என் மலர்
நீங்கள் தேடியது "2 தலித் இளைஞர்கள் போலீஸ் நிலையங்களில் மரணம்"
- போலீஸ் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் அதிகரித்து வருகிறது.
- தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கையை 40ஆக உயர்த்த வேண்டும்.
வேலூர்:
இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு காலத்தில் பல ஆண்டுகள் போராடியும், அதன்மூலம் 13 பேரை பலிகொடுத்தும் உருவாக்கப் பட்டதுதான் வேலூரை தலைமையிடமாகக் கொண்ட அம்பேத்கர் மாவட்டம். அவ்வாறு 13 பேரை பலிகொடுத்து பெறப்பட்ட மாவட்டத்தின் பெயரை காலப்போக்கில் இழந்துவிட்டோம்.
தற்போது வேலூரில் புதிய பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இவ்விழாவில் இழந்துபோன மாவட்டத்தின் பெயரை மீட்டுத்தரும் வகையில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டி முதல்வர் அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கடந்த 2 மாதங்களில் 2 தலித் இளைஞர்கள் போலீஸ் நிலையங்களில் மரணமடைந்துள்ளனர். காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தைப் போக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போதுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகள் மட்டுமே தனித்தொகுதிகளாகும். மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப பார்க்கும்போது தமிழகத்தின் மொத்த தொகுதி எண்ணிக்கையை 40ஆக உயர்த்த வேண்டும்.
அதற்கு தமிழக முதல்வர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அவ்வாறு உயரும்போது கூடுதலாக கிடைக்கும் ஒரு தொகுதி தனித்தொகுதியாக பெற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது தற்போதுள்ள 39 தொகுதிகளிலும் கூடுதலாக ஒரு தொகுதியை தனித்தொகுதியாக பெற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தலித் மக்களுக்கு 19 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தலித் மக்கள் தொகுதி பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த மக்கள்தொகைக்கு ஏற்ப தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்தி வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து பிரச்சினை எழுந்துள்ளது. எந்த கட்சியாக இருந்தா லும் ஒற்றைத் தலைமை என்பதே சரியாக இருக்கும். ஆனால், அ.தி.மு.க.வில் அதற்கான பக்குவமோ, சுதந்திரமாக செயல்படும் நிலையோ இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகும்.
எங்கள் இருவரையும் (எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்) இணைத்து வைத்ததே பா.ஜ.க.வை சேர்ந்த பிரதமர் நரேந்திரமோடிதான் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே கூறுகிறார் என்றால் அ.தி.மு.க.வின் நிலைமை எவ்வாறு மாறிவிட்டது என்பதை அறிந்திட முடியும். எனவே, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமைதான் சரியாக இருக்கும் என்றாலும், அதற்கான நிலைமை அங்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்டச் செயலர் அசோக்குமார், மாவட்ட பொருளாளர் தலித்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.






