திருவண்ணாமலை:
மாசி மாதம் அமாவாசைக்கு முன் வரக்கூடிய திரயோதசி மற்றும் சதுர்த்தி திதிகள் சந்திக்கும் நாளில் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் ?என்ற போட்டி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரம்மா சிவனின் முடியை காண்பதற்கும், விஷ்ணு அவரது பாதத்தை காண்பதற்கும் சென்றனர். ஆனால் இருவரும் தங்களது முயற்சியில் தோல்வி அடைந்தனர்.அவர்களால் சிவனின் அடியையும் முடியையும் காண இயலவில்லை.
பின்னர் சிவன் இருவரின் அகந்தையையும் அழித்து லிங்கோத்பவராகவும், ஜோதி வடிவமாகவும் காட்சி அளித்தார். இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா இன்று இரவு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று காலை அருணாச்சலேஸ்வரர் &உண்ணாமலையம்மன் அம்மன் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதிகாலை 5 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. தொடர்ந்து மாலை 2 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. முதல் கால பூஜை இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் கால யாகபூஜை 11.30 மணிக்கு நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் மூலவர் சன்னதி பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.பின்னர் அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், 4.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடக்கிறது.
மேலும் கோவில் வளாகத்தில் பன்னிரு திருமுறை இசை நிகழ்ச்சி, நாதஸ்வர இசை நிகழ்ச்சி, பரதநாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது, லிங்கோத்பவரை தரிசனம் செய்ய கட்டளைதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் லட்ச தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று சிவராத்திரி தினம் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலை முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று இரவு அஷ்டலிங்க சன்னதிகளிலும், அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றது. அதனை காண பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் இன்று களைகட்டியுள்ளது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.