என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    5-ஆம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேலாரணி மதுராதாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 55 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக காளியப்பன் (வயது 55) மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வருகின்றனர்.

    கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பள்ளி கடந்த 1-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். இதற்கிடையே பள்ளித் தலைமையாசிரியர் காளியப்பன் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக தகவல் பரவியது.

    இதையடுத்து போளூரில் இருந்து மேல் சோழங்குப்பம் செல்லும் சாலையில் திடீரென 40-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிலர் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    அப்போது போளூர் டி.எஸ்.பி. குணசேகரன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பள்ளி தலைமையாசிரியர் 5-ஆம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் தொந்தரவு செய்வதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

    உடனே டி.எஸ்.பி. இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரால் இனி எந்த பிரச்சனையும் வராது.

    இதை தெரியப்படுத்தினால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்காமல் சாலை மறியல் போராட்டம் நடத்துவது தீர்வாகாது. முதலில் மனு கொடுங்கள்.

    போராட்டத்தில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி.குணசேகரன், போளூர் கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதில் தலைமையாசிரியர் மீது குற்றம் இருப்பது தெரியவந்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து தலைமையாசிரியர் காளியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

    இந்த சம்பவம் கலசப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 1214 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ளநகர்புற உள்ளாட்சி தேர்தலில் 1214 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 347 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. நடைபெற உள்ள தேர்தலையொட்டி கடந்த 28-&ந் தேதி முதல் 4-&ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் 1595 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 5-ந் தேதி வேட்பு மனுக்கள் பா¤சீலனை நடைபெற்றது. இதில் 33 மனுக்கள் நிராகா¤க்கப்பட்டு மீதமுள்ள 1562 ஏற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 195 வேட்பு மனுக்களில் 65 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 130 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 314 வேட்பு மனுக்களில் 43 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 159  வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 133 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வந்தவாசி நகராட்சியில் 24 வார்டு உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 147  வேட்பு மனுக்களில் 30 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 117 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    செங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 110 வேட்பு மனுக்களில் 23 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 87 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 95 வேட்பு மனுக்களில் 25 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 

    70 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேசூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 57 வேட்பு மனுக்களில் 14 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 43 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். களம்பூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 67 வேட்பு மனுக்களில் 12 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 55 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    கண்ணமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 71 வேட்பு மனுக்களில் 29 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 80 வேட்பு மனுக்களில் 16 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 

    64 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெரணமல்லூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 48 வேட்பு மனுக்களில் 4 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போளூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 87 வேட்பு மனுக்களில் 31 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 55 பேர் போட்டியிடுகின்றனர்.

    புதுப்பாளையம் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 75 வேட்பு மனுக்களில் 23 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 52 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்டவலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 57 வேட்பு மனுக்களில் 6 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 

    51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆக மொத்தம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கப்பட்டு இருந்த 1562 வேட்பு மனுக்களில் 347 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. அதன்படி 1214 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியிட களம் கண்டு உள்ளனர். 

    தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

    தேர்தல் நடைபெற குறுகிய நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
    போளூர் அருகே விவசாயிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    போளூர்:

    போளூர் துணை தாசில்தார் சிவலிங்கம் தலைமையில் ஏட்டு நிர்மல்குமார் பெண் போலீஸ் சங்கீதா தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது களம்பூர் இறப்ப குணம் இடையே உள்ள கூட்ரோட்டில் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த படவேடு மங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார்(45) விவசாயி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்தை வைத்திருந்தார்.

    குடும்பத் தேவைக்காக பிறரிடம் கடன் வாங்கி பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் கூறினார். ஆனால் பறக்கும் படையினர் அவர் கூறிய காரணத்தை  ஏற்கவில்லை.

    இதையடுத்து ரூ.2 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து களம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி லோகநாதனிடம் ஒப்படைத்தனர்.
    கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் திடீரென வாபஸ் வாங்கியதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 -வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. 

    கடந்த 28-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை 15 - வார்டுகளுக்கும் 80 பேர் கட்சி சார்பாகவும், சுயேட்சையாகாவும் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். 5-ந்தேதி நடந்த பரிசீலினை போது 80 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

    மனுக்கள் திரும்ப பெற கடைசிநாளான நேற்று (7-ந்தேதி) அதிமுக - 1, பாமக - 3, சுயேட்சை - 9, மாற்று வேட்பாளர்கள். 3. என 16 நபர்கள் மனுக்களை திரும்ப பெற்றனர். 

    இறுதி கட்ட வேட்பாளர்களாக திமுக & 13, காங்கிரஸ் - 1, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 1, அதிமுக - 14, பா.ஜ.க - 5, பா.ம.க.-7, நாம் தமிழர் கட்சி - 15, சுயேட்சை - 8 - என 64 வேட்பாளர்களின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்து இறுதிகட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான ஜெயபிரகாஷ் வெளியிட்டார். 

    உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ஏழுமலை உடனிருந்தனர். 15 வார்டுகளிலும் மனுதாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளர்களில் 2-வது வார்டுக்கு மனுதாக்கல் செய்திருந்த குமாரி, வேட்புமனுவை திரும்ப பெற்றது அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர் களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. 

    6-வார்டு பகுதியில் காங்கிரஸ்- பா.ஜ.க நேரடியாக போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியினர் 15-வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர்.
    கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவில் தரிசனம் செய்ய வந்த மூதாட்டியின் செயின் பறிக்கப்பட்டததால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமியை முன்னிட்டு நேற்று ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சந்திரசேகரர் மற்றும் அம்பாள் பல்லக்கில் கலசபாக்கம் செய்யாற்றில் எழுந்தருளினர். அப்போது கலசபாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமா முடீஸ்வரர் சுவாமிகளும் ஆற்றில் எழுந்தருளினார்.

    ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்ட பந்தலில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் செய்யாற்றில் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சாமி தரிசனம் வந்த 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணிடம், மர்ம நபர் 2 பவுன் செயினை பறித்து சென்று விட்டார். இதனால் அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுதார். 

    அவரை உடன் வந்த பெண் சமாதானம் செய்து அழைத்து சென்றார். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவிழாவை முன்னிட்டு போலீசார் பக்தர்கள் தங்கள் நகை மற்றும் உடமைகளை பாதுகாத்துக் கொள்ளும்படி ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர். 

    இருந்தபோதிலும் மர்ம நபர் பெண்ணிடம் நகை பறித்து சென்றது அங்கு வந்திருந்த பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பெண்ணிடம் நகை பறிப்பு நடைபெற்றபோது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அந்த நிலையிலும் நகை பறிக்க பட்டது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் திருவிழா நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தும்போது எளிதாக நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன.இதற்காகவே வெளியூர்களிலிருந்து திருடர்கள் வருகை தருகின்றனர் என்று கூறப்படுகிறது. 

    எனவே திருவிழாக் காலங்களில் நகை அணிந்து செல்லும் பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று அங்கு வந்திருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதுபற்றி கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் கேட்டபோது, நகை பறிப்பு சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால் அதுபற்றி இன்னும் சம்பந்தப்பட்ட பெண் புகார் செய்யவில்லை. 

    அவர் புகார் செய்ததும் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றுத் திருவிழா நடைபெற்ற போதும் 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    செய்யாறு அருகே மது விற்ற 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    செய்யாறு:

    செய்யாறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    செய்யாறு டி.எஸ்.பி செந்தில் உத்தரவின் பேரில் செய்யாறு, மோரணம், அனக்காவூர், தூசி, பிரம்மதேசம், பெரணமல்லூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அந்த பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. 

    அவர்களை மடக்கி பிடித்து மது விற்பனை செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் வைத்திருந்த 74 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    100-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளால் திருவண்ணாமலை களை கட்டியது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் திருவண்ணாமலையில் திருமணத்தை நடத்தி செல்ல விரும்புகின்றனர். 

    திருமணத்துக்கு  வருபவர்களும்  ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து செல்கின்றனர். 

    கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அனைத்து திருமண மண்டபங்களிலும் நடைபெற்ற வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் கூட்டம் காரணமாக திருவண்ணாமலை  நகரம் களை கட்டி காணப்பட்டது.இதையொட்டி மளிகை கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.

    மேலும் ஒலி ஒளி அமைப்பாளர்கள், நாதஸ்வர கலைஞர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் நல்ல வருமானம் பெற்றனர்.

    தற்போது நகரங்களில் திருமணம் செய்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களும் நகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இங்கு அனைத்து வசதிகளுடன் திருமண மண்டபங்கள் கிடைப்பதால் அவர்களுக்கு நகரங்கள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. 

    செலவு அதிகரித்த போதிலும் திருமணத்தில் இதெல்லாம் சகஜம் என்ற மனநிலையில் திருமணத்தை நடத்தி செல்கின்றனர். 

    ஓரளவு வசதி படைத்தவர்கள் ஆடம் பரமான முறையில்  திருமணத்தை  நடத்து கின்றனர். அவர்கள் மாப்பிள்ளை ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். 

    மேலும் பல திருமணங்கள் நடைபெறுவதால் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் திருமண கோஷ்டியினர் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.
    சேத்துப்பட்டு அருகே பாறைக்கு அடியில் பெண் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஜெபட்டியில் பூம்பாறை உள்ளது.

    அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த வழியாக சென்ற போது பாறையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அரசம்பட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

     சப்&இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா-? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் வழங்கி நாளை (8-ந்தேதி) புறப்பட்டு உற்சவர் சந்திரசேகரர் மற்றும் அம்பாள் மீண்டும் கோவிலுக்கு திரும்புவார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று.

    இந்த நாளில்தான் சூரியன் 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். இந்த புனித நாளின் சிறப்பை பக்தர்களுக்கு உணர்த்த தீர்த்தவாரி நடைபெறும்.

    அதன்படி உற்சவர் சந்திரசேகரர் அம்பாளுடன் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு கலசபாக்கம் செய்யாற்றுக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக தனகோட்டிபுரம் கோவிலுக்கு சொந்தமான வயலுக்கு சென்று அங்குள்ள விளைநிலங்களை பார்வையிட்டார். அப்போது அங்கு அறுவடை செய்யப்பட்ட நெல்லில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

    இதையொட்டி சுவாமி- அம்பாள் செல்லும் வழிகளில் பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். தொடர்ந்து மேல செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருமாமுடீஸ்வரர், அம்பாளுடன் பங்கேற்றார். இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் வழங்கி நாளை (8-ந்தேதி) புறப்பட்டு உற்சவர் சந்திரசேகரர் மற்றும் அம்பாள் மீண்டும் கோவிலுக்கு திரும்புவார்.
    ஆரணியில் நிறுத்தி வைக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் மனு 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர மன்ற 1-வது வார்டில்  சுயேட்சை வேட்பாளர் தங்கராஜ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டது.

    காலையில் சுயேட்சை வேட்பாளரின் மனுவில் ஒருசில விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்யவில்லை என கூறி மனுவை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்தார். அப்போது வேட்பாளரின் கேள்விக்கு அதிகாரிகள் சரிவர பதிலக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்செல்வி வாகனத்தில் ஏறி வெளியே செல்ல முயன்றார். அப்போது சுயேட்சை வேட்பாளர் அவரது ஆதரவாளருடன் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனத்தை மறித்து நகராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

    ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் வேட்பு மனு ஏற்கும்  வரையில் போராட்டத்தை கைவிட முடியாது என்று சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆரணி நகர மன்ற 1-வது வார்டு சுயேட்சை வேட்பாளரின் மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். 

    இதன் பின்னர் மறியலை கைவிட்டனர். 8மணி நேரம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறி மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.

    ஆரணி நகராட்சியில் 198 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்த நிலையில் 2 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 196 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.
    போளூர் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்துகொண்டார்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குருவி மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது50) கூலித்தொழிலாளி. 

    குடும்ப தகராறில் சேட்டு கடந்த 1-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சேட்டு மகன் ராஜ்குமார் (25) பட்டதாரியான இவர் தந்தை மீது அதிகப் பாசம் கொண்டவர். தந்தை திடீரென்று இறந்து விடுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததால் எதுவும் சாப்பிடாமல் அப்படியே இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் தந்தை தற்கொலை செய்து கொண்ட அதே பாணியில் எலி மருந்து தின்று மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    தந்தையும் மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து குருவிமலை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    இதற்கிடையே ராஜ்குமார் தற்கொலை குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தில் டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம்  அடுத்த படவேட்டில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. 

    விழாவை முன்னிட்டு கடந்த 2-ந்தேதி தொடங்கி இன்று காலை வரை 6 காலயாக பூஜைகள் செய்யப்பட்டது. இன்று கும்பாபிஷேகத்தை யொட்டி அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதைத் தொடர்ந்து காலை 8.15 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அப்போது சாமியை வணங்கி தரிசித்தனர்.

    படவேடு கோவில் தர்மேஸ்வர சிவாச்சாரியார், ஞானஸ்கந்த சிவாச்சாரியார், கணேச சிவாச்சாரியார் மற்றும் குழுவினர்  கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 

    அங்கு குவிந்திருந்த பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.  கோவில் வளாகத்தில் சுமார் 3000 பக்தர்கள்  மாடவீதிகளில் காத்திருந்தது சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் சரவணன் எம். எல். ஏ., டாக்டர் கம்பன், போளூர் ஒன்றியகுழு¢ தலைவர் சாந்திபெருமாள், திருவண்ணாமலை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, படவேடு  ஊராட்சி  மன்ற  தலைவர் சீனிவாசன் உள்பட பக்தர்கள் பங்கேற்றனர்.
     
    முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.வி. சேகர், கோவில் துணை ஆணையர் ராமு (செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு), மேலாளர் மகாதேவன் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    ×