search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கோவிலில் வழிபட்ட நடிகை ரோஜாவுக்கு பிரசாதம் வழங்கிய காட்சி
    X
    திருவண்ணாமலை கோவிலில் வழிபட்ட நடிகை ரோஜாவுக்கு பிரசாதம் வழங்கிய காட்சி

    மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார்- நடிகை ரோஜா பேட்டி

    நான் அமைச்சர் ஆனதற்கு ஆந்திராவில் எப்படி வரவேற்பு உள்ளதோ அதேபோல் தமிழ்நாட்டிலும் வரவேற்கின்றனர். அம்மா வீடு (ஆந்திரா), மாமியார் வீடு (தமிழ்நாடு) என 2 மாநில மக்களின் ஆசிர்வாதமும் எனக்கு உள்ளது.

    திருவண்ணாமலை:

    தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமான நடிகை ரோஜா அப்படத்தின் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ரோஜா ஆந்திராவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரம், இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அமைச்சர் ரோஜா, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார். விநாயகர், அண்ணாமலையார் அம்மன் சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார். பிறகு நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா காரணமாக 2 ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாதது வருத்தமாக இருந்தது. அருணாசலேஸ் வரரை பார்த்து பூஜை செய்து அவரது ஆசீர்வாதத்தை பெற்று செல்கிறேன். அதிரடிப்படை படம் எடுத்தபோது மிகவும் கஷ்டத்தில் இருந்தேன். படம் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.பணப் பிரச்சனை ஏற்பட்டது. 2002 வரை கஷ்டப்பட்டு கடன்களை அடைத்தேன்.

    செம்பருத்தி படத்தில் காதல் செய்தேன். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. ஆனால் திருமணம் 2002 -இல்தான் நடந்தது. எனது மாமனார் எனது திருமணம் விரைவில் நடக்கவும், கஷ்டங்கள் தீரவும் திருவண்ணாமலைக்கு வந்து அருணாசலேஸ்வரரை வேண்டிக்கொண்டு 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்றார். அண்ணாமலையாரின் ஆசியால் கஷ்டமெல்லாம் தீர்ந்து திருமணமும் நடந்து விட்டது.

    தெலுங்கு தேசம் கட்சியில் 2 முறை சட்டமன்ற தேர்தலில் நின்று தோற்றுவிட்டேன். எனது கட்சிக்குள்ளே என்னை வளர விடாமல் தோற்கடித்து விட்டனர். மக்களுக்கு சேவை செய்ய என்னை ஜெயிக்க வைக்குமாறு அருணாசலேஸ்வரிடத்தில் வேண்டினேன். கிரிவலமும் சென்றேன். இதன் காரணமாக சட்டமன்றத் தேர்தலில் 3-வது முறை நின்ற போது வெற்றி பெற்றேன். இதற்காக 3 முறை கிரிவலம் செல்ல வேண்டும். நானும் 3 முறை கிரிவலம் சென்று விட்டேன். அமைச்சராக வரவேண்டுமென அருணாசலேஸ்வரரிடம் வேண்டினேன். எனதுஆசை நிறைவேறியது. இதற்காக நன்றிக்கடன் செலுத்த வந்திருக்கிறேன்.

    நான் அமைச்சர் ஆனதற்கு ஆந்திராவில் எப்படி வரவேற்பு உள்ளதோ அதேபோல் தமிழ்நாட்டிலும் வரவேற்கின்றனர். அம்மா வீடு (ஆந்திரா), மாமியார் வீடு (தமிழ்நாடு) என 2 மாநில மக்களின் ஆசிர்வாதமும் எனக்கு உள்ளது. தங்கைக்கு உரிய மரியாதையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்திருக்கிறார்.அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் அளவுக்கு என்னுடைய பணிகள் இருக்கும்.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நன்றாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார். சர்வதேச அளவில் பணி புரிய வேண்டுமென்றால் ஆங்கிலம் மற்றும் இந்தி அவசியம். அனைத்து மாணவர்களுக்கும் தாய் மொழியோடு சேர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியும் முக்கியம். ஆனால் இந்தியை படிக்க வேண்டுமென கட்டாயப்படுத்த கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×