என் மலர்tooltip icon

    வேலூர்

    • செல்லாது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி
    • நோட்டீஸ் ஒட்டி வாங்குகின்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி வலுப்பெற்றுள்ள காரணத்தால் 10 ரூபாய் நாணய த்தை வைத்துள்ள வணிகர்களும், பொ துமக்களும் வெகுவாக பா திக்க ப்பட்டு வருகிறார்கள்.

    10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவையே என்று ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கம் அளித்துவிட்டது. ஆனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி வேலூர் மாவட்டத்தில் இன்னமும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

    பொதுமக்கள் தன்னிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களை மாற்ற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க வேலூர் மாநகரப் பகுதியில் தற்போது 10 ரூபாய் நாணயங்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு டிபன் கடையில் இது பற்றி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில் இங்கு 10 ரூபாய் நாணயங்கள் பரிவர்த்தனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வேலூரில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் 10 ரூபாய் நாணயங்களை வைத்துள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.இதே போல அனைத்து வணிக நிறுவனங்கள், பஸ்களிலும் 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு
    • விவசாயிகளுக்கு இரட்டிப்பு நஷ்டம் ஏற்படுகிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    குடியாத்தம் அருகே உள்ள செட்டிகுப்பம் ஏரியிலிருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பகுதியில் நிரந்தரமாக கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் 8,500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில் மோர்தானா அணை கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றால் அரசு அனுமதி பெற வேண்டும்.அதற்குப் பிறகு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொட ர்ந்து பேசிய விவசாயிகள் 100 நாள் வேலை திட்ட பணியா ளர்களை விவசாய பணிக்கு ஒதுக்க வேண்டும். ஊராட்சி பகுதியில் மட்டுமின்றி டவுன் பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்த வேண்டும்.

    ஒடுகத்தூ ரில் ஒரு தேசிய வங்கி மட்டுமே உள்ளது‌ இதில் எப்போதும் கூட்டமாக உள்ளது. எனவே ஒடுகத்தூரில் கூடுதலாக தேசிய வங்கி ஒன்று ஏற்படுத்த வேண்டும்.

    இயற்கை விவசாயம் குறித்து வேலூர் மாவட்ட விவசாயி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இது குறித்து முறையான பயிற்சி இருந்தால் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும்.

    ஒடுகத்தூர் பகுதியில் மேல் அரசம்பட்டு தீர்த்தம் கொட்டாவூர்ப குதிகளுக்கு அரசு டவுன் பஸ் சரியாக இயக்கப்படு வதில்லை.

    பிரதம மந்திரி கிஷான் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ‌.6000 உதவித்தொகை கிடைப்பதில்லை. தகுதி வாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் ரூ.6000 உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பழைய முறையில் வங்கி கடன் வழங்க வேண்டும்.ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரைவில் திறக்கப்படும் என வாக்குறுதி மட்டுமே தந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு நஷ்டம் ஏற்படுகிறது.

    எனவே ஆம்பூர் சர்க்கரை ஆலை திறக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்டால் கரும்பு பயிரிடாமல் நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்வோம். முடிந்த அளவு விரைவில் ஆம்பூர் சர்க்கரை ஆலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாரம் மற்றும் தினசரி சந்தை களில் விவசாயிகளிடம் அதிக சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும்.

    வனவிலங்குகளை வனத்துறையினரே கட்டுப்படுத்த வேண்டும்.விவசாயிகள் காட்டு பன்றிகளை சுட்டு தள்ள அனுமதி தர வேண்டும்.

    யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    அதற்கு பதில் அளித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் போதுமான அளவு யூரியா உள்ளிட்ட உரங்களை இருப்பு வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • நந்தகுமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி தெற்கு ஒன்றியம் காட்டுப்புத்தூர் ஊராட்சி பாப்பாந்தோப்பு கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடந்தது.

    வேலூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தார்.

    அவருடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு பாபு, துணை சேர்மன் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா கோபி, பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், பேரூராட்சி செயலாளர் குமார், நிர்வாகிகள் அருள்நாதன், ஊராட்சி செயலாளர் பிச்சாண்டி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • பாராளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்‌.பி. கேள்வி
    • பாடப் பகுதிகள் ஒரே மட்டத்தில் கூட்டாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் திட்டமாகும்.

    வேலூர் :

    பாராளுமன்றத்தில் வேலூர் எம்‌‌.பி.கதிர்ஆனந்த் பேசியதாவது:-

    வெளிநாடுகளில் உயர்கல்வி பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, (நாடு வாரியாக) அளிக்க ? உள்நாட்டிலேயே அதிக மாணவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடர ஒன்றிய அரசு ஏதேனும் விரிவான கொள்கையை வகுத்துள்ளதா?

    மேலும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் இரட்டைப் பட்டங்களை இந்திய மாணவர்கள் தனித்தனியாகவும் ஒரே நேரத்தில் படிக்க முடியுமா?

    ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டங்களுக்கும் இரட்டைப் பட்டப்படிப்பு வழங்கப்படுமா? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன ?

    இதற்கு மத்திய கல்வி மந்திரி டாக்டர் சுபாஸ் சர்க்கார் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார்.அதில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் நமது இந்திய மாணவர்களின் விவரங்கள் மற்றும் தரவுகள் ஏதும் தங்களிடம் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

    மேற்கூறிய விதிமுறைகளின் விதிகளின் கீழ், " இரட்டைப் பட்டப்படிப்பு திட்டம் " என்பது இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களால் ஒரே துறைகள், பாடப் பகுதிகள் மற்றும் ஒரே மட்டத்தில் கூட்டாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் திட்டமாகும்.

    இந்திய மாணவர்கள் வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து பெற வேண்டிய மதிப்பெண் மற்றும் இந்திய நிறுவனங்களில் இருந்து வெளிநாட்டு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வழக்கமான முறையில் பெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது
    • பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்

    வேலூர்:

    ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர்.

    ஆடி வெள்ளி

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானது. ஆடி மாத முதல் வெள்ளியான இன்று வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர். வேலூர் கோட்டை கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

    வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆடிவெள்ளியொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையையொட்டி, இன்று 100-க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.பக்தர்கள் காவடி கரகம் எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றங் கரையோரத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. செல்லியம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித் தார். ஏராளமான பெண்கள் கோவிலில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். வேலூர் ஆணைகுளத்து அம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

    காட்பாடி ரோட்டில் உள்ள விஷ்ணு துர்கையம்மனுக்கு வெண்ணை காப்பு அலங் காரம் செய்யப்பட்டிருந்தது. தோட்டப்பாளையம் சோலாபுரி அம்மன், படவேட்டம்மன் மற்றும் டிட்டர்லைன் கருமாரி அம்மனும் சிறப்பு அலங்காரரூபத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தனர்.

    • மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    குடியாத்தம் :

    குடியாத்தம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கிளை மற்றும் வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே ஒலக்காசி பகுதியில் மணல் குவாரி தொடங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டம்

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு குடியாத்தம் தாலுகா ஒலக்காசி ஊராட்சி சித்தாத்தூர் பகுதியில் அரசு மணல் குவாரி தொடங்கிட வேண்டும்.

    வாழ்வாதாரம் பாதிப்பு

    குடியாத்தம் பகுதியில் மணல் குவாரி தொடங்கினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வு மேம்படும், ஆயிரக்கணக்கான ஏழை எளிய சாதாரண மக்கள் குறைந்த விலையில் மணல் பெறவும், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வு மேம்படும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டுவண்டி தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.பங்குமூர்த்தி, செயலாளர் டி.விஜயன் ஆகியோர் தலைமை தாங்கினர்.சங்க நிர்வாகிகள் சங்கர், மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.குப்பு, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சி.சரவணன், மாவட்ட துணை தலைவர் பி.காத்தவராயன், விவசாய தொழிலாளர் சங்க பி. குணசேகரன், விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கே.சாமிநாதன், பீடி சங்க பொருளாளர் எஸ்.சிலம்பரசன் உள்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • வேலூர் அருகே நிலத்தகராறு காரணமாக வாலிபர் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிட்டனை கைது செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்ச மந்தை அருகே உள்ள சின்ன எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 23). விவசாயி. இவருக்கும் பக்கத்து நிலத்துக்காரரான ஜமுனாமரத்தூர் அடுத்த கீழ் குச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜிட்டன் (55) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் ஆத்திரமடைந்த ஜிட்டன் நாட்டு துப்பாக்கியால் மணியை சுட்டுள்ளார். இதில் மணியின் முழங்கால் மற்றும் தொடை பகுதியில் குண்டு பாய்ந்தது.

    துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த மணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிட்டனை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஜிட்டன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • சிகிச்சைக்காக வேலூர் வந்திருந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்து வேலூரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதியில் தங்குகின்றனர்.

    மேற்குவங்க மாநிலம் சகாபூர் பகுதியைச் சேர்ந்த ரத்தன் டோலி (வயது 47) என்பவர் சிகிச்சைக்காக வேலூர் வந்திருந்தார். அவர் பாபுராவ்தெருவில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சுயநினைவு இழந்தார். உடனடியாக அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரத்தன் டோலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரத்தன் டோலி ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டி ருந்தார். அதனால் அவர் இறந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

    • மாணவிகள் ஆசிரியர்களை கேலி செய்வதாக குற்றச் சாட்டு
    • போலீசாரை கண்டதும் வாலிபர்கள் ஓட்டம்

    வேலுார்:

    வேலுார் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 800 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழையும் புள்ளீங்கோக்கள், மாணவிகள் ஆசிரியர் களை கேலி, கிண்டல் செய்வதையும் வழக்கமாக கொண்டிருப்பதாக குற்றச் சாட்டு உள்ளது.

    இதை நிரூபிக்கும் வகையில், இந்த பள்ளியின் சுற்றுச்சுவரை தாண்டி, கட்டிடத்துக்கு மேல் ஏறி நின்று 5 வாலிபர்கள் நேற்று ரகளையில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகாயம் போலீசார், அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டதும், வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர், மதிய உணவு இடைவேளையின்போது, மீண்டும் மாணவிகளுக்கு தொந்தரவு அளிக்கும் செயலில் வாலிபர்கள் சிலர் ஈடுபட்டனர். இதை கவனித்த சில ஆசிரியர்கள், போலீசில் புகார் அளிப்பதாக எச்சரிக்கை விடுத்ததும், கட்டிடத்தின் மீது எகிறி குதித்து தப்பியோடினர்.

    இதில் ஒருவர் மட்டும் தவறி விழுந்ததில் கை முறிந்தது. அங்கு தொடர்ந்து, சென்ற போலீசார் காயமடைந்தவரை மீட்டு, அடுக் கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் இதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் தொரப்பாடியைச் சேர்ந்த 17 வயது மாணவன் என்பதும், கடந்த ஒருமாதமாக பள்ளிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.

    இந்த சம்பவத்தால், பள்ளி வளாகத்தில் நேற்று திடீர் பரபரப்பு நிலவியது.

    பள்ளி வேலை நேரத்தில், அத்துமீறி நுழையும் வாலிபர்களால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

    • 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா
    • சாலைகளில் அரோகரா கோஷத்துடன் பக்தி பரவசம்

    வேலூர்:

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருத்தணி ஆடி கிருத்திகை விழாவில் பக்தர்கள் காவடி எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டது.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அதன்படி, முக்கிய முருகன் கோவில்களான வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், ரத்தினகிரி பாலமுருகன் கோவில், பாலமதி குழந்தை வேலாயுத பாணி கோவில், மகாதேவமலை, திமிரி குமரக்கோட்டம், ஞானமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்யவும், காவடி நேர்த்திக்கடன் செலுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கு ஏற்பட்டுள்ளது.23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து திருத்தணி ரத்தினகிரி வள்ளிமலை முருகன் கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து செல்கின்றனர். வேலூர் மாநகரப் பகுதி வழியாக பக்தர்கள் நீண்ட வரிசையில் அரோகரா கோஷம் எழுப்பியபடி காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

    அவர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது ‌.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பத்திர நடைபாதையாக செல்வதால் வேலூர் சாலைகளில் பக்தி கோஷம் காண முடிகிறது.

    • உடலை ஒப்படைக்க பொதுமக்கள் மறுப்பு
    • உதவி கலெக்டர் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பீஞ்ச மந்தை சின்ன எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் குள்ளையன் (வயது 28) இவரது மனைவி காஞ்சனா வயது (22).கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காஞ்சனா நிறை மாத கர்பிணியாக இருந்தார்.

    அதற்காக எலந்தம்புதூர் மலை கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    அவருக்கு நேற்று முன்தினம் அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. கணவர் வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்று இருந்தால் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மாதத்திற்கு முன்பே ஆம்புலன்ஸ் பழுதானதால் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் உறவினர்கள் பிரசவ வலியால் துடித்த காஞ்சனாவை பைக்கில் அமரவைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    சரியான சாலை வசதி இல்லாததால் அவசரமாக செல்ல முடியவில்லை. இதனால் வழியால் துடித்த காஞ்சனாவுக்கு வழியிலேயே ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. பின்னர் காஞ்சனாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் இறந்த காஞ்சனா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

    ஆனால் பொதுமக்கள் அவரது உடலை தர மறுத்தனர்.சம்பவ இடத்திற்கு உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் தாசில்தார் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காஞ்சனா பிரசவ வலியால் இயற்கையாக இறந்தார். சாலை வசதி இருந்திருந்தால் அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருப்போம். உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காஞ்சனாவின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பீஞ்சமந்தை எட்டிப்பட்டி மலைப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். விரைவில் அந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • பிரதமர் கவுரவ நிதி திட்டத்தில் வழங்கப்படுகிறது
    • வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

    வேலூர்:

    வேலூர் வேளாண்மை இணை இயக்குனர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டமானது 2018 முதல் செயல்பட்டு வருகிறது.

    இந்த திட்டமானது நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் நிதி தேவைக்காகவும் சரியான பயிர் ஆரோக்கியம் மற்றும் அதிக விளைச்சலை உறுதி செய்திடவும் மத்திய அரசினால் விவசாய குடும்பத்தில நிலம் உள்ள ஒருவருக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 என 3 தவணையாக வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் பதிவு செய்த வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை தொகைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது 12-வது தவணைத் தொகை பெறுவதற்கு வருகிற 31-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் பயன்பெறும் விவசாயிகளின் நில ஆவணங்களை சரிபார்க்கும் பணி அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் நடைபெற்று வருகிறது.

    எனவே இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களை பட்டா, சிட்டா மற்றும் ஆதார் நகலுடன்) தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) அவர்களிடம் சமர்ப்பித்து பிப்ரவரி 2019 க்கு முன்னரே நிலம் இருப்பதனை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. நில ஆவணங்களை உறுதி செய்த பின்னரே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும்.

    மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் உடனே ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைத்து பிஎம்ஐ கிஷான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயன் பெற்றிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×