொண்டர்கள் குவிந்தனர்.

    இதனால் சித்தூர் பஸ் நிலையத்தில் இருந்து காட்பாடி ரெயில் நிலையம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். போலீசார் தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர். இன்றும் அதிகளவில் கூட்டம் அங்கு இருந்தது.

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள், நகராட்சி பேரூராட்சிகளுக்கு மனுத்தாக்கல் மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, காங்கிரஸ் தே.மு.தி.க உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்தபடி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையிலேயே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குறிப்பாக 1-வது மண்டல அலுவலகம் உள்ள காட்பாடி வேலூர் சாலை 3&வது மண்டல அலுவலகம் உள்ள வேலூர் அண்ணா சாலை, புதிய மாநகராட்சி அலுவலகம் உள்ள இன்வெண்டரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    சாலையில் நின்றிருந்த தொண்டர்களை போக்குவரத்து இடையூறு இல்லாமல் நிற்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் தொண்டர்கள் போலீசாரின் அறிவுரையை ஏற்காமல் நின்றதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவதி அடைந்தனர். கூட்டம் அதிளவில திரண்டதால் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்தனர். கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் தொண்டர்கள் முக கவசம் அணியாமல் கூட்டமாக குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து அமிர்தி வன உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.
    வேலூர்:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா 17 நாள்களுக்கு பிறகு நேற்று  மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனடிப்படையில், பண்டிகை நாட்கள், வார விடுமுறை நாட்கள், வெள்ளிக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மேலும், கொரோனா அச்சம் காரணமாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது. அதேசமயம், வேலூர் மாவட்டம், அமிர்தி வன உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில், அமிர்தி வனஉயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த பூங்காவையும் காலவரையின்றி மூட மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், கடந்த மாதம் 17-ந் தேதி முதல் அமிர்தி வனஉயிரியல் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது.

    இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த வாரம் முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, அமிர்தி வனஉயிரியல் பூங்கா 17 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    வேலூர்:

    காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொண்டனர்.

    இன்று 2-வது தவணை தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டக்கல்வி அலுவலர் த.சம்பத்து தலைமையில் பள்ளி உதவித்தலைமையாசிரியர் டி.என்.ஷோபா, ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    10, 11, 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் என மொத்தம் 550 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    வேலூர் மாநகராட்சியில் 46 வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் மனு தாக்கல் செய்யபட்ட நிலையில் கட்சி தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் தொடங்கியது. 

    வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் மனுத் தாக்கல் செய்வதற்காக காட்பாடி மண்டல அலுவலகம் மாநகராட்சி அலுவலகம் புதிய மாநகராட்சியில் 3 இடங்கள் மற்றும் சத்துவாச்சாரி மண்டல அலுவலகம், 4-வது மண்டல அலுவலகம் என 6 இடங்களில் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கொரோனா தோற்று பரவல் காரணமாக அதிக மக்கள் கூடுவதை தடுக்கும் பொருட்டு 6 இடங்களில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சனி ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை என்பதால் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க மற்றும் சுயேட்சைகள் என 36 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பாளர்கள் பட்டாசு வெடித்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். 

    இதனால் மனுத்தாக்கல் நடைபெற்ற அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
    ஓடும் பஸ்சில் மாணவர்கள் படியில் தொங்கி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் ஆபத்தை உணராமல் அரசு பஸ்சில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

    வெட்டுவானத்தில்  இருந்து பள்ளிகொண்டா மார்க்கமாக வேலூர்  செல்லும் அரசு பஸ்சில், இருபுறமும் உள்ள படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
     
    சிலர் ஆபத்தை உணராமல் ஜன்னல் கம்பியை பிடித்தவாறு ஓடும் பஸ்சில் சாகசம் செய்தனர்.
    படியில் மாணவர்களை பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அரசு  டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். 

    அதோடு காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படியில் பயணம் செய்யக்கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். ஆனால்,  பள்ளிகொண்டா மார்க்கமாக செல்லும் அரசு பஸ்சில்  மாணவர்களை படியில் தொங்கியவாறு பயணிக்க  அனுமதித்துள்ளனர்.

    விபரீதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, மாணவர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும் என கூறும் பொது மக்கள், மாணவர்களுக்காக கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

    படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை என்றும், எப்போதும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனதில் நிறுத்த வேண்டும் என போலீசாரும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
    குருவராஜபாளையத்தில் குருமாவில் அரணை கிடந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    வேலூர்:

    ஒடுகத்தூரை அடுத்த குருவராஜபாளையம் பஸ்நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் கடந்த 31-ந் தேதி மகமதுபுரத்தை சேர்ந்த 4 பேர் சாப்பிட்டனர். அப்போது பரோட்டாவிற்கு வழங்கிய குருமாவில் அரணை வெந்த நிலையில் கிடந்தது. 

    அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் குருவராஜபாளையத்தில் இயங்கும் ஓட்டல்களில் திடீரென ஆய்வு செய்தனர். 

    அப்போது குருமாவில் அரணை கிடந்த ஓட்டல் உள்பட 2 ஓட்டல்கள் சுகாதாரம் இன்றி இயங்கியது தெரிய வந்தது. அதையடுத்து அந்த 2 ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

    மேலும் 15 நாட்களுக்குள் சுகாதாரமான முறையில் ஓட்டல் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஓட்டலுக்கு சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
    குடியாத்தத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்த வேலூர் ரவுடி கைது செய்யப்பட்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் இவர் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் அருகே உள்ள முனாப்டிப்போ பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். 

    அப்போது அவரை  வழிமறித்து வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றார்.  இதுகுறித்து சந்தோஷ்குமார் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    அப்போது குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம்  சோதனை செய்த போது  ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது.

    விசாரணையில் அவர் வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் என்ற சசி (வயது 33) என தெரிய வந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது சந்தோஷ்குமாரிடம் பணம் பறித்ததும் இவர்தான் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

    சசிகுமார் வேலூரில் பிரபல ரவுடியான குப்பன் கூட்டாளி என கூறப்படுகிறது. சசிகுமார் மீது வேலூர் வடக்கு, தெற்கு, தாலுகா, சத்துவாச்சாரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, தகராறு என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. 

    பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகுமார் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வந்த மறுநாளே வழிபறியில் ஈடுபட்டுள்ளார்.

    இதுதொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் நெரிசலை குறைக்க பழைய பஸ் நிலையத்தில் பார்க்கிங் வசதி, லாங்கு பஜார் தரைகடைகள் பழைய மீன் மார்க்கெட்டுக்கு மாற்றப்படும் என டி.ஐ.ஜி. கூறினார்.
    வேலூர்:

    வேலூர் லாங்குபஜார், மண்டிதெரு உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் இன்று காலை நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து டி.ஐ.ஜி. ஆனி விஜயா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதாக புகார்கள் வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

    இதற்காக மண்டி தெரு, லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தேன். 

    லாங்குபஜார் பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. அங்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு கடைக்கு செல்கின்றனர். 

    எனவே வாகனங்களை அங்கு நிறுத்தாமல் இருக்க வேலூர் பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை வாகன நிறுத்தும் இடமாக மாற்றப்பட உள்ளது.

    தற்போது புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் பாதியளவு வரத்து குறையும். 
    அதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை வாகன நிறுத்துமிடமாக மாற்றப்படும்.

    சாரதி மாளிகை, வேலூர் கோட்டை பகுதிகளில் பலர் ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். 

    இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு ஆட்டோ டிரைவர்களை அழைத்து அவர்களுக்கு இது குறித்து அறிவுரை வழங்கப்பட உள்ளது. 

    மேலும் பழைய பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் உள்ளே வரும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    லாங்குபஜார் தரை கடைகள் பழைய மீன் மார்க்கெட் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் லாங்கு பஜார் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    கிரீன் சர்க்கிள் அகலம் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் போக்குவரத்து நெரிசல் அங்கு குறையும்.

    வேலூர் மக்கான் சிக்னல், காமராஜர் சிலை சந்திப்பு, நேஷனல் தியேட்டர் சந்திப்பு பகுதிகளில் மாலை நேரங்களில் (பீக் அவர்ஸ்) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த மாற்றம் காலை வேளையிலும் செய்யலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    ×