என் மலர்tooltip icon

    வேலூர்

    • பேரூராட்சி உதவியாளர் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்
    • குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பங்கேற்பு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமா ள்ராஜா அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி உதவியாளர் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்புதுறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது.

    மேலும் ஏழ்மையில் இருக்கும் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுவது என குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து வருகை தந்து இருந்த அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எடுத்துரைத்து பேசினார்கள். இதில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • போலீசார் சாராய வேட்டை
    • கும்பலை தேடி வருகின்றனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள மலைப்பகுதிகளான அல்லேரி, மாமரத்து கொல்லை, ஆகிய பகுதிகளில் சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது காட்டுப்பகுதியின் நடுவில் பேரலில் சாராயம் காய்ச்சி வைத்திருந்தது தெரியவந்தது.

    பின்னர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை மற்றும் அடுப்பு பேரல்கள் ஆகியவற்றை கீழே கொட்டி அழித்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சாராய கும்பலை தேடி வருகின்றனர்.

    • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
    • கடன் வழங்குவதில் முறைகேடு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மாவட்ட வன அலுவலர் கலாநிதி உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரு மாடு வைத்திருப்பவர்களுக்கு கூட முறைகேடாக கடன் வழங்குகின்றனர். விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கின்றனர்.

    முறைகேடா கடன் வழங்கியது நிரூபித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா பள்ளிகொண்டாவில் உள்ள 5 கிராமங்கள் மற்றும் கே வி குப்பம் தாலுக்காவில் உள்ள 15 கிராமங்களை பிரித்து பள்ளிகொண்டாவை தனி தாலுகா அமைத்து தர வேண்டும்.

    சொட்டுநீர் பாசன உதிரி பாகங்கள் பெறுவதற்காக கேஜிஎப் அல்லது சித்தூர் செல்ல வேண்டி உள்ளதால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சொட்டு நீர் பாசன உதிரி பாகங்கள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

    பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி தர வேண்டும். பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் கசகசா வேலூர் மாவட்டத்தில் பயிரிட அனுமதி உள்ளதா என தெளிவுபடுத்த வேண்டும். அனுமதி இல்லையெனில் அனுமதி பெற்று தர வேண்டும்.

    இயற்கை முறையில் விவசாயம் செய்த போது அரசு பசுமை புரட்சி என்ற பெயரில் ரசாயன விவசாயம் செய்ய வற்புறுத்தியது. ஆனால் தற்போது அரசு இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்.

    கோடை காலங்களில் யானைகளுக்கு உணவு கிடைக்காமல் வயல்வெளிகளில் புகுந்து விடுகின்றன. இதனை தடுக்க விவசாயிகளிடமிருந்து சோகையுடன் கரும்பை கொள்முதல் செய்து யானை வரும் பாதைகளில் போடுவதால் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க முடியும்.

    காட்பாடி தாலுக்கா அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடத்த வேண்டும்.

    ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த கோதுமையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது மேலும் தரமற்ற கோதுமைகளை வழங்குகின்றனர்.

    சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்க 2017-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது அதற்கு உண்டான இழப்பீடு இதுவரை வழங்கவில்லை அதனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரையில் முருங்கை க்கீரையில் இருந்து பவுடர் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் விவசாயிகளுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கிறது.

    அதிகாரிகள் அந்த தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டு வேலூர் மாவட்டத்தில் இதனை செயல்படுத்த முடியுமா இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்குமா என ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

    • வேலூரில் ஏழை மாணவர்கள் நலனுக்காக அமைக்கப்படுகிறது
    • வரும் கல்வி ஆண்டு முதல் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி யால் 87 பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 60-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 10,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் 15 பள்ளிகளில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. இதுவும் 2017-ம் ஆண்டு ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.

    மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்கள் தற்போது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றை சார்ந்து உள்ளனர்.

    தண்ணீர் தொட்டிகளில் குளோரின் கலக்கப்படுகிறது. ஆனாலும் தொட்டிகளை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது.

    பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

    வருகின்ற கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து பள்ளிகளிலும் அதிகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ரூ.4.5 லட்சம் செலவில் ஒரு நாளைக்கு 500 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் சுத்திகரிப்பு தொட்டிகள் நிறுவப்பட உள்ளது.

    மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் அளவு அதிகரிக்கப்படும்.

    சுத்திகரிப்பு எந்திரங்களுக்கு தேவையான தண்ணீர் வசதிக்காக பள்ளிகளில் போர்வெல் அமைக்கப்பட உள்ளது.

    வேலூர் மாநகராட்சி பள்ளிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் இந்த பணிகளை விரைவாக செய்ய முடியும். இதன் மூலம் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும் என மேயர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்
    • மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் கணாதிபதி துளசி'ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில், ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    கல்லூரியின் ரோட்ராக்ட் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமினை கல்லூரின் முதல்வர் பாரதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ரத்ததான முகாமில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மருத்துவர் செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வியலாளர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவில் ரோட்ராக்ட் குழுமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அனைத்து துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    விழாவின் முடிவில் தொடர் ரத்ததானம் வழங்கி வரும் ரோட்ராக்ட் குழுமத்தின் மாணவர்களை பாராட்டி சிறப்பிக்கும் வகையில் ரோட்ராக்ட் குழுமத்திரும் மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்ராக்ட் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் துரை குமார், துறைத்தலைவர், தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்பாடு செய்திருந்தார்.

    • 300-க்கும் மேற்ப்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன
    • போலீஸ் சூப்பிரண்டு திடீரென ஆய்வு செய்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் அடுத்த பென்னாத்தூர் பகுதியில் எருது விடும் விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைப்பெறுவது வழக்கம் .

    இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் கடந்த மாதம் விழா நடைபெற இருந்தது. அப்போது சில காரணங்களால் விழா தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று விழா நடைப்பெற்றது.

    விழாவில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்ப்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.

    பின்னர் ஓடு பாதையில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது காளைகள் ஓடு பாதையில் சிறிப்பாய்ந்து ஓடியது. வெற்றிப்பெற்ற காளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    விழாவினை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் திடீரென ஆய்வு செய்தார்.

    ஓடு பாதையில் உள்ளே காளைகளை ஆரவாரம் செய்ய இளைஞர்கள் யாரையும் அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு எஸ் பி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வேலூர் தாசில்தார் மற்றும் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 75-ல் 8 கடைகள் மட்டுமே எடுக்கப்பட்டது
    • கடைகள் திறக்கப்படாததால் ‌பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    75 கடைகள் ஏலம்

    அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில கடைகள், ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மீதமுள்ள 75 கடைகள் ஏலம் விடப்பட உள்ளது. அதிக வாடகை மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் ஒத்திவைத்தனர்.பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே 4 தடவைக்கு மேல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆள் இல்லை

    ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இன்று நடந்த ஏலத்தில் 14 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

    கடைகள் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மனுக்கள் போடுவதற்காக மாநகராட்சி வளாகத்தில் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது அதில் 13 பேர் கடை வாடகை உள்ளிட்ட விவரங்களை பெட்டியில் போட்டனர். ஒருவர் மட்டும் நேரடியாக ஏலத்தில் கலந்து கொண்டார்.

    இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் உள்ள 8 கடைகள் இன்று ஏலம் விடப்பட்டன.

    கடைகள் ஏலம் நடைபெறுவதை ஒட்டி மாநகராட்சி வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • சொத்து தகராறில் அவரது மருமகன் இரவு நேரத்தில் செல்வத்தை அடித்து கொலை செய்தது தெரியவந்தது
    • எதுவும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி.

    இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு ஜெயலட்சுமி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    நேற்று காலை செல்வம் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    காட்பாடி டி.எஸ்.பி பழனி, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

    செல்வம் தலையில் பலத்த காயங்கள் இருந்தது.

    பின்னர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அவரது மருமகனிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் சொத்து தகராறில் அவரது மருமகன் பிரபாகரன் (27) இரவு நேரத்தில் செல்வத்தை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் அவர் எதுவும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார். போலீசார் பிரபாகரனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி பெற்றோரிடம் தகராறு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி செங்குட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சார்ஜ் ஓய்வு பெற்ற துப்புரவு ஊழியர்.இவருடைய மனைவி மெர்சி.காட்பாடி வேளாண்மை அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுடைய மகன் சாம் ரிச்சர்ட் (வயது 31).மாற்றுத்திறனாளியான இவர் தனது பெற்றோரிடம் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் மனமுடைந்த சாம்ரிச்சர்ட் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து ஓசூருக்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

    சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது லாரியின் டயர் வெடித்தது.இதனால் டிரைவர் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

    அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வேகமாக வந்த கார் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் பின்பக்கத்தில் கார் புகுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் முன்பக்கம் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

    காரின் பின்பக்கம் இருந்த 2 பேருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1167 வாக்குப்பதிவு எந்திரங்கள் 635 கட்டுப்பாட்டு கருவிகள்
    • 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

    15 ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என விதி உள்ளதால் மாநகராட்சி வளாகத்தில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டு எந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டன.

    1167 வாக்குப்பதிவு எந்திரங்கள் 635 கட்டுப்பாட்டு கருவிகள் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிரம்மபுரத்தில் போலீஸ் நிலையம் வருகிறது
    • அணைக்கட்டு உட்கோட்டத்தில் 5 போலீஸ் நிலையங்கள் செயல்படும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் என மூன்று காவல் உட்கோட்டங்களுடன் காவல் துறை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    இதில், வேலூர் உட்கோட்ட காவல் நிர்வாகம் அதிகப்படியான போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கையுடன் இயங்கி வருகிறது.

    சத்துவாச்சாரி, வேலூர் வடக்கு, தெற்கு, தெற்கு குற்றப்பிரிவு, பாகாயம் மற்றும் அதன் கீழ் செயல்படும் (சர்க்கிள்) அரியூர், வேலூர் கிராமியம் மற்றும் அதன் கீழ் இயங்கும் விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா மற்றும் அதன் கீழ் இயங்கும் அணைக்கட்டு, வேப்பங்குப்பம் என மொத்தம் 11 போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

    வேலூர் உட்கோட்டம் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் தொடங்கி திருப்பத்தூர் மாவட்ட எல்லை வரை சுமார் 60 கி.மீ தொலைவு வரை நீண்டுள்ளது. இதன் காரணமாக, டி.எஸ்.பி. பணிச்சுமை அதிகரித்துள்ளது.

    இதை கருத்தில் கொண்டு வேலூர் உட்கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவந்தது. இதன்மூலம் போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகளை சிறப்பாக கவனிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வேலூர் உட்கோட்டத்தை இரண்டாகப் பிரித்து அணைக்கட்டு உட்கோட்டம் புதிதாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

    அதேபோல், காட்பாடி உட்கோட்டத்தில் பிரம்மபுரம் புதிய போலீஸ் நிலையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது:-

    வேலூர் உட்கோட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்படும் அணை க்கட்டு உட்கோட்டத்தில் வேலூர் தாலுகா, விரிஞ்சிபுரம், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, வேப்பங்குப்பம் ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் செயல்படும்.

    அணைக்கட்டில் டி.எஸ்.பி.அலுவலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு பணியும் நடைபெற்று வருகிறது. விரைவில் தற்காலிக அலுவலகம் தொடங்கப்படும்.

    பிறகு நிரந்தர அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உட்கோட்டம் இரண்டாக பிரிக்கப்படுவதால் சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றச் செயல்கள் தடுப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். மேலும், போலீஸ் நிலையங்களின் நிர்வாகங்களை சரியாக கவனிக்க முடியும்'' என்றனர்.

    ×