என் மலர்tooltip icon

    வேலூர்

    ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வருகிற 16-ந் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவம் நடக்கிறது.
    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41&வது ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 18&-ந்தேதி வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  4-ந்தேதி மாலை 6 மணிக்கு  கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் உற்சவமும், 5-ந்தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடக்கிறது. 

    முதல் நாளான 6-ந்தேதி காலை துவஜாரோகணம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு  அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 7,8,9,10-ம் ஆகிய தேதிகளில் காலையில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சந்திர சேகரர்  புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 

    11-ந்தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும், 12-ந்தேதி காலையில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடக்கிறது.

    13-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 14-&ந்தேதி காலையில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடும், புருஷா மிருக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 

    15ந்தேதி காலையில் நடராஜருக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், மாலையில் அவரோகணம் கொடி இறக்கமும், ராவணேஸ்வரர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 

    16-ந்காலையில் பஞ்சப்ராகார உத்ஸவம் கோட்டையை சுற்றி சுவாமி வலம் வருதல், இரவு ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவம், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கும் நடைபெறும். 17-ந் தேதி விடையாற்றி உற்சவம், 18-ந் தேதி உற்சவ சாந்தி அபிஷேகமும் நடக்கிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    காட்பாடி டெல் வளாகத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர் களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. 

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடிக்காண சான்றிதழ்களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். 

    அவர் பேசியதாவது:-

    நான் இருக்கும் வரை காட்பாடி தொகுதிக்கு ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். கிராமப்புறங்களில் இருந்து மாணவர்கள் வேலூரில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்குவதற்காக வள்ளிமலையில் விரைவில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும். 

    பொன்னையில் விரைவில் அரசு ஆஸ்பத்திரியும், விளையாட்டு மைதானம் கொண்டு வரப்படும். காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 100 ஏக்கர் தேர்வு செய்யப்பட உள்ளது. 

    இதேபோல் காட்பாடியில் உள்ள டெல் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் அதில் புதியதாக தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்பாடியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். 

    முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி. நீங்கள் வைத்த நகைக்கான அசல் மற்றும் வட்டி இல்லாமல் உங்களிடமே பத்திரமாக திருப்பித் தரப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா பேசினார்.
    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போக்சோ சட்டம் குறித்து போலீசாருக்கான பயிலரங்கம் இன்று நடந்தது. 

    வேலூர் சரக டி.ஐ.ஜி.ஆனி விஜயா தலைமை தாங்கினார். போக்சோ சிறப்பு நீதிபதி கலைப்பொன்னி, அரசு வழக்கறிஞர் சந்தியா, தடய மருந்தியல் துறை உதவிப் பேராசிரியை கலைச்செல்வி, ஓய்வு பெற்ற தடயவியல் உதவி இயக்குனர் பாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    டி.ஐ.ஜி ஆனி விஜயா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகிறது. 

    இதுகுறித்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு போலீசார் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும். 

    அப்போதுதான் அவர்கள் தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வார்கள். இவ்வாறு பேசினார். 

    போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.
    வேலூரில் எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் சின்ன அல்லாபுரம் பலராமன் முதலியார் தெருவை சேர்ந்தவர் துரைவர்மா (வயது49) டோல்கேட் அருகே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.

    இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகள் மோகன பிரீத்தி (13), மகன் அவினாஷ் (10). மோகன பிரீத்தி போளூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தந்தை வீட்டிற்கு வந்தார்.

    துரைவர்மா எலக்ட்ரானிக் பைக் மற்றும் பெட்ரோல் பைக் ஒன்றும் வைத்திருந்தார். எலக்ட்ரானிக் பைக் பேட்டரிக்கு இரவு நேரங்களில் சார்ஜ் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இவரது வீடு மிகவும் குறுகிய அறைகளை கொண்டதாகும். இந்த வீட்டில் ஜன்னல்கள் எதுவுமில்லை. நேற்று இரவு பைக்குகளை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார்.

    அவினாஷ் அதே தெருவில் உள்ள அவரது அத்தை வீட்டுக்கு சென்று விட்டார். துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியும் வீட்டில் இருந்தனர். இரவு எலக்ட்ரானிக் பைக் பேட்டரி சார்ஜ் போடுவதற்கு துரை வர்மா மின் இணைப்பு கொடுத்தார். பைக்கில் ஜார்ஜ் ஏறிக்கொண்டிருந்தது.

    இதனையடுத்து அவரும் அவரது மகளும் வீட்டில் உள்ள அறையில் படுத்து தூங்கினர்.

    தொடர்ந்து சார்ஜ் ஏறிக்கொண்டே இருந்ததால் எலக்ட்ரானிக் பைக் பேட்டரி அதிக அளவில் சூடானதாக தெரிகிறது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்து சிதறியது.

    மேலும் பைக் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பைக்கும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் குறுகிய வாசலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மளமளவென காட்டுத் தீ போல எரிந்தன.

    சத்தம் கேட்டு கண்விழித்த துரைவர்மா மற்றும் அவரது மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முயன்றனர்.

    ஆனால் வாசலிலேயே இருந்த பைக்குகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதனால் அறைக்குள் நின்று திணறிக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் கூச்சலிட்டனர்.

    அதே நேரத்தில் எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்ததால் வீடு முழுவதும் உள்ள மின் ஒயர்கள் எரிந்தன. வீட்டில் இருந்த கட்டில் நாற்காலி போன்ற பொருட்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

    சிறிய அறை என்பதாலும் வீட்டில் ஜன்னல் இல்லை என்பதாலும் வீடு முழுவதும் புகை மூட்டம் எழுந்தது. இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    கண் விழிக்க முடியாத அளவிற்கு புகை மண்டலம் இருந்ததால் துரைவர்மா உயிர் பிழைப்பதற்காக அவரது மகளை அழைத்துக்கொண்டு வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார். கதவை அடைத்தபடி இருவரும் உள்ளே அமர்ந்திருந்தனர்.

    ஆனால் வீடு முழுவதும் எழுந்த புகை மண்டலம் கழிவறைக்குள் புகுந்தது. அங்கிருந்த துரைவர்மா, மோகன பிரீத்தி இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அமர்ந்த நிலையிலேயே இறந்தனர்.

    அவர்களது வீட்டிலிருந்து புகை வெளியேறியது. பக்கத்து வீட்டிற்குள் புகை புகுந்தது. அங்கிருந்தவர்கள் கண்விழித்து வெளியே ஓடி வந்து பார்த்தனர்.

    அப்போது துரைவர்மாவின் வீட்டில் இருந்து பயங்கர புகை எழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாகாயம் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.ஆனால் அதற்குள் 2 பைக், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    புகை மண்டலம் குறைந்தவுடன் போலீசார் வீட்டுக்குள் சென்றனர். கழிவறையில் சென்று பார்த்தபோது அங்கு துரைவர்மா அவரது மகள் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

    இதனைக் கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    வேலூர் சைதாப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    வேலூர் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 55) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லதா 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.

    இவர் நேற்று வழக்கம்போல் ஆட்டோ ஓட்டி விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். கைகால் முகம் கழுவிவிட்டு வீட்டு மாடியில் உள்ள பால்கனியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்து இருந்தார். 

    அப்போது இருமல் வந்ததால் தும்மினார்.எதிர்பாராதவிதமாக மேலே இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் சுயநினைவை இழந்தார்.உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் யூரியா பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். 

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட வேளாண் அலுவலர் மகேந்திர பிரதாப் தீக்சித் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் யூரியாவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் அதனை விற்பனை செய்பவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். 

    மேல் அரசம்பட்டு ஆற்றில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு முறைகேடு இல்லாமல் மானிய விலையில் டிராக்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மொபைல் வேன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    ஊசூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்கள் பலர் வேலைக்கு செல்வதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. 

    விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வரும் 2 மாதங்களுக்கு 100 நாள் வேலை திட்ட பணிகளில் யாருக்கும் வேலை வழங்கக்கூடாது. அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    காட்பாடியில் விலை உயர்ந்த பைக்குகளை திருடிய சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    காட்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக விலை உயர்ந்த பைக்குகளை கும்பல் ஒன்று திருடி வந்தனர்.

    காட்பாடி காந்திநகர், தனியார் பல்கலைக்கழக பகுதிகளில் நிறுத்தப்பட்ட விலை உயர்ந்த பைக்குகள் திருடு போனது. இதுகுறித்து புகாரின் பேரில் காட்பாடி மற்றும் விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் மாவட்ட எஸ்.பி.சிறப்புபடை சப்&இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் விருதம்பட்டு சில்க் மில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பைக்கில் வந்தனர். அவர்களை மடக்கி போலீசார் விசாரணை நடத்தினர். 

    அவர்கள் முன்னுக்குப்பின் பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அதில் ஒருவர் காட்பாடி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 26) என்பதும் மற்ற 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக காட்பாடி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் விலை உயர்ந்த பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி உள்ளனர்.

    அந்த வாகனங்களை காட்பாடியில் உள்ள அவரது நண்பர் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். இதை அறிந்த போலீசார் பதுக்கி வைத்திருந்த 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    மணிவண்ணன் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறுவர்கள் இருவரும் வேலூர் ஜெயில் அருகே உள்ள பாஸ்டல் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொள்ளை கற்பழிப்பு, செயின் பறிப்பு, வாகன திருட்டு ஆகியவற்றில் சிறார்கள் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருவலம் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள கம்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. 

    இவரது மனைவி வசந்தா (வயது 55), கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் அங்குள்ள நிலத்திற்கு தனியாக நடந்து சென்றார். 

    அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் வசந்தாவை மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த செயினை கழற்றி தருமாறு மிரட்டினார், 

    அதற்கு வசந்தா மறுத் துள்ளார். உடனே அந்த நபர் வசந்தாவை தாக்கி செயினை பறித்து செல்ல முயன்றார். அப்போது வசந்தா செயினை பிடித்து கொண்ட தால் செயினின் ஒருபகுதி (5 பவுன்) மர்மநபர் கையில் சிக்கி உள்ளது. அந்த நகையு டன் மர்ம நபர் தப்பி ஓடினார்.

    இதனால் வசந்தா கூச் சல் போட்டார். இதனையடுத்து அப்பகுதி யில் வேலை செய்து கொண் டிருந்தவர்கள், செயின் பறித்து சென்ற நபரை பிடித்து, திருவ லம் போலீசில் ஒப்படைத்த னர்.

    போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் கலவை அருகே உள்ள சென்னசமுத் திரம் பகுதியை சேர்ந்த பாபு (42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். பிச்சாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. லதா, துரை, பன்னீர்செல்வம், குமார், சிவராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக தனி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

    அணைக்கட்டு மலைப் பகுதியில் தொடங்கப்பட்ட 5 பள்ளிகளில் 15 ஆண்டுகளாக சத்துணவு திட்டம் செயல்படுத்த படாமல் உள்ளது. அதனை உடனே தொடங்க வேண்டும்.

    அந்தப் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு லஞ்சம் வாங்காமல் அடையாள அட்டை வழங்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்.

    கே.வி. குப்பம், விரிஞ்சிபுரம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். மேல் அரசம்பட்டு அணைக்கட்டும் திட்டத்தை கட்டிமுடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்த காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் இன்று எருதுவிடும் விழா நடந்தது. இதில் பங்கேற்க நூற்றுக்கணக்கான காளைகளை கொண்டு வந்தனர். மூஞ்சூர் பட்டை சேர்ந்த அசுரன் என்ற காளையை மாடு விடும் விழாவில் பங்கேற்க செய்ய அழைத்து வந்தனர்.

    முன்னதாக காளையை விழா நடைபெறும் தெருவில் சுற்றிக் காண்பித்தனர். அப்போது கட்டுகளிலிருந்து அவிழ்த்து காளை அங்கிருந்து பாய்ந்து ஓடியது.

    வேப்பம்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் காளை ஓடியது. அப்போது அங்கு சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் காளையின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.

    இறந்த காளை அசுரன் பல்வேறு பரிசுகளை வென்று அசத்தியுள்ளது. அது துரதிஷ்டவசமாக ரெயிலில் அடிபட்டு இறந்ததை கண்டு உரிமையாளர்கள் கதறி அழுதனர்.

    காளையை மீட்டு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    வேலூரில் கால்வாய் சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் சைதாப் பேட்டை 36-வது வார்டு நல்லெண்ண பிள்ளை தெருவை சேர்ந்த பொதுமக்கள் பி.டி.சி ரோட்டில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

     நல்லெண்ண பிள்ளை  தெருவில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை அள்ளுவது இல்லை. கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயில் உள்ள கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் கால்வாய் மேல் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். 

    கால்வாயை சீரமைக்காததால் மழைக் காலங்களில் மலையில் இருந்து மழைநீருடன் கழிவுநீர் கலந்து  வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

    இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயை சீரமைக்க உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
    காட்பாடி அருகே அடிப்படை வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே தேவ ரிஷி குப்பத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது.

    கடந்த 2017&ம் ஆண்டு பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அந்த கட்டிடங்கள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் 1 முதல் 6-ம் வகுப்பு வரை 150 மாணவ மாணவிகளும், 7 முதல் 10-ம் வகுப்பு வரை 120 மாணவ மாணவிகளும் ஒரே கட்டிடத்தில் படித்து வருகின்றனர். 

    பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் மாணவ மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து அதிகாரி களுக்கு பலமுறை தகவல் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை என கூறப்படுகிறது.

    இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் குடியாத்தம் காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்த கே வி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
    ×