என் மலர்tooltip icon

    வேலூர்

    • 4 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த பொய்கை மேம்பாலம் அருகே இன்று காலை முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது தனியார் பஸ் திடீரென மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் இருந்த பயணிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • போதை பொருட்கள் விற்றால் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போதை பொருட்களாக கருதப்படும் ஹான்ஸ் மற்றும் குட்கா, புகையிலை ஆகியவை விற்பனை செய்வதை ஏற்கனவே தடைசெய்யப்பட்டு அமுலில் உள்ளது.

    சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

    இதையடுத்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது மேற்படி பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மற்றும் கடையின் உரிமத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் "இங்கு ஹான்ஸ், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதில்லை" என்ற அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாறி, மாறி குற்றச்சாட்டு வைத்தனர்
    • மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாங்காய்மண்டி பகுதியை சேர்ந்தவர் கரண் (வயது 25). இவரது மனைவி சிவசக்தி. இவர் மக்கான் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்காக நேற்று முன்தினம் அழைத்துச் சென்றனர்.

    பின்னர் அவரை பென்லேன்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு குழந்தை இறந்து பிறந்தது. இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில், குழந்தை இறந்ததற்கு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் கவனக்குறைவு தான் என்று ஒருதரப்பினரும், பென்லேன்ட் மருத்துவமனையில் முறையாக பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மற்றொரு தரப்பினரும் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

    • மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது
    • ஏராளானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி மக்கள் குறைத்தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

    இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

    குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார், பேரணாம்பட்டு தாசில்தார் வி.கே.நெடுமாறன், சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் எம்.நெடுமாறன், ஏ.சி. விநாயகமூர்த்தி, ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர், எஸ்.சாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் மகளிர் கல்லூரி அமைக்க நிலம் கையகப்படுத்துவது, சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்துவது, கைத்தறி ஜவுளி பூங்கா அமைப்பதற்கான தேவையான இடங்களை பார்வையிட்டு கையகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    இந்தப் பணிகளுக்கு தேவையான இடங்களை கண்டறிந்து உடனடியாக களப்பணி ஆய்வு செய்யவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படடைத்தனர்
    • காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள குப்பம்பட்டு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் செல்லக்கூடிய உத்திரக்காவேரி ஆற்றில் இருந்து சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இறைச்சியை தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி ஊர்ந்து வந்துக்கொண்டு இருந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு மற்றும் தீயனைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படடைத்தனர். மேலும் பிடிப்பட்ட மலைப்பாம்பினை சாக்கு பையில் அடைத்து அருகே இருந்த காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • 30 ஆண்டுகளாக பிரிந்து இருந்த எனது மகனை தற்போது மத்திய அரசு விடுதலை செய்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    • எனது பிள்ளை என்னோடு வந்து சேர்ந்துவிடுவான் என உறுதியாக உள்ளேன்.

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் சாந்தனை வக்கீல் ராஜகுரு சந்தித்து பேசினார். அப்போது சாந்தன் வெளியே வந்த பிறகு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட உள்ளார்.

    அதைத் தொடர்ந்து தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. எனவே பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இலங்கையில் உள்ள சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது 75) கூறியதாவது:-

    30 ஆண்டுகளாக பிரிந்து இருந்த எனது மகனை தற்போது மத்திய அரசு விடுதலை செய்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    இதற்காக பாடுபட்டு அத்தனை காலம் உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வளவு பேரும் சேர்ந்து தான் எனது பிள்ளையின் விடுதலைக்கு வழி செய்திருக்கிறீர்கள். தமிழக அரசுக்கும் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் எப்போதும் இந்த நன்றியை மறக்க மாட்டோம்.

    எனக்குத்தான் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இருந்தாலும் நலமாக உள்ளேன்.

    எனது பிள்ளை என்னோடு வந்து சேர்ந்துவிடுவான் என உறுதியாக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முருகன் மற்றும் சாந்தனை சத்துவாச்சாரியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு நேற்று மாலை சந்தித்து பேசினார்.
    • விடுதலை குறித்து தகவல் அறிந்த இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் உள்ள முருகன் மற்றும் சாந்தனை சத்துவாச்சாரியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு நேற்று மாலை சந்தித்து பேசினார்.

    அப்போது விடுதலை குறித்த விவரத்தை அவர்களிடத்தில் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து வக்கீல் ராஜகுரு கூறியதாவது:-

    விடுதலை குறித்து தகவல் அறிந்த இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். முதலில் சாந்தனை சந்தித்தேன். பின்னர் முருகனை சந்தித்தேன். அதைத்தொடர்ந்து இருவரிடமும் பேசினேன்.

    விடுதலைக்காக நடவடிக்கை மேற்கொண்ட வக்கீல்கள், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

    முருகன் வெளியே வந்த பின்னர் தனது மனைவியுடன் தங்கியிருக்க போவதாக உருக்கமாக தெரிவித்தார். மேலும் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து தமிழகத்தில் தங்கியிருப்பதா? லண்டன் அல்லது செல்வது குறித்து முடிவெடுப்பேன் என முருகன் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரோலில் தங்கி உள்ள நளினிக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • விடுதலை செய்யப்பட்டதால் அவரை சந்திக்க பல்வேறு தரப்பினர் வருகை தர வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதினர்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    நளினி பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் கடந்த 10 மாதமாக பரோலில் வீட்டில் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

    இதையடுத்து காட்பாடி பிரம்மபுரத்தில் நளினி தங்கி உள்ள வீட்டின் அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பரோலில் தங்கி உள்ள நளினிக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது விடுதலை செய்யப்பட்டதால் அவரை சந்திக்க பல்வேறு தரப்பினர் வருகை தர வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதினர்.

    எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    • போக்குவரத்து பாதிப்பு
    • சாலை நடுவில் தடுப்பு அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    ஆற்காட்டில் இருந்து இன்று காலை தனியார் டவுன் பஸ் வேலூர் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்தது. ஆற்காடு ரோட்டில் சிஎம்சி ஆஸ்பத்திரி முன்பு சென்றபோது பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    பஸ் கம்பத்தில் மோதி விபத்து

    காமராஜர் சிலை அருகே உள்ள சிக்னல் கம்பத்தில் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் சிக்னல் கம்பம் ரோட்டில் சாய்ந்து விழுந்தது. அதனுடன் இணைக்க பட்டிருந்த கேபிள் மற்றும் மின் ஒயர்களும் ரோட்டில் அறுந்து விழுந்தன.

    இதனால் ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலையில் விபத்து நடந்ததால் வாகனங்கள் காட்பாடி ரோட்டில் திருப்பி விடப்பட்டன.

    போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மின் கம்பம் மற்றும் ரோட்டில் இருந்து ஒயர்கள் அகற்றப்பட்டன.

    எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சி.எம்.சி. சிக்னலில் விபத்து நடந்த நேரத்தில் வாகனங்கள் வரத்தும் மக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது. அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை மற்ற நேரங்களில் விபத்து ஏற்பட்டிருந்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும்.

    தனியார் ஆஸ்பத்திரி முன்பு ஆற்காடு சாலையில் போலீசார் வாகனங்கள் சீராக செல்லும் வகையில் இரும்பு தடுப்புகளை அமைத்திருந்தினர். இதனால் வாகனங்கள் வரிசையாக சென்றன.

    தற்போது சாலை நடுவில் இருந்த இரும்பு தடுப்புகளை போலீசார் அகற்றிவிட்டனர். இதனால் ஆற்காடு சாலையில் ஆஸ்பத்திரி முன்பு பல வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாகவும் தாறுமாறமாகவும் செல்கிறது.

    இது விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

    ஆற்காடு சாலையில் மேலும் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க உடனடியாக சாலை நடுவில் தடுப்புகளை அமைத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடி வழங்கினர்
    • டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன நாளையொட்டி வேலூர் லாங்கு பஜாரில் உள்ள சண்முகனடியார் மண்டபத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் இணைந்து சிஎம்சி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    பெங்களூர் மண்டல மேலாளர் எஸ்.பரணிதரன் மேற்பார்வையில் நடந்த முகாமிற்கு வேலூர் கிளை மேலாளர் புன்னைவாணன் தலைமை தாங்கினார். பெங்களூர் மண்டல துணை மேலாளர் ராம்நாத் விமல் முன்னிலை வகித்தார். சி.எம்.சி கண் மருத்துவமனை டாக்டர் ஹிட்லர் தலைமையில் மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்தனர். இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கண் கண்ணாடி வழங்க உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சியில் வேலூர் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விரைவில் கார்த்திகை தீபம் வர இருப்பதால் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்
    • மண்பாண்ட தொழிலாளர்கள் உற்சாகம்

    வேலூர்:

    கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 'அகல் விளக்குகள்' தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் முக்கிய பண்டிகையாக கொண்டாடப் படும் கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக, மக்கள் தயாராகி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மண் பாண்ட தொழிலாளர்கள் உள்ள வேலூர் சூளைமேடு, காகித பட்டறை, குடியாத்தம், கே.வி.குப்பம், கணியம்பாடி, அணைக்கட்டு, மேலகுப்பம், ஒடுக்கத்தூர், பொய்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில், பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாறு, களிமண்ணால் செய்யக்கூடிய பொருட்களை தயாரித்து அதை விற்பனை செய்து வருகின்றனர். விரைவில் கார்த்திகை தீபத் திருவிழா வர இருப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது 'அகல் விளக்குகள்' தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
    • நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பரவலாக மழை

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி முதல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வரையிலும் சென்னை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது.பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.மேலும் கடும் குளிரும் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி யுள்ளனர்.

    கண்காணிப்பு மையம்

    கலெக்டர் அலுவல கங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்து இந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள தாலுகா அலுவலகங்களில் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    தண்ணீர் தேங்க கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு பொதுமக்களை தங்க வைப்பதற்கான பள்ளி, சமுதாய கூடங்களும் தயார் நிலையில் உள்ளன.

    பாலாறு, பொன்னை ஆறு, கவுண்டன்யா ஆறு மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை, செய்யாறு, ஆரணி ஆறு, நாகநதி ஆறுகளிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளன. மழை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் பெருக்கெடுத்து வரலாம் என்பதால் பொதுமக்கள் ஆறு மற்றும் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×