search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரவலாக மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    X

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பெய்த மழையில் குடை பிடித்து சென்ற பெண்கள்.

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரவலாக மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
    • நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பரவலாக மழை

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி முதல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வரையிலும் சென்னை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது.பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.மேலும் கடும் குளிரும் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி யுள்ளனர்.

    கண்காணிப்பு மையம்

    கலெக்டர் அலுவல கங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்து இந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள தாலுகா அலுவலகங்களில் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    தண்ணீர் தேங்க கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு பொதுமக்களை தங்க வைப்பதற்கான பள்ளி, சமுதாய கூடங்களும் தயார் நிலையில் உள்ளன.

    பாலாறு, பொன்னை ஆறு, கவுண்டன்யா ஆறு மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை, செய்யாறு, ஆரணி ஆறு, நாகநதி ஆறுகளிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளன. மழை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் பெருக்கெடுத்து வரலாம் என்பதால் பொதுமக்கள் ஆறு மற்றும் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×