என் மலர்tooltip icon

    வேலூர்

    • மயங்கி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரம் நடேசமுதலியார் தெருவை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி செல்வி (வயது 55). இவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல அலுவலத்திற்கு பணிக்கு வந்தார். பின்னர் அவர் 3-வது தளத்தில் உள்ள தன் பணி இடத்துக்கு சென்றார். அப்போது வளாகத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரியவந்தது. இதனிடையே சத்துவாச்சாரி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து 108 ஆம்புலன்சில் உடலை அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மயங்கி விழுந்ததால் பரபரப்பு
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் இருந்து ஆற்காடு ரோட்டிற்கு வரும் வாகனங்கள் பழைய பஸ் நிலையத்திற்கு உள்ளே வந்து மண்டி தெரு வழியாக செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு கணியம்பாடி அருகே உள்ள கத்தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 35). என்பவர் மினி கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தார்.

    அவர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தவுடன் லாரியை பின்னோக்கி தாறுமாறாக ஓட்டினார். இதில் பஸ் நிலையத்தை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது லாரி மோதி சேத மடைந்தன.

    இதனை கண்ட ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்ச லிட்டனர். அப்போதும் லாரி டிரைவர் கண்டு கொள்ளாமல் அங்கும் இங்குமாக நகர்த்தினார்.இதனால் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் லாரி டிரைவரை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த லாரி டிரைவர் பழனி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இந்த களேபரம் நடந்து முடியும் வரையிலும் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட வில்லை. லாரி டிரைவர் மயக்கமடைந்தால் அவரை தாக்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் பழனியை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போதுதான் அவர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் நேற்று இரவு பழைய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌.

    • பணிக்கொடை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
    • 15 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம், பிச்சனூர் திருமுருக கிருபானந்த வாரியார் திருமண மண் டபத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியா. ளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட முதல் மாநாடு நடந்தது.

    மாநாட்டிற்கு வேலூர் மாவட்டத் தலைவர் செல்வநாயகி தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் மகாலட்சுமி வரவேற்றார். கவுரவத் தலைவர் ஜெம்மா டிசில்வா, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை செயலாளர் சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் வேலுசுவாமி ஆகியோர் பேசினர்.

    இதில் மாநில தலைவர் பத்மம்மா, துணைத் தலை வர் மரியம்மா, மாநில பிரச்சார செயலாளர் விஜயா, மாநில பொருளா ளர் கோமளாதேவி, மாவட்ட அமைப்பு செய லாளர் உமா, சின்னசேலம் மாவட்ட தலைவர் காந்தி மதி, செயலாளர் அம்பிகா, வேலூர் மாவட்ட பொருளாளர் லோகநாயகி உட் பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட வேலைநேரம் காலை 8.30 மணி முதல் 4 மணி வரை என்றுள்ளது.

    இருப்பினும் கலெக்டரால் அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுகின்ற பிற துறைகளைச் சேர்ந்த பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

    இவ்வளவு உழைப்பை கொடுக்கும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களது பணி இதுவரை நிரந்தரப் படுத் தப்படவில்லை. அனைவரும் பகுதிநேர அரசுப் பணியாளர்களாக இருப்பது வேதனைக்குரியதாகும். எனவே அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரப்பணியாளர்களாக அறிவித்து 2 காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் உதவியா ளர்கள் பணியில்இருந்து ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை தொகையை உயர்த்தி பணியாளர்களுக்கு ரூ.10 லட் சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உட்பட 15 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாநில பொதுச்செயலாளர் நளினி நன்றி கூறினார்.

    • முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
    • நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் இரு நபர்களுக்கிடையே 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்கவேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது.

    நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும்.

    பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திடல்வேண்டும். இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.

    அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால்

    கொரோனா நோய்தொற்று ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் காய்ச்சல், தொண்டைவலி, நாவில் ருசி தெரியாமல் இருந்தால் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    • தனது கண் முன்பே மகன் இறந்ததைக் கண்டு தாய் அலறி துடித்தார்.
    • ஒரே மகனை இழந்த தம்பதிக்கு அரசு உதவ வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரம் அடுத்த பாலமதிரோடு முருகன் நகரைச் சேர்ந்தவர் மணி விவசாயி. இவருடைய மனைவி ரேவதி தம்பதியின் ஒரே மகன் தினேஷ் குமார் (வயது 14) சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை ஒட்டியே வீடு உள்ளது. நிலத்தில் கீரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ளனர்.

    இதில் விளையும் கீரை காய்கறிகளை ரேவதி விற்பனை செய்துவந்தார். இன்று காலை நிலத்தில் அகத்திக்கீரை அறுத்து கட்டினர். அதனை ஒரு சைக்கிளில் வைத்துக்கொண்டு தினேஷ்குமார் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார். அவரது தாய் ரேவதி பின்னால் கீரை கட்டை பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் விவசாய நிலத்தில் நேற்றிரவு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அவர்கள் கவனிக்கவில்லை.

    சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்த தினேஷ்குமார் மின் கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. மேலும் சைக்கிளை பிடித்துக் கொண்டு வந்த ரேவதியையும் மின்சாரம் தாக்கியது.

    இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தனது கண் முன்பே மகன் இறந்ததைக் கண்டு அலறி துடித்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பலியான மாணவன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு வேலூர் மாநகர பகுதியில் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்று வீசியது.இதில் மின்கம்பி அறுந்துள்ளது. மின்கம்பிகள் அறுந்து விழாமல் இருக்கும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இது தொடர்பாக மின் அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். ஒரே மகனை இழந்த தம்பதிக்கு அரசு உதவ வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அதன் அருகில் செல்ல வேண்டாம்.தொடக்கூடாது என மின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். தொண்டர்களும், உற்சாகமாக இருந்தனர்.

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) மற்றும் 21-ந்தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு வருகை தருவதாக இருந்தது.

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் தனியார் ஆஸ்பத்திரி திறப்பு விழா, வேலூர் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் 3 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 3 மாவட்டங்களிலும் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். தொண்டர்களும், உற்சாகமாக இருந்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரது வருகை குறித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • வழக்குப்பதிவு செய்தால் எதிர்காலம் பாதிக்கும்
    • வேலூர் ஏ.டி.எஸ்.பி அறிவுரை

    வேலூர்:

    அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வடமாநிலங்களில் ரெயில் எரிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராணுவ மற்றும் போலீஸ் பயிற்சி மைய பயிற்சியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

    இதில் ஏ.டி.எஸ்.பி முத்துசாமி பேசியதாவது:-

    அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கு செல்லும் இளைஞர்களை தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்தால் அவர்களுடைய எதிர்காலம் கடுமையாக பாதிக்கும். இளைஞர்கள் தங்களுடைய எதிர்காலத்தை நினைவிற்கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும் என்றார்.

    • போலீஸ் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் அதிகரித்து வருகிறது.
    • தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கையை 40ஆக உயர்த்த வேண்டும்.

    வேலூர்:

    இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு காலத்தில் பல ஆண்டுகள் போராடியும், அதன்மூலம் 13 பேரை பலிகொடுத்தும் உருவாக்கப் பட்டதுதான் வேலூரை தலைமையிடமாகக் கொண்ட அம்பேத்கர் மாவட்டம். அவ்வாறு 13 பேரை பலிகொடுத்து பெறப்பட்ட மாவட்டத்தின் பெயரை காலப்போக்கில் இழந்துவிட்டோம்.

    தற்போது வேலூரில் புதிய பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இவ்விழாவில் இழந்துபோன மாவட்டத்தின் பெயரை மீட்டுத்தரும் வகையில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டி முதல்வர் அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் அதிகரித்து வருகிறது.

    சென்னையில் கடந்த 2 மாதங்களில் 2 தலித் இளைஞர்கள் போலீஸ் நிலையங்களில் மரணமடைந்துள்ளனர். காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தைப் போக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தற்போதுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகள் மட்டுமே தனித்தொகுதிகளாகும். மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப பார்க்கும்போது தமிழகத்தின் மொத்த தொகுதி எண்ணிக்கையை 40ஆக உயர்த்த வேண்டும்.

    அதற்கு தமிழக முதல்வர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அவ்வாறு உயரும்போது கூடுதலாக கிடைக்கும் ஒரு தொகுதி தனித்தொகுதியாக பெற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது தற்போதுள்ள 39 தொகுதிகளிலும் கூடுதலாக ஒரு தொகுதியை தனித்தொகுதியாக பெற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தலித் மக்களுக்கு 19 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தலித் மக்கள் தொகுதி பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த மக்கள்தொகைக்கு ஏற்ப தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்தி வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து பிரச்சினை எழுந்துள்ளது. எந்த கட்சியாக இருந்தா லும் ஒற்றைத் தலைமை என்பதே சரியாக இருக்கும். ஆனால், அ.தி.மு.க.வில் அதற்கான பக்குவமோ, சுதந்திரமாக செயல்படும் நிலையோ இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகும்.

    எங்கள் இருவரையும் (எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்) இணைத்து வைத்ததே பா.ஜ.க.வை சேர்ந்த பிரதமர் நரேந்திரமோடிதான் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே கூறுகிறார் என்றால் அ.தி.மு.க.வின் நிலைமை எவ்வாறு மாறிவிட்டது என்பதை அறிந்திட முடியும். எனவே, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமைதான் சரியாக இருக்கும் என்றாலும், அதற்கான நிலைமை அங்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்டச் செயலர் அசோக்குமார், மாவட்ட பொருளாளர் தலித்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • பல கிலோ மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது.
    • சுகாதார அலுவலர்கள் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பெரிய - நேற்று திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் லதா, பொறியாளர் ஆசிர்வாதம் மற்றும் சுகாதார அலுவலர்கள் சம்பவ இடத் தினை பார்வையிட்டு செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 டன் அளவுக்கு மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

    ஏரி தண்ணீரில் ரசாயனம் ஏதேனும் கலந்து மீன்கள் கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கண்டறிய தண்ணீர் மாதிரியை சேகரித்து பரிசோத னைக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தைக்கு உதவியாக மாவு மில்லை கவனித்து வந்தார்.
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் மாவு அரைத்தல் மற்றும் செக்கு எண்ணெய் ஆலை நடத்திவருகிறார். இவரது மகள் ஹரிணி (வயது 17), திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவியாக மாவு மில் மற்றும் செக்கு ஆலை ஆகியவற்றை கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தேங்காய்களை செக்கு எந்திரத்தில் போட்டு எண்ணெய் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராத நிலையில் எந்திரத்தில் அவரது கைசிக்கியுள்ளது. இதனால் கைதுண்டாகிரத்தவெள்ளத்தில் துடித்து உள்ளார். ஹரிணியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல றிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வருகிற 9-ந்தேதி நடக்கிறது
    • மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

    வேலூர்:

    தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஏற்பட்டுள்ள காலி இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடத்திட தமிழ்நாடு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படு கிறது. வேட்பு மனுக்கள் பெறுவதற்கு 27-ந் தேதி கடைசி நாளாகும். 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்குப்பதிவுவருகிற 9-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதியும் நடக்கிறது.

    திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் 24வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் அம்மணம்பாக்கம் கிராம ஊராட்சி தலைவர் பதவி வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை கிராம ஊராட்சி தலைவர், காட்பாடி ஊராட்சி ஒன்றியம் அம்முண்டி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது.

    கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி கவுன்சிலர் தேர்தல் நடத்தை விதிகள் கிராம ஊராட்சி முழுமைக்கும் பொருந்தும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துண்டிப்பு

    ஆற்காடு:

    ஆற்காடு, திமிரி, கத்தியவாடி துணை மின்நிலையங்களில் வருகிற 22-ந் தேதி (புதன்கி ழமை) அத்தியாவசிய மின்ப ராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே இங்கிருந்து மின்வினி யோகம் பெறும் ஆற்காடு நகரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராம நாதபுரம், கூராம்பாடி, உப்புப் து பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பது வெட்டி, தாஜ்புரா, தக்கான் குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங் குன்றம், ஆயிலம்புதூர், ராமா புரம், திமிரி, விளாப்பாக்கம், காவனூர், சாத்தூர், தாமேரைப்பாக்கம், வளையாத்தூர் (ஒருபகுதி), மோசூர், பால மதி, புங்கனூர், பழையனூர், லாடவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை ஆற்காடு கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    ×