என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று குவிந்த அரசியல் கட்சியினர் கூட்டம்.
மனுத்தாக்கல் கடைசி நாள் வேலூர் மாநகராட்சியில் வேட்பாளர்கள் குவிந்தனர்
மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று வேலூர் மாநகராட்சியில் வேட்பாளர்கள், தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேலூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மனு தாக்கல் தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு 10 வார்டுகளுக்கு ஒரு மனுத்தாக்கல் அலுவலகம் என 6 இடங்களில் மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று ஏராளமான அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது தொண்டர்கள், ஆதரவாளர் களுடன் மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர். காட்பாடி தாராபடவேட்டில் உள்ள 1-வது மண்டல அலுவலகம் முன்பாக காட்பாடி வேலூர் சாலையில் தொண்டர்கள் குவிந்தனர்.
இதனால் சித்தூர் பஸ் நிலையத்தில் இருந்து காட்பாடி ரெயில் நிலையம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். போலீசார் தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர். இன்றும் அதிகளவில் கூட்டம் அங்கு இருந்தது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள், நகராட்சி பேரூராட்சிகளுக்கு மனுத்தாக்கல் மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, காங்கிரஸ் தே.மு.தி.க உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்தபடி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையிலேயே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக 1-வது மண்டல அலுவலகம் உள்ள காட்பாடி வேலூர் சாலை 3&வது மண்டல அலுவலகம் உள்ள வேலூர் அண்ணா சாலை, புதிய மாநகராட்சி அலுவலகம் உள்ள இன்வெண்டரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையில் நின்றிருந்த தொண்டர்களை போக்குவரத்து இடையூறு இல்லாமல் நிற்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் தொண்டர்கள் போலீசாரின் அறிவுரையை ஏற்காமல் நின்றதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவதி அடைந்தனர். கூட்டம் அதிளவில திரண்டதால் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்தனர். கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் தொண்டர்கள் முக கவசம் அணியாமல் கூட்டமாக குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Next Story






