என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மாணவிகள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் சு.கம்பம்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மாபூஸ்கான் (வயது 34). இவரது மனைவி தில்ஷாத் (30). இவர்களுக்கு நஸ்ரின் (15) நசீமா (15) ஷாகிரா (12) ஷபரின் (10) பரிதா (8) ஆகிய 5 மகள்கள்.

    இதில் இரட்டையர்களான நஸ்ரின், நசீமா ஆகியோர் 9-ம் வகுப்பும், ஷாகிரா 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    மாபூஸ்கான் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஏரியில் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கழுவுவதற்காக நஸ்ரின், நசீமா, ஷாகிரா ஆகியோர் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

    பின்னர் ஆடுகளை ஏரியில் இறக்கி தண்ணீரில் குளிப்பாட்டி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நஸ்ரின், நசீமா, ஷாகிரா ஆகிய 3 பேரும் ஆழமான பகுதியில் இறங்கியதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட வனபாதுகாப்பாளர் சுஜாதா அறிவுரையின் பேரில் மாவட்ட வன அலுவலர் அருண் லால் உத்தரவுபடி வனச்சரகம் சீனிவாசன் தலைமையில் வனக்குழுவினர் இன்று காலை வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது கண்ணமடை காப்புகாடு, நாச்சியந்தல் பகுதியில் 2 மர்மநபர்கள் காட்டுபன்றி இறைச்சியை சுட்டு பொட்டலமாக விற்பனை செய்வது தெரியவந்தது.

    அவர்களை வனக்குழுவினர் மடக்கி பிடித்தனர். இதில் அவர்கள் பொலக்குடியை சேர்ந்த விஜயகாந்த் என்ற சிங்கம் (வயது34) நாச்சியந்தலை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்று தெரியவந்தது..

    அவர்களை வனக்குழுவினர் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 7கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பொலக்குடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் 3 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறை சார்பில் படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் மீனாம்பிகை வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப் பாளராக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 3 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு ரூ.25 கோடியே 57 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்துசமய நலத்துறையின் மூலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.20 ஆயிரத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் புத்தாடைகளும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ 16 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இரவு நேர ஊரடங்கு போன்ற சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில் திருவண்ணாமலையில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. 

    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் ஜனவரி 14 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பௌர்ணமி தினமான ஜனவரி 17 ஆம் தேதி காலை 04.14 மணி முதல் ஜனவரி 18 ஆம் தேதி அதிகாலை 06.00 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

    பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஆரணி பஸ் நிலையத்தில் நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர் பறித்து சென்றார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை அருகே  தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 46). நெசவு தொழிலாளி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும், 2 மகள், 1 மகன் உள்ளனர்.

    இவர் ஆரணியில் வேலை செய்து வருகிறார்.  வேலைக்கு சென்று விட்டு பாலாஜி சம்பள பணத்துடன் சொந்த கிராமத்திற்கு செல்வதற்கு ஆரணி பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

    அதனை பயன்படுத்திய கொள்ளையன் பாலாஜியின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரத்தை பிளேடால் அறுத்து திருடி சென்றான்.

    மேலும் பணத்தை பறிகொடுத்த தொழிலாளி சம்பளத்தை இழந்ததால் கதறி அழுதுள்ளார்.

    பின்னர் ஆரணி டவுன் போலீசில் பாலாஜி புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டு பணத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே கிராம மக்களுடன் பா.ஜ.க.வினர் பொங்கல் கொண்டாடினர்.
     திருவண்ணாமலை:

    தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகையை பா.ஜ.க.வினர் மேலிட உத்தரவின்பேரில் கிராமங்கள் தோறும் கொண்டாடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பா.ஜ.க. நிர்வாகிகள் கிராமங்கள்தோறும் சென்று கட்சி கொடியேற்றி பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். 

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பம்பாடி கிராமத்தில் நேற்று பா.ஜ.க.சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.  இதையொட்டி கிராமத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். 

    அதன் பின்னர் பெண்கள் கிராமத்தில் அழகிய வண்ண கோலமிட்டு புதுப்பானையில் சர்க்கரை பொங்கலிட்டு அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கர்ணன், வடக்கு ஒன்றிய தலைவர் எம். சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    இதில் மாவட்ட மகளிர் அணி பொருளாளர் வி. மாலதி கலந்து கொண்டு தனது சொந்த செலவில் 50 பெண்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். முன்னதாக கிளைத் தலைவர் ராமு வரவேற்றுப் பேசினார். முடிவில் தொழில் நுட்ப பிரிவு உறுப்பினர் ஏழுமலை நன்றி கூறினார்.

    ஆரணியில் 2 ஆசிரியை மற்றும் 18 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    ஆரணி:

    ஆரணி  டவுன்  கோட்டை வீதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றன. இதில் பள்ளி தலைமையாசிரியர் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    10&ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று முன்தினம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழு கொரோனா பரிசோனை மேற்கொண்டனர்.

    இதில் 2 ஆசிரியை மற்றும் 18 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. பாதிக்கபட்டவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபட்டது. இன்று முதல் பொங்கல் பண்டிகை விடுமுறையால் பள்ளி மூடப்பட்டது.
    செய்யாறு அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் வெடால் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணு (வயது 35), இவரது மனைவி சசிகலா (24), சென்னை டி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

    இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகனும் ஒரு வயதில் மோனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. 

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வெளியே சென்று வருவதாக குழந்தைகளுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

     இதுகுறித்து மண்ணு அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கும் வீடியோ வாட்ஸ்-அப்பில் பரவல் காரணமாக அ.தி.மு.க. பிரமுகர் கைது
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் பங்களா தெருவை சேர்ந்தவர் கோபி (வயது50). மாற்றுத்திறனாளி. இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் சந்தவாசல் ஊராட்சி முன்னாள் தலைவர், அதிமுக கிளை செயலாளர் ராஜாமணிக்கும் (68), நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. 

    இந்த நிலையில் ராஜாமணி அவரது மகன் பழனி (40) உறவினர் கிருஷ்ணன் மனைவி சாந்தி (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து கோபியை தாக்கியதாக கூறப்படுகிறது.
     
    தாக்குதல் நடந்தபோது அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோ பதிவு வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது.இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் போலீசில் மாற்றுத்திறனாளி கோபி புகார் செய்தார். 

    அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், மகேந்திரன் ஆகியோர், மாற்றுத்திறனாளிமீது தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ராஜாமணியைக் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

    அப்போது போலீஸ் நிலையத்தில் வெளிப்புற காம்பவுண்டு சுவர் அருகே போன் பேசுவதாக சென்ற ராஜாமணி, காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து, போலீஸ் குடியிருப்பு வழியாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓட்டம் பிடித்தார். 

    அதிர்ச்சியடைந்த சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பழனி, சாந்தி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல் விலை குறைக்கப்பட்டதால் சேத்துப்பட்டில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் தமிழகத்திலேயே நெல் வரத்து அதிகம் உள்ள 2வது இடம் ஆகும் இங்கு சேத்துப்பட்டு சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் மற்றும் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் விவசாயிகள் நெல் மணிலா பயிர் வகைகள் மிளகாய் போன்றவற்றை விற்பனைக்காக எடுத்து வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 265 லாட் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொன்னி நெல் எச்.எம்.டி. அம்மன். கோ 51 ஆர்.என்.ஆர். மற்றும் மணிலா பயிர் வகைகளை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொண்டுவந்து வைத்தனர்.

    பின்னர் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டது இதை பார்த்த விவசாயிகள் இதில் பொன்னி நெல் கடந்த வாரத்தில் விலை சென்றதை விட நேற்று பொன்னி நெல் 100 முதல் சுமார் 700 ரூபாய் வரை குறைவாக விலை சென்றதாககூறி ஆத்திரமடைந்தனர். விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் முன்பு வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

     இதனால் 3 மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் போளூர் திருவண்ணாமலை வேலூர் செஞ்சி ஆகிய நகரப் பகுதிகளுக்கு செல்லும் கார் வேன் பஸ் லாரி இரு சக்கர வாகனங்கள் உட்பட போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது இது குறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா. போளூர் டிஎஸ்பி அறிவழகன்.சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தினேஷ் குமாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு பின்னர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து பின்னர் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ். திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜ காளீஸ்வரன், ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயலாளர் தர்மராஜ் பின்னர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளைஅழைத்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் பின்னர் அதிகாரிகள் இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காது. நெல்லை தரம் பார்த்து உரியவிலையை வியாபாரிகள் போடுவார்கள் என்று கூறினார்கள். 

    பின்னர் விவசாயிகள் சமரசம் அடைந்து கலைந்து சென்றனர் மூன்று மணி நேரம் சாலை மறியல் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததால் நேற்று சேத்துப்பட்டு பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது போலீசார் குவிக்கப்பட்டனர்.
    கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடியில் ரூ.1 கோடி முறைகேடு நடைபெற்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி சரவணன் தலைமையில் விவசாயிகள்திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

    அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தண்டராம்பட்டு தாலுகாவில் ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் ஒரே நபருக்கு எண் மாற்றம் செய்தும், ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெறும் தகுதியை மீறி கடன் வழங்கி முறைகேடுகள் மற்றும் கையாடல் நடைபெற்றுள்ளது.

    மேலும் இந்த கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் ரூ.1கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.எனவே இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இச்சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணா மலை மண்டல இணைப் பதிவாளர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, இச்சங்கத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்று உள்ளதா? என்பது குறித்து விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்படும் என்றார்.
    திருவண்ணாமலையில் சந்தையை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சந்தைகளை இடமாற்றம் செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார். இதில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் செயல்பட்டு வந்த பூச்சந்தை காந்திநகர் பைபாஸ் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    மேலும் காய்கறி சந்தையை இடமாற்றம் செய்து நகராட்சி அலுவலகம் முன்பும், ஈசானிய மைதானத்திலும், செங்கம் சாலையிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    இந்த நிலையில் திருவண்ணாமலை கடலை கடை மூலை பகுதியில் உள்ள சாலையோரக் கடைகள் மற்றும் காய்கறி சந்தையை காலி செய்யும்படி அதிகாரிகள் தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதுபற்றி விவசாயிகள் கூறும்போது நகரத்தில் ஜவுளிக் கடைகள் நகைக் கடைகள் ஆகியவை கொரோனா கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. அதேபோல் சந்தைகளும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் அதே இடங்களில் செயல்பட விதிவிலக்கு அளிக்க வேண்டும். நகருக்கு வெளியில் வியாபாரம் செய்தால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வர மாட்டார்கள். 

    இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றனர். அதனை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தொடர்ந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    ×