என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    கலெக்டரின் உத்தரவின் பேரில் ஊராட்சி கணக்கு எண் 1 மற்றும் 2 முதல் 9 வரை உள்ள அனைத்து ஊராட்சிகளின் கணக்குகளை முடக்கம் செய்து மேலும் அவருக்கு அளித்த அதிகாரம் பறிக்கப்பட்டது.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரைபூண்டி ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா என்பவர் பதவி வகித்து வந்தார்.

    இவர் ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கரைபூண்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 2வது வார்டு வேலு, 8-வது வார்டு பிரபாகரன், ஆகியோர் கலெக்டர் முருகேசனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

    இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில். கூடுதல் கலெக்டர் பிரதாப், ஊராட்சிகளின் செயலர் அறவாழி, உதவி இயக்குனர் சுரேஷ், (ஊராட்சி) சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு கரைபூண்டி ஊராட்சியில் நிதி குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    இதில் ஊராட்சி கணக்கு எண் 1 மற்றும் 2 முதல் 9 வரை உள்ள கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. முறைகேடு குறித்து கரைபூண்டி ஊராட்சி மன்ற தலைவர் இந்திராவிடம், விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு முறையான விளக்கம் அளிக்காததால் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் ஊராட்சி கணக்கு எண் 1 மற்றும் 2 முதல் 9 வரை உள்ள அனைத்து ஊராட்சிகளின் கணக்குகளை முடக்கம் செய்து மேலும் அவருக்கு அளித்த அதிகாரம் பறிக்கப்பட்டது.

    மேலும் கரைபூண்டி ஊராட்சி மன்றத்திற்கு தனி அலுவலராக சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் என்பவரை நியமித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    திருவண்ணாமலை அருகே உலக நன்மைக்காக 1000 தம்பதிகள் பங்கேற்ற சிறப்பு யாகம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் பழமையான ஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காக 1000 தம்பதிகள் பங்கேற்ற புத்திரகாமேஷ்டி மகா யாகம் நடைபெற்றது.

    முன்னதாக கடந்த15-ம் தேதி மங்கல இசை நிகழ்ச்சி மற்றும் விக்னேஸ்வர பூஜை, பாசுபதாதிர யாகம், நாந்திசிராத்தம், வேத பாராயணம், 108 கன்யா பூஜை. 108 வடுக பூஜை. தம்பதிகள் சங்கல்பம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 

    சித்திரா பவுர்ணமி அன்று சிவனடியார் பூஜை, சப்தரிஷி பூஜை, தம்பதி பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, மஹா பூர்ணாஹுதி, அகஸ்திய மகா யாகம், புத்திர காமேஷ்டி யாகம் ஆகியவை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாள், அகத்தியர் லோபாமுத்ரா தேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் 1008 தம்பதிகள், 1008 சுமங்கலிகள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரை ஊற்றி பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த யாகத்திற்காக ராமர் பிறந்த இடமான அயோத்தியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு இருந்தது. 

    இந்த யாகத்தில் பங்கேற்ற தம்பதிகள் 2 நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் தங்கி இருந்து 3 நாட்களுக்கு உப்பில்லாத உணவை உட்கொண்டனர்.

    இந்த யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று யாக ஏற்பாடுகளை செய்திருந்த அகத்தியர் அன்புசெழியன் தெரிவித்தார்.
    ஆரணி அருகே கிணற்றில் நிர்வாண நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாங்குளம் நெடுஞ்சாலை அருகில் பாழடைந்த கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கதக்க நிர்வாண நிலையில் வாலிபர் சடலம் இருப்பதாக ஆரணி தீயணைப்பு துறை மற்றும் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளன.

    ஆரணி தீயணைப்பு துறையினர் சம்பவடத்திற்கு சென்று பாழடைந்த கிணற்றில் நிர்வாண நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு எடுத்தனர்.

    இதனையடுத்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாழடைந்த கிணற்றில் சுமார் 40வயது மதிக்கதக்க வாலிபர் யார் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொலை செய்யப்-பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெடுஞ்சாலை சாலையில் உள்ள பாடைந்த கிணற்றில் வாலிபர் நிர்வாண நிலையில் உள்ள சடலம் இருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
    கிரிவலப்பாதையில் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 16, 17 ஆகிய நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்குப் பின்னர் பக்தர்களின் வருகை குறைந்தது. அதன்பின் வழக்கம் போல் பக்தர்கள் சென்று உடனடியாக சாமி தரிசனம் செய்து சென்றனர். 

    சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் பல டன் குப்பைகள் குவிந்தது. அதனை அகற்றும் பணிகள் நேற்று காலை தொடங்கி நடந்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை கிரிவலப் பாதையில் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்-பட்டது. 

    இப்பணியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் உள்பட பலர் உடனிருந்தனர். 

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்ட சிறப்பான ஏற்பாடுகளால் கிரிவலத்துக்கு வந்தவர்-களுக்கு சிறு பாதிப்பும் ஏற்படாமல் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. பக்தர்களுக்கு குடி நீர், மோர் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    கிரிவலம் வந்த பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக கிரிவலப்பாதையில் 5 இடங்களில் உயர் மருத்துவ சிகிச்சையுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் எந்த ஒரு சிறு அசம்பாவிதம் ஏற்படாமல் பக்தர்கள் அனைவரும் கிரிவலம் முடிந்து பாதுகாப்பாக ஊர் திரும்பி உள்ளனர் என்று தெரிவித்தார்.

    திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக அனைத்து ஊராட்சி பகுதி துப்புரவு பணியாளர்கள் நகரப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததால் பல்வேறு கிராம பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. அதனையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    கிராமப்பகுதிகளில் வாரம் ஒரு முறை துப்புரவு பணி நடப்பது கூட அரிதாக உள்ளதாக கூறுகின்றனர். மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில் கிராமப்-பகுதிகளில் துப்புரவு பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தூசி அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை கோவிலில் வீசி சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அனுமந்த பேட்டை பகுதியில் தூசி போலீஸ் நிலையம் உள்ளது. இதன் எதிரில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. 

    அந்தக் கோவிலில் இன்று அதிகாலை சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அருகே சென்று பார்த்துள்ளனர். அங்கு ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. 

    இதனைக்  கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை பிறந்து 10 நாட்களே இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே காளியம்மன் கோவிலில் 2 கிலோ கற்பூரம் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூரணி புஷ்கரணி காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழ்புத்தாண்டு மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 18&வது ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    மதிய பூஜையின்போது கோவில் பூசாரி குணசேகரன் தனது கையில் 2 கிலோ கட்டி கற்புரத்தை ஏற்றி வைத்து அம்மனுக்கு பூஜை செய்தார். பின்னர் திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்களுக்கு அம்மனுக்கு படையலிட்ட சோற்றை பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது சேலை முந்தானையில் படையல் சோற்றை வாங்கி சென்று சாப்பிட்டனர்.

    இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் படையல் சாதம் சாப்பிட்ட பெண்களுக்கு குழந்தை வரம் கிடைப்பதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.

    இந்த விழாவின் போது காளியம்மன் உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் உலா வந்தார்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இது பற்றி கிராம மக்கள் கூறும்போது, இந்த காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இந்த கோவில் பூசாரி குணசேகரன் முறைப்படி பூஜை செய்து வருவதால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும் அம்மன் அருள்வாக்கு கூறுகிறார்.

    அவை மிகவும் சரியாக உள்ளதால்அருள்வாக்கு கேட்க வெளியூர் பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் கோவில் படைப்பு சாதம் சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கிறது என்றனர். 

    இக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு வருகிற 30-ந்தேதி இரவு சொரகொளத்தூர் பாஞ்சாலி நாடக மன்றத்தின் தெருக்கூத்து நிகழ்ச்சி நடக்கிறது.

    மேலும் அன்று மிளகாய் யாகம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    சேத்துப்பட்டு, செங்கத்தில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் காணொளி காட்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியாடினார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சேத்துப்பட்டு மின்சாரவாரிய கோட்டம் சார்பில் ஓராண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் தமிழக முதலமைச்சர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. 

    நிகழ்ச்சிக்கு சேத்துப்பட்டு மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரபாபு தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் பக்தவத்சலம், ரமேஷ்பாபு, எழிலரசி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப் பாளராக சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதாமுருகன், கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சேத்துப்பட்டு 851 மின் இணைப்பு பெற்ற விவசாய பயனாளிகள் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் கலந்துரை யாடினார்கள். இதில் சேத்துப்பட்டு ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், ஒன்றிய திமுக செயலாளர் எழில்மாறன், சேத்துப்பட்டு பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், உதவி மின் பொறியாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கம் அடுத்துள்ள கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சியில் முதல்வரின் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்கள் உடனான கலந்துரையாடல் விழா தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் விவசாய மின் இணைப்பு பெற்ற பயனாளிகளுடன் மின்திரை வாயிலாக முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். 

    இதனைத்தொடர்ந்து மின் இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கு மின் இணைப்புக்கான பயனாளர் அட்டைகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் வழங்கினார். புதுப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர்கள் மூர்த்தி (புதுப்பாளையம்), சண்முகம் (காஞ்சி) உள்பட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
    ஆரணி அருகே மாயமான மூதாட்டி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    ஆரணி:

    ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 70). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.

    மேரியின் மகன் சகாயநாதன் உறவினர் வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் இவரைத் தேடி உள்ளார். மேரி கிடைக்காததால் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் மூதாட்டி ஒருவர் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது மாயமான மேரி என தெரியவந்தது. 

    உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்-காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேரி ஏரி க்கு எதற்காக சென்றார் தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் 20 லட்சம் பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம் சென்று தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து கடந்த 2 நாட்களாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.

    கடந்த 15-ந் தேதி முதல் பக்தர்கள் வருகை அதிகரித்தது. நகருக்குள் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது.

    நேற்று பகலில் கோடை வெயில் வறுத்தெடுத்ததால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். செருப்பு அணியாமல் பலர் சென்றதால் வெப்பத்தை தாங்க முடியாமல் ஓடி ஓடிச் சென்றனர். 

    இதுபற்றி அறிந்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக தண்ணீர் வாகனங்களை வரவழைத்து கிரிவலப்பாதையில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாலை 2 மணிக்கு பின்னர்தான் தண்ணீர் விடப்பட்டது. தண்ணீர் விட்டபோதிலும் சிறிது நேரத்திலேயே அவர்கள் உலர்ந்து விட்டது.

    பக்தர்கள் நிழல் குடை மற்றும் மரங்களின் நிழலில் இருந்து சற்று இளைப்பாற்றினர். மாலை 4 மணிக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால் நகர எல்லைப் பகுதியிலிருந்து கோவில் அருகில் செல்லும் வகையில் இயக்கப்பட்ட இலவசப் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    அதன்பின்னர் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இறக்கிவிடப்பட்டு அங்கிருந்து நடந்தே சென்றனர். சிலர் ஆட்டோக் களில் சென்றனர். ஆட்டோக் களும் செல்ல தடை ஏற்பட்டதால் அவைகளும் சரிவர இயங்கவில்லை.

    இரவு 12.30 மணி முதல் 1.30மணி வரை திடீரென பலத்த மழை பெய்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.சில பக்தர்கள் கைக் குழந்தை களுடன் வந்திருந்தனர். 

    மேலும் வயதானவர்களும் அவதிப்பட்டனர். அதன் பின்னரும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.இவையெல்லாம் கடவுள் சோதனை என்று பக்தர்கள் தாங்கிக்கொண்டு கிரிவலத்தை நிறைவு செய்து தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். 

    நேற்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் திருவண்ணாமலை வழியாகச் செல்லும் 2 ரெயில்கள் வரவில்லை என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
    திருவண்ணாமலையில் கல்குவாரியில் நிர்வாண நிலையில் கிடந்த ஆண் பிணம் மீட்கப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அடி அண்ணாமலை பகுதியில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. 

    அங்குள்ள ஒரு கல்குவாரி குட்டையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பது இன்று காலை தெரியவந்தது.நிர்வாண நிலையில் கிடந்த அந்த ஆண் உடலை பார்த்த சிலர் இதுபற்றி திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான நபர் சில நாட்களுக்கு முன்பே இறந்து இருக்கலாம் என்று கூறப்படு கிறது.அவரது உடல் ஊதிய நிலையில் காணப் படுகிறது. அவர் குளிக்க சென்ற சாமியாராக இருக்கலாம் என்று தெரிகிறது.

    அதன் அடிப்படை யில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இதில் குற்ற பின்னணி எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    கல்குவாரியில் ஆண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் அடி அண்ணாமலை பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நான் அமைச்சர் ஆனதற்கு ஆந்திராவில் எப்படி வரவேற்பு உள்ளதோ அதேபோல் தமிழ்நாட்டிலும் வரவேற்கின்றனர். அம்மா வீடு (ஆந்திரா), மாமியார் வீடு (தமிழ்நாடு) என 2 மாநில மக்களின் ஆசிர்வாதமும் எனக்கு உள்ளது.

    திருவண்ணாமலை:

    தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமான நடிகை ரோஜா அப்படத்தின் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ரோஜா ஆந்திராவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரம், இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அமைச்சர் ரோஜா, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார். விநாயகர், அண்ணாமலையார் அம்மன் சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார். பிறகு நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா காரணமாக 2 ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாதது வருத்தமாக இருந்தது. அருணாசலேஸ் வரரை பார்த்து பூஜை செய்து அவரது ஆசீர்வாதத்தை பெற்று செல்கிறேன். அதிரடிப்படை படம் எடுத்தபோது மிகவும் கஷ்டத்தில் இருந்தேன். படம் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.பணப் பிரச்சனை ஏற்பட்டது. 2002 வரை கஷ்டப்பட்டு கடன்களை அடைத்தேன்.

    செம்பருத்தி படத்தில் காதல் செய்தேன். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. ஆனால் திருமணம் 2002 -இல்தான் நடந்தது. எனது மாமனார் எனது திருமணம் விரைவில் நடக்கவும், கஷ்டங்கள் தீரவும் திருவண்ணாமலைக்கு வந்து அருணாசலேஸ்வரரை வேண்டிக்கொண்டு 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்றார். அண்ணாமலையாரின் ஆசியால் கஷ்டமெல்லாம் தீர்ந்து திருமணமும் நடந்து விட்டது.

    தெலுங்கு தேசம் கட்சியில் 2 முறை சட்டமன்ற தேர்தலில் நின்று தோற்றுவிட்டேன். எனது கட்சிக்குள்ளே என்னை வளர விடாமல் தோற்கடித்து விட்டனர். மக்களுக்கு சேவை செய்ய என்னை ஜெயிக்க வைக்குமாறு அருணாசலேஸ்வரிடத்தில் வேண்டினேன். கிரிவலமும் சென்றேன். இதன் காரணமாக சட்டமன்றத் தேர்தலில் 3-வது முறை நின்ற போது வெற்றி பெற்றேன். இதற்காக 3 முறை கிரிவலம் செல்ல வேண்டும். நானும் 3 முறை கிரிவலம் சென்று விட்டேன். அமைச்சராக வரவேண்டுமென அருணாசலேஸ்வரரிடம் வேண்டினேன். எனதுஆசை நிறைவேறியது. இதற்காக நன்றிக்கடன் செலுத்த வந்திருக்கிறேன்.

    நான் அமைச்சர் ஆனதற்கு ஆந்திராவில் எப்படி வரவேற்பு உள்ளதோ அதேபோல் தமிழ்நாட்டிலும் வரவேற்கின்றனர். அம்மா வீடு (ஆந்திரா), மாமியார் வீடு (தமிழ்நாடு) என 2 மாநில மக்களின் ஆசிர்வாதமும் எனக்கு உள்ளது. தங்கைக்கு உரிய மரியாதையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்திருக்கிறார்.அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் அளவுக்கு என்னுடைய பணிகள் இருக்கும்.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நன்றாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார். சர்வதேச அளவில் பணி புரிய வேண்டுமென்றால் ஆங்கிலம் மற்றும் இந்தி அவசியம். அனைத்து மாணவர்களுக்கும் தாய் மொழியோடு சேர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியும் முக்கியம். ஆனால் இந்தியை படிக்க வேண்டுமென கட்டாயப்படுத்த கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செங்கம் அருகே சாலையோர பள்ளத்தில் புகுந்து அரசு பஸ் விபத்துக்குள்ளானது.
    செங்கம்:

    செங்கம் அடுத்துள்ள விண்ணவனூர் அருகே அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் கட்டுப்பட்டை இழந்த பஸ்  நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். 

    இது குறித்த தகவல் அறிந்த பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த வர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×